பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படுகின்ற 3ஆவது பருவகால பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) T-20 போட்டித் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களான திசர பெரேரா மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் முறையே முல்தான் சுல்தான்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் ஆகிய அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராட்சியத்தில் ஆரம்பமாகவுள்ள இத்தொடரில் இணைவதன்மூலம் அசேல குணரத்ன பி.எஸ்.எல் தொடரில் முதற்தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்தான் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சங்கா, பொல்லார்ட், மலிக்
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் …
இதேநேரம், லாகூர் கிளெண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதை காரணமாக இம்முறை போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார். எனவே, மெதிவ்ஸின் இடத்துக்கு நியூசிலாந்தின் என்டன் டெவிச் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான 28 வயதுடைய டெவிச், நியூசிலாந்து அணிக்காக 12 ஒரு நாள் மற்றும் 4 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 6 அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 போட்டித் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்றது. அதில் இலங்கை சார்பாக, முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
இதேவேளை, இப்போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 2 வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் தமது இறுதி அணியை உறுதி செய்து மாற்று வீரர்களை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார தலைவராகவும், ஆலோசகராகவும் செயற்படவுள்ள முல்தான் சுல்தான்ஸ் அணி இலங்கை அணியின் நட்சத்திர வீரரான திசர பெரேராவை ஒப்பந்தம் செய்தது. அவ்வணிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர், இந்திய அணியுடனான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் விளையாடவுள்ளதால், அவருக்குப் பதிலாக திசர பெரேரா ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சுப்பர் லீக் அணிகளிலிருந்து நட்சத்திர வீரர்கள் விடுவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் …
உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுவருகின்ற T-20 போட்டித் தொடர்களில் விளையாடி வருகின்ற திசர பெரேரா, கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் குவாட்டா கிளெடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான வசீம் அக்ரம் சுல்தான் அணியின் பணிப்பாளராக செயற்படவுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டொம் மூடி பயிற்சியாளராக செயற்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அண்மைய காலங்களில் கிரிக்கெட் அரங்கில் வளர்ந்து வரும் அதிரடி வீரராக விளங்குகின்ற 32 வயதான அசேல குணரத்ன, கடந்த வருட முற்பகுதியில் இடம்பெற்ற தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது T-20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி உலகின் கவனத்தைப் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற T-20 தொடரிலும் அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன் காரணமாக, கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டித் தொடரில் சம்பியன் பட்டதை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அசேல குணரத்ன முதற்தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், அவ்வணிக்காக அவர் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.
அதேபோன்று, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் பிரீமியர் லீக் T-20 தொடரில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்கு முதற்தடவையாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அசேல குணரத்ன, உபாதை காரணமாக அத்தொடர் முழுவதும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றத் தயாராகும் இலங்கையின் நட்சத்திர வீரர்
2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் …
இந்நிலையில், இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக்கில், இஸ்லாமபாத் யுனைடெட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர் ஜே.பி டுமினி, இந்திய அணியுடனான போட்டித் தொடரில் விளையாடவுள்ளார். எனவே, அவரின் இடத்துக்கு அசேல குணரத்னவை இணைத்துக் கொள்ள அவ்வணி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மேலும், கடந்த 2 பருவகாலங்களில் குவாட்ட கிளெடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான லுக்கி ரைட், இம்முறை கராச்சி கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். எனினும், திடீர் உபாதை காரணமாக இம்முறை பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ள லுக்கி ரைட்டுக்குப் பதிலாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோ டென்லி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம், கராச்சி கிங்ஸ் அணிக்காக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜொன்சன் மற்றும் நியூசிலாந்தின் கொலின் மன்ரோ ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்கான இம்முறை போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் குறித்த வீரர்களுக்குப் பதிலாக இங்கிலாந்தின் தைமல் மில்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் லென்டி சிமென்ஸ் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், குவாட்டா கிளெடியேட்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட மேற்கிந்திய தீவுகளின் T-20 அணித் தலைவர் கார்லோஸ் ப்ரத்வெய்ட், 2019 உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் விளையாடவுள்ளதால் இம்முறை போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகின்ற பிக்பேஸ் T-20 தொடரில் அசத்தி வருகின்ற மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஜொப்ரா ஆச்சர் மாற்றீடு வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, 3ஆவது பாகிஸ்தான் சுப்பர் லீக் T-20 தொடர் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்புச் சம்பியனான பெஷாவர் சல்மி மற்றும் சுல்தான் முல்தான்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தொடரின் அரையிறுதிப் போட்டிகள் லாகூரிலும், இறுதிப் போட்டி கராச்சியிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.