ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் (APL) தொடரில் பங்கேற்கவுள்ள பக்டியா அணி, இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் திசர பெரேராவை தங்களது அணிக்காக வாங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல் முறையாக ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக், தொடருக்கான வீரர்கள் தெரிவு நேற்றைய (10) தினம் நடைபெற்றது.
இதன் முதற்கட்ட வீரர்கள் வரைவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ், ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், நேபாளம்,அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஹொங்கொங் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து 6 பிரிவுகளின் கீழ், மொத்தமாக 350 வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
>> இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றிகள் – ஒரு மீள்பார்வை
இதில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 14 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்த நிலையில், அதில் திசர பெரேரா மாத்திரமே வீரர்கள் தெரிவில் பக்டியா அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர வரைவில் உள்ளடக்கப்பட்டிருந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார, ஷெஹான் ஜயசூரிய, டில்ஷான் முனவீர, சீகுகே பிரசன்ன, ஜீவன் மெண்டிஸ், டில்ருவான் பெரேரா, உபுல் தரங்க, அகில தனன்ஜய, அசேல குணரத்ன மற்றும் லசித் மாலிங்க ஆகிய இலங்கை அணியின் முன்னணி வீரர்களை எந்த அணிகளும் வாங்குவதற்கு முன்வரவில்லை.
அத்துடன், குறிப்பிட்ட முன்னணி வீரர்களுடன் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றிருக்காத ரமேஷ் தரிந்த மெண்டிஸ், பெஸ்குவால் ஹெந்தி கௌசால் மற்றும் தேசாந்துவ தரங்க ஆகிய சில வீரர்களும், இந்த வரைவில் பெயரிடப்பட்டிருந்தனர். எனினும் துரதிஷ்டவசமாக இவர்களுக்கும் எந்த அணிகளிலும் இணைவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதேவேளை ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் வரைவில் டயமண்ட் (DIAMOND) வீரர்கள் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருக்கும் திசர பெரோவுக்கு ஊதியமாக 75 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (ஒரு கோடி 21 இலட்சம்) வழங்கப்படவுள்ளது. திசர பெரேரா விளையாடவுள்ள பக்டியா அணியில் பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சஹீட் அப்ரிடி, மொஹமட் சேஷார்ட், இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டன் ஆகியோர் விளையாடவுள்ளனர். அதுமாத்திரமின்றி, முதன்முறையாக ஆரம்பமாகும் இந்த தொடரில் கிரிஸ் கெயில், அன்ரே ரசல் மற்றும் பிரெண்டன் மெக்கலம் ஆகிய முன்னணி வீரர்களும் விளையாடவுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபுல், நங்கஹார், கந்தஹார், பல்காஹ் மற்றும் பக்டியாக ஆகிய நான்கு நகரங்களை அடிப்படையாக கொண்ட 5 அணிகள் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணிகளும் எதிரணியுடன் தலா 2 தடவைகள் மோதவுள்ள நிலையில், மொத்தமாக 23 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<