இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ, அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக ராஜபக்ஷவின் கிரிக்கெட் வாழ்க்கை இத்துடன் நிறைவடையவில்லை எனக் குறிப்பிட்டிருப்பதோடு, அவர் எதிர்காலத்தில் மீண்டும் அணியில் இணைவதற்கான எதிர்பார்ப்புக்களை கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
>> பாகிஸ்தான் ஒருநாள், T20I தொடர்களுக்கான ஆஸி. குழாம் அறிவிப்பு
பாராளமன்றத்தில் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த சுஜித் சஞ்சய பெரேரா பானுக்க ராஜபக்ஷ இந்திய தொடரில் உள்வாங்கப்படாமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்ததனை அடுத்து இந்த கேள்விக்கு பதில் வழங்கிய நாமல் ராஜபக்ஷ இந்திய T20I தொடருக்கான இலங்கை குழாம், தேசிய தேர்வாளர்கள் குழு மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருக்கின்றார்.
அத்தோடு தேர்வாளர்கள் குழாம் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷவினை இலங்கை குழாத்தினுள் இணைக்காமல் போனமைக்கான காரணத்தினையும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தெரிவித்திருந்ததாக, விளையாட்டுத்துறை அமைச்சரான நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சர், பானுக்க ராஜபக்ஷ எதிர்காலத்தில் இலங்கை அணியுடன் மீண்டும் இணைவதிலும், நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
”தேர்வாளர்கள் குழு பானுக்கவினை அணியில் இருந்து நீக்கியமைக்கான காரணத்தினை அவரிடம் தெரிவித்திருந்ததோடு, அதனை என்னிடமும் கூறியிருக்கின்றது. அவரிடம் இலங்கை அணிக்காக எதிர்காலத்தில் ஆடுவதற்கான திறமை, ஆற்றல்கள் காணப்படுகின்றன. அவர் எதிர்காலத்தில் மீண்டும் அணியில் இணைந்து திறமையினை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கின்றேன்.” என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பேசும் போது கூறியிருக்கின்றார்.
>> இந்தியா தொடருக்கான இலங்கை T20I குழாம் அறிவிப்பு
உடற்பருமன் தகைமை பரிசோதனை எனக் கூறப்படுகின்ற Skin Folds பரிசோதனையில் சிறந்த பெறுபேறுகளை காட்டத்தவறியதனை அடுத்து, பானுக்க ராஜபக்ஷ இந்திய அணியுடன் இலங்கை ஆடவுள்ள T20I தொடரில் பங்கெடுக்கும் வாய்ப்பினை இழந்திருப்பதோடு, பானுக்க ராஜபக்ஷவினை இலங்கை அணியில் இணைக்க கோரி நேற்று (23) கிரிக்கெட் இரசிகர்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<