ஐசிசியின் 2022 T20 உலகக் கிண்ண ஐரோப்பிய வலய நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ள இத்தாலி கிரிக்கெட் அணியில் மூன்று இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2022 T20 உலகக் கிண்ணத்துக்கான ஐரோப்பிய வலய நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகள் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஸ்பெயினில் நடைபெறவுள்ளது.
இதில் இத்தாலி அணி ஜேர்மனி, டென்மார்க் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளன.
இத்தாலி அணியில் இணையும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்
இந்த நிலையில், இத்தாலி கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள 14 பேர் கொண்ட இத்தாலி குழாமில் மதுப பெர்னாண்டோ, ஜோய் பெரேரா மற்றும் தினிந்து மாரகே ஆகிய மூன்று இலங்கை வம்சாவளி வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதில் 30 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான மதுப பெர்னாண்டோ, புத்தளம் மாவட்டம் மாரவிலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுழல் பந்துவீச்சாளரான அவர் இதுவரை இத்தாலி கிரிக்கெட் அணிக்காக 6 T20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
இதனிடையே, வலதுகை துடுப்பாட்ட வீரரான ஜோய் பெரேரா, இத்தாலி கிரிக்கெட் அணிக்காக 16 T20 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். 34 வயது சகலதுறை வீரரான இவர், 2010இல் இத்தாலி அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டு 2013 மற்றும் 2015இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், 2019இல் நடைபெற்ற ஐசிசியின் உலகக் கிண்ண சேலஞ்ச் கிண்ண B பிரிவு போட்டியில் இத்தாலி அணியின் தலைவராகவும் இவர் செயல்பட்டிருந்தார்.
LPL தொடர் நடைபெறவுள்ள திகதிகள் அறிவிப்பு ; வீரர்கள் பதிவு ஆரம்பம்!
இத்தாலி அணியில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு இலங்கை வீரர் தான் தினிந்து மாரகே, 39 வயதான இவர் இத்தாலி கிரிக்கெட் அணிக்காக 6 T20 போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். முன்னதாக இவர் இலங்கையின் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் பாணந்துறை விளையாட்டுக் கழகம், புளூம்பீல்ட் விளையாட்டுக் கழகம் மற்றும் சிலாபம் மேரியன்ஸ் ஆகிய கழகங்களுக்காக விளையாடியிருந்தார்.
மேலும், 2001இல் முதல்தரப் போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இறுதியாக 2004இல் குருநாகல் இளையோர் கழகத்துடனான போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசியின் 2022 T20 உலகக் கிண்ண ஐரோப்பிய வலய நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள இத்தாலி கிரிக்கெட் குழாத்தில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த தலா 3 வீரர்களும், அயர்லாந்தைச் சேர்ந்த 2 வீரர்களும், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த தலா ஒரு வீரரும் இடம்பெற்றுள்ளனர்.
2022 T20 உலகக் கிண்ணத்துக்கான இத்தாலி குழாம்:
கரேத் பெர்க் (தலைவர், தலைமை பயிற்சியாளர்), ஜேட் டெர்ன்பாக், மதுப பெர்னாண்டோ, ஜேமி கிராஸி, கிராண்ட் ஸ்டுவோர்ட், டெரன் லோ, தினிந்து மாரகே, ஜியான்-பியரோ மீட், ஜோய் பெரேரா, அமீர் ஷெரீப், பல்ஜித் சிங், ஜஸ்பிரித் சிங், மன்பிரீத் சிங், நிகோலாய் ஸ்மித்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…