நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T20 என மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களையும் இலங்கை கிரிக்கெட் அணி பறிகொடுத்திருந்த போதிலும், குறித்த தொடர்களின் ஒரு நாள், T20 போட்டிகளில் இலங்கை வீரரான திசர பெரேராவின் துடுப்பாட்டம் அனைவரையும் கவர்ந்திருந்தது.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர டி20 சகலதுறை தரவரிசையில் ஐந்தாமிடத்தில்
ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ள புதிய டி20 தரவரிசை பட்டியலின் பிரகாரம் ….
தனது அதிரடி துடுப்பாட்டத்தினை 2019ஆம் ஆண்டிற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் இந்தப் பருவகாலத்திற்கும் எடுத்துச் சென்றுள்ள திசர பெரேரா, BPL தொடரில் தனது முதல் போட்டியில் கொமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக சிக்ஸர் மழையுடன் வெறும் 26 பந்துகளில் 74 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
BPL தொடரில், கொமில்லா விக்டோரியன்ஸ் – சிட்டகொங்க் வைகிங்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று (13) டாக்காவில் இடம்பெற்றிருந்தது. BPL தொடரின் 14ஆவது குழுநிலைப் போட்டியாக அமைந்த இந்த மோதலில் முஷ்பிகுர் ரஹீம் தலைமையிலான சிட்டகொங்க் வைகிங்ஸ் அணியினர் திசர பெரேரா விளையாடும் கொமில்லா விக்டோரியன்ஸ் அணியினரை முதலில் துடுப்பாட பணித்தனர்.
இதன்படி முதலில் துடுப்பாட தொடங்கிய கொமில்லா விக்டோரியன்ஸ் அணி, அனுபவம் கொண்ட துடுப்பாட்ட வீரர்களான ஈவின் லூயிஸ், சஹீட் அப்ரிடி மற்றும் தமிம் இக்பால் போன்றோரினை கொண்டிருந்த போதிலும் ஒரு கட்டத்தில் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலை ஒன்றுக்கு சென்றது.
இப்படியான ஒரு நிலையில், களம் வந்த திசர பெரேரா மைதானத்தின் ஒவ்வொரு கோணங்களிலும் சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டத் தொடங்கினார். திசரவின் அபார துடுப்பாட்டத்தினால் கொமில்லா விக்டோரியன்ஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கை மிகவும் விரைவாக அதிகரித்திருந்தது.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான லசித் …
பெரேரா தான் எதிர்கொண்ட 26 பந்துகளிலும் 8 இமாலய சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் என அபாரம் காட்டியிருந்ததோடு, கொமில்லா விக்டோரியன்ஸ் அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக மொஹமட் சயீபுத்தினுடன் இணைந்து 40 பந்துகளில் 98 ஓட்டங்களை பகிர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக பெரேராவின் அதிரடியோடு முதலில் துடுப்பாடியிருந்த கொமில்லா விக்டோரியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
கொமில்லா விக்டோரியன்ஸ் அணியில் அதிரடி காண்பித்திருந்த திசர பெரேரா 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்க, பெரேராவுடன் ஜோடி சேர்ந்திருந்த மொஹமட் சயீபுத்தினும் ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 26 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இதேவேளை, சிட்டகொங்க் வைகிங்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் காலேத் அஹ்மட் 34 ஓட்டங்களை விட்டுத்தந்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
எனினும், பின்னர் ஆடிய சிட்டகொங்க் வைகிங்ஸ் அணி போட்டியில் வெற்றி பெற்றதன் காரணமாக திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டம் வீணாகியிருந்தது.
அதன்படி, போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 185 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சிட்டகொங்க் வைகிங்ஸ் அணி, இரண்டு பந்துகள் மாத்திரமே மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை எட்டியது.
சிட்டகொங்க் வைகிங்ஸ் அணியின் வெற்றிக்கு அதன் அணித்தலைவர் முஷ்பிகுர் ரஹீம் 41 பந்துகளில் 75 ஓட்டங்கள் பெற்று உதவியதோடு, மொஹமட் சஹ்ஷாத்தும் அதிரடியாக 27 பந்துகளில் 46 ஓட்டங்களை குவித்து தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
பெரேராவின் துடுப்பாட்டம் இப்போட்டியில் வீணாகிய போதிலும் தனியொரு வீரராக அவர் காட்டிய அதிரடி, கொமில்லா விக்டோரியன்ஸ் அணியின் இரசிகர்களை மகிழ்ச்சியில் துள்ள முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இதேவேளை, போட்டியின் ஆட்ட நாயகனாக சிட்டகொங்க் வைகிங்ஸ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் தேர்வாகியிருந்தார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் கோஹ்லியின் நிலைப்பாடு
கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டால் அதற்கு பிறகு துடுப்பாட்ட…
இலங்கை கிரிக்கெட் அணியின் இரும்பு மனிதன் என அழைக்கப்படும் திசர பெரேரா, பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரிற்கு முன்னதாக நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டியில் 74 பந்துகளிற்கு 140 ஓட்டங்களினையும், மூன்றாவது போட்டியில் 63 பந்துகளில் 80 ஓட்டங்களினையும் பெற்றிருந்தார்.
இதேநேரம், நியூசிலாந்து அணியுடனான ஒரேயொரு T20 போட்டி கொண்ட தொடரிலும் 24 பந்துகளுக்கு 43 ஓட்டங்கள் விளாசியிருந்த அவர், மலர்ந்திருக்கும் 2019ஆம் ஆண்டினை அதிரடி கலந்த துடுப்பாட்டத்துடன் அலங்கரித்துள்ளார்.
போட்டியின் சுருக்கம்
கொமில்லா விக்டோரியன்ஸ் – 184/5 (20) திசர பெரேரா 74*, ஈவின் லூயிஸ் 38*, காலேத் அஹ்மட் 34/3
சிட்டகொங்க் வைகிங்ஸ் – 186/6 (19.4) முஸ்பிகுர் ரஹீம் 75, மொஹமட் சஹ்ஷாத் 46, மொஹமட் சயீபுத்தின் 45/3
முடிவு – சிட்டகொங்க் வைகிங்ஸ் 4 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<