ஐ.சி.சி இன் இணை அங்கத்துவ நாடான கனடா கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் முதல் தடவையாக நடத்தப்படுகின்ற குளோபல் டி-20 ப்ரீமியர் லீக போட்டித் தொடர் நேற்று முன்தினம் (28) ஆரம்பமாகிய நிலையில், அதில் பங்கேற்கவிருந்த இலங்கை அணி வீரர்களான திசர பெரேரா, தசுன் சானக்க மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு அந்த தொடரில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்காமல் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இம்மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு அவர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
கனடா கிரிக்கெட் சபையினால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளோபல் டி-20 ப்ரீமியர் லீக் (டி20) தொடரில், இலங்கையைச் சேர்ந்த 4 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இதில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க தலைமையிலான மொன்ட்ரியல் டைகர்ஸ் அணியில் திசர பெரேரா, தசுன் சானக்க, இசுரு உதான ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் – ஹத்துருசிங்க
எனினும், மாலிங்கவிற்கு அந்த தொடரில் கலந்துகொள்வதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கியிருந்தாலும், தேர்வுக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க ஏனைய மூவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனையடுத்து இம்மூன்று வீரர்களுக்குப் பதிலாக டுவைன் ஸ்மித் (மேற்கிந்திய தீவுகள்), கெவொன் கூப்பர் (மேற்கிந்திய தீவுகள்), மற்றும் பீட்டர் சிடில் (அவுஸ்திரேலியா) ஆகிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய மொன்ட்ரியல் டைகர்ஸ் அணி நடவடிக்கை எடுத்திருந்தது.
இதேவேளை, தொடர் உபாதைகள் மற்றும் போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் 2017ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியிலிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, நீண்ட இடைவெளியின் பிறகு நேற்று (29) வெளிநாட்டு டி-20 போட்டித் தொடரில் களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் மாலிங்க தலைமையிலான மொன்ட்ரியல் டைகர்ஸ் அணியை டுவெய்ன் பிராவோ தலைமையிலான வின்னிபேக் ஹவுக்ஸ் அணி 46 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. எனினும், அபாரமாக பந்துவீசிய மாலிங்க, 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க