ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்றாவது முறையாக நடைபெறவுள்ள T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த மேலும் மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு கிட்டியிருக்கின்றது.
அதன்படி, நுவன் பிரதீப், செஹான் ஜயசூரிய மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்ட மேலதிக இலங்கை வீரர்களாக அமைகின்றனர்.
T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்றாவது…..
மூன்றாவது முறையாக இடம்பெறவுள்ள இந்த T10 லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்றது. இந்த வீரர்கள் ஏலத்தில் இலங்கை T20 அணியின் தலைவர் லசித் மாலிங்க உள்ளிட்ட 7 இலங்கை வீரர்கள் தொடரில் பங்கெடுக்கும் அணிகளினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது இன்னும் மூன்று வீரர்கள் இந்த பட்டியலில் சேர, T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருக்கின்றது.
முன்னதாக T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களான வஹாப் ரியாஸ் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர். எனினும், இந்த வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதி மறுத்த நிலையில் இவர்களுக்கு பிரதியீடாகவே இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இந்த வீரர்களில் வஹாப் ரியாஸின் இடத்தினை நுவான் பிரதீப் நிரப்ப, துஷ்மந்த சமீர மொஹமட் ஹஸ்னைனின் இடத்தினை எடுத்துக் கொள்கின்றார்.
பிரதியீடாகியிருக்கும் வீரர்களில் துஷ்மந்த சமீர டெல்லி புல்ஸ் அணிக்காக ஆடவுள்ளதோடு, நுவன் பிரதீப் நொதர்ன் வோரியர்ஸ் அணிக்காக விளையாடவிருக்கின்றார்.
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அண்மைக்காலமாக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்ற நுவான் பிரதீப், லசித் மாலிங்க ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை ஒருநாள் அணியில் பிரதான வேகப் பந்துவீச்சாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும், அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்று முடிந்த T20 தொடரிலும் இலங்கை அணி வரலாற்று தொடர் வெற்றியினை பதிவு செய்ய நுவன் பிரதீப் தனது பந்துவீச்சு மூலம் உதவியிருந்தார்.
இலங்கை அணிக்கு பல வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க திட்டம்
இலங்கை கிரிக்கெட அணியில் தற்போது…..
அதேநேரம், தொடர்ச்சியான உபாதைகள் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியில் இந்த ஆண்டு பெரிதாக வாய்ப்பினை பெறாத துஷ்மந்த சமீர அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் வர்த்தக நிறுவனங்கள் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில், இலங்கை கிரிக்கெட் அணியில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி திறமையினை நிருபித்திருக்கும் சகலதுறை வீரரான செஹான் ஜயசூரிய, T10 லீக் கிரிக்கெட் தொடரில் ஆடவிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரரான மஹிதி ஹஸனின் இடத்தினை எடுத்துக் கொள்கின்றார். செஹான் ஜயசூரிய T10 லீக் கிரிக்கெட் தொடரில் பங்களா டைகர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எட்டு அணிகள் பங்குபெறவுள்ள T10 லீக் கிரிக்கெட் தொடர், நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
T10 லீக் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்களின் முழு விபரம்
- பங்களா டைகர்ஸ் – திசர பெரேரா, செஹான் ஜயசூரிய
- மராத்தா அரபியன்ஸ் – லசித் மாலிங்க, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க
- டீம் அபுதாபி – நிரோஷன் டிக்வெல்ல
- டெக்கான் கிளேடியேட்டர்ஸ் – பானுக்க ராஜபக்ஷ
- டெல்லி புல்ஸ் – குசல் பெரேரா, துஷ்மந்த சமீர
- நொத்தர்ன் வோரியர்ஸ் – நுவன் பிரதீப்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<