இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய உப தலைவரும், அனுபவ சகலுறை வீரருமான திசர பேரரா, இவ்வருட ஆரம்பத்திலிருந்து தான் மாற்றத்துக்குட்பட்ட வகையிலான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
பங்களாதேஷில் இவ்வருடம் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த இவர், ஆட்ட நாயகன் விருதை வென்றார். தொடர்ந்து நடைபெற்ற சுதந்திரக் கிண்ணம் (Nidahas Trophy) மற்றும் தென்னாபிரிக்க தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியிருந்தார்.
இலங்கையின் புதிய மாற்றங்களும், சொந்த மண்ணும் இங்கிலாந்துக்கு பாதகமாகுமா?
இந்த நிலையில், இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடர் நாளை (10) ஆரம்பிக்கவுள்ள நிலையில், சற்று நிதானமானதும், சூழ்நிலைக்கு ஏற்ப ஓட்ட வேகத்தினை மாற்றிக்கொள்வதற்கான காரணம், கடந்த போட்டிகளில் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தமை தான் என திசர பெரேரா குறிப்பிட்டார். அதேவேளை, அனுபவ வீரர் என்ற ரீதியில் அணியின் முடிவுகளுக்கு முழுமையான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் (08) எமது இணையத்தளமான Thepapare.com இற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியில் குறித்த விடயத்தினை திசர பெரேரா தெரிவித்துள்ளார். இந்த செவ்வியின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் இவ்வருடத்தில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முக்கிய காரணம், எமது தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர ஆகியோரின் ஆலோசனைகள். பின்னர், எனது மனநிலையை மாற்றிக்கொண்டேன். அதாவது, நிதானமாக துடுப்பெடுத்தாடும் விதத்தை கற்றுக்கொண்டால் என்னால் அதிக ஓட்டங்களை பெறமுடியும் என்பதை புரிந்துக்கொண்டேன். அதனை மனதில் வைத்து பயிற்சிகளை மேற்கொண்டேன்.
நான் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகள் மூலமாக ஓட்டங்களை பெறுபவர் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹதுருசிங்க வந்தவுடன் முதலில் அதனை மாற்றுவதற்கான திட்டங்களை வழங்கினார். துடுப்பாட்ட வரிசையில் 6ம் மற்றும் 7ம் இலக்க வீரராக களமிறக்கினார். இதன்மூலம் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகள் பெறப்படும் ஓட்ட விகிதம் குறைந்தது.
இங்கிலாந்தை வீழ்த்த அவுஸ்திரேலியரின் உதவியை பெறும் இலங்கை
தம்புள்ளையில் நாளை…
அத்துடன், அணியில் அனுபவம் உள்ள வீரர் என்ற ரீதியில், அணியின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 6ம் மற்றும் 7ம் இடங்களில் துடுப்பெடுத்தாடுவது கடினமான விடயம். ஆனால், அதனை சிறப்பாக செய்வதற்கு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். முக்கியமாக இந்தக் காலப்பகுதியில், நான் அதிக பந்து ஓவர்களை எதிர்கொண்டு விளையாடியதன் மூலமே எனது துடுப்பாட்டம் பலம் மிக்கதாகியுள்ளது” என்றார்.
இதேவேளை இங்கிலாந்து தொடருக்கான ஆயத்தம் தொடர்பில் குறிப்பிடுகையில்,
“இங்கிலாந்து தொடருக்கு ஆயத்தமாகுவதற்கு எங்களுக்கு போதிய அவகாசம் இருந்தது. அதனை பயன்படுத்தி அதிக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். உப தலைவர் என்ற ரீதியில் அணிக்கான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளேன். வீரர்கள் அனைவரும் அதிக ஆர்வத்துடனும், விரும்பியும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமாத்திரமின்றி, அனுபவம் உள்ள வீரர்கள், அனுபவம் குறைந்த வீரர்கள், அதிக ஓட்டங்களை பெற்றுள்ள வீரர்கள் மற்றும் ஓட்டங்கள் பெறத் தவறிய வீரர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பயிற்சியில் ஈடுபடுவதை உப தலைவர் என்ற ரீதியில் நான் அவதானித்தேன். தொடரை வெற்றிக்கொள்வதற்காக வீரர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்” எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, நாளை (10) பிற்பகல் 2.30 மணியளவில் தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க