பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு ஜப்பானில் எதிர்வரும் மே 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஒசாகா க்ரோன் ப்றீ மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த முன்னணி 3 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளனர்.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க மற்றும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே ஆகிய மூவரும் பங்குபற்றவுள்ளனர்.
உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் நடைபெறவுள்ள இந்தத் தொடர் 11ஆவது கினாமி மிச்சிடகா ஞாபகார்த்த மெய்வல்லுனர் தொடராக (11th Kinami Michitaka Memorial Athletics Meet) ஒசாகாவில் உள்ள நகெய் (யென்மர்) விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஒசாகா க்ரோன் ப்றீ மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி நேற்று (08) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், இலங்கை அணியின் பயிற்சியாளர்களாக சுசந்த பெர்னாண்டோ மற்றும் விமுக்தி டி சொய்ஸா ஆகிய இருவரும் செயல்படவுள்ளனர்.
இதனிடையே, ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் பொலிஸ் கழக விளையாட்டரங்கில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 4 இலங்கை வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றரில் 3ஆவது இடத்தையும், நதீஷா ராமநாயக்க பெண்களுக்கான 400 மீற்றரில் 2ஆவது இடத்தையும் பிடித்தனர். எனினும், குறித்த இரண்டு வீரர்களுக்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான உரிய அடைவு மட்டத்தை எட்ட முடியாமல் போனது.
- டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரில் களமிறங்கும் யுபுன், தருஷி
- டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனரில் யுபுன், நதீஷாவிற்கு வெற்றி
இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட தருஷி கருணாரத்ன போட்டியின் போது ஏற்பட்ட சோர்வு காரணமாக, போட்டியை பாதியிலேயே விட்டுவிட்டார். இதனால் அவரால் போட்டியை நிறைவு செய்ய முடியாமல் போனது. மறுபுறத்தில் முன்னாள் தேசிய சம்பியனான கயந்திகா அபேரத்னவிற்கு 9ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
பாரிஸில் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடைவு மட்டம் மற்றும் தூரப் பெறுதிகளைப் பதிவுசெய்வதற்கு உலக மெய்வல்லுனர்களுக்கு ஜூன் 30ஆம் திகதிவரை உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள ஒசாகா க்ரோன் ப்றீ மெய்வல்லுனர் போட்டியானது ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான திறன்காண் போட்டியாக அமைவதால் குறித்த தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை மெய்வல்லுனர்கள் மூவரும் அதி சிறந்த நேரப் பெறுதிகளை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழவிற்கான அடைவு மட்டத்தை இதுவரை எந்தவொரு இலங்கை மெய்வல்லுனர்களும் பூர்த்தி செய்வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<