இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதலாவது லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 தொடர் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது. இதில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களில் அந்த அணியின் பயிற்சியாளர் திலின கண்டம்பிக்கு முக்கிய பங்கு உண்டு.
Video – இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய LPL FINAL: |Jaffna Stallions – LPL2020 Champions..!
இதில் சிறப்பம்சம் என்னவெனில் 2012இல் நடைபெற்ற ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக்கில் (SLPL) சம்பியன் பட்டம் வென்ற ஊவா நெக்ஸ்ட் அணியின் தலைவராக செயற்பட்ட திலின கண்டம்பி, 2020இல் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளராக கடமையாற்றி மீண்டும் சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில், LPL தொடருக்குப் பிறகு இலங்கையின் விளையாட்டு ஊடகவியலாளர் தனுஷ்க அரவிந்தவுடன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளர் திலின கண்டம்பி வழங்கிய சிறப்பு நேர்காணலின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.
கேள்வி – உங்களது தலைமையிலான ஊவா நெக்ஸ்ட் அணி தான் 2012இல் நடைபெற்ற ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்றது. எனவே 8 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக்கில் நீங்கள் பயிற்றுவித்த ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் – இரண்டு சம்பியன் பட்டங்களையும் வெல்ல முடிந்தமை ஒரு எதிர்பாராத விடயமாகும். 2012இல் எனக்கு ஒரு வீரராக பிரகாசிக்க முடியாமல் போனது. ஆனால் ஒரு தலைவராக என்னுடன் பணியை சிறப்பாக செய்தேன். இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் பயிற்சியாளராக கடமையாற்றி அதே பணியை இரட்டிப்பாகச் செய்ய முடிந்தது. இதனால் இரண்டு சந்தரப்பங்களிலும் சம்பியன் பட்டத்தை வெல்ல முடிந்தது.
கேள்வி – 2012இல் நடைபெற்ற ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக்கில் உங்களது தலைமைத்துவத்தின் கீழ் சொஹைப் மலிக் விளையாடியிருந்தார். ஆனால், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் உங்களது பயிற்றுவிப்பின் கீழ் அவர் விளையாடியிருந்தார். எனவே சொஹைப் மலிக்குடனான தொடர்பு பற்றி கூறுங்கள்.
பதில் – சொஹைப் மலிக்கிற்கும், எனக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு ஒன்று இருந்தது. வெளிநாட்டு வீரர்களில் சொஹைப் மலிக் தான் எனது முதல் தேர்வாக இருந்தார். அவர் மிகவும் தாழ்மையான மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அத்தகைய வீரர் ஒருவர் அணியில் இருந்தால் இளம் வீரர்களுக்கு இது மிகவும் எளிதானது.
Video – LPL சம்பியனாகிய ஜப்னா ஸ்டாலியன்ஸின் வெற்றிக்கொண்டாட்டம்!
குறிப்பாக, T20 போட்டிகளில் பிரபலமான வீரர்கள் இங்கு வந்து விளையாடினாலும், சொஹைப் மலிக் போன்ற வீரர்கள் அவ்வாறு அல்ல. எனவே, சொஹைப் மலிக்கை எங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்தது என்னை விட திசர பெரேராவுக்குத் தான் மிகப் பெரிய நன்மையைப் பெற்றுக்கொடுத்தது.
கேள்வி – நீங்கள் 2014இல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தீர்கள். அதன்பிறகு நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் எவ்வாறு ஈடுபட்டுள்ளீர்கள்?
பதில் – கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு முதலில் நான் கொழும்பு ரோயல் கல்லூரியின் பயிற்சியாளராகப் பணியாற்றத் தொடங்கினேன். ரோயல் கல்லூரியின் முதல் பிரிவு கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன்.
அதன்பிறகு SSC விளையாட்டுக் கழகத்தின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றத் தொடங்கினேன். எனவே, LPL தொடரில் பயிற்சியாளராகச் செயற்படுவதற்கு என்னை விடுவித்த SSC விளையாட்டுக் கழகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்ற போது உங்களுக்கு எவ்வாறானதொரு உணர்வை ஏற்படுத்தியது?
பதில் – அந்த அணியுடன் முதலில் நான் துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைந்து கொண்டேன். பின்னர் அணியைத் தேர்ந்தெடுக்குமாறு அழைப்பு விடுத்தார்கள். அணியைத் தேர்ந்தெடுத்த பிறகு, அணியின் பயிற்சியாளராக பணியாற்ற முடியுமா என்று அணி நிர்வாகம் என்னிடம் கேட்டார்கள்.
LPL தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்தவர்கள்
இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. எந்த தயக்கமும் இல்லாமல் சம்மதம் தெரிவித்தேன். குறிப்பாக, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பயிற்சியாளராக என்னை கொண்டு வருவதில் எனது இரண்டு சிறந்த நண்பர்களான மாரியோ வில்லவரயன் மற்றும் ரஸல் அர்னோல்ட் ஆகிய இருவரும் முக்கிய பங்கு வகித்தனர்.
கேள்வி – அணிக்கான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் பங்கேற்றீர்கள். அவர்களில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு வீரர்கள் யாராவது இருக்கிறார்களா?
பதில் – வீரர் ஏலத்திற்கு முன்பு, இரண்டு வலுவான வெளிநாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதேநேரம், அணியின் இதர பயிற்சியாளர்கள் தலா இரண்டு வெளிநாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுத்தாலும், ஒரு வெளிநாட்டு வீரருக்குப் பதிலாக இலங்கை வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்த ஒரே பயிற்சியாளர் நான் மட்டும் தான்.
கேள்வி – அந்த நேரத்தில் நீங்கள் யாரை தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில் – நான் இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் மலானையும், இலங்கையைச் சேர்ந்த வனிந்து ஹசரங்காவையும் தேர்ந்தெடுத்தேன்.
கேள்வி – வனிந்து ஹசரங்கவைத் தேர்ந்தெடுக்கும்போது அது அவதானம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
பதில் – இல்லை. வனிந்து ஹசரங்கவைத் தவிர, இசுரு உதான அல்லது குசல் மெண்டிஸைப் பெற முயற்சித்தேன். ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பு ஒரு பிரச்சினையாக மாறியது.
எனவே உள்ளூர் வீரர்களைக் கொண்டு அணியை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்தேன். அப்போது நான் சரியான முடிவை தான் எடுத்தேன் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கேள்வி – இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் வனிந்து ஹசரங்க தொடர் நாயகன் விருது வென்றார். எனவே உங்கள் தேர்வு சரியாக இருந்தது. நீங்கள் இதற்கு முன்பு வனிந்து ஹசரங்கவுடன் பணிபுரிந்து இருக்கின்றீர்களா?
பதில் – ஒரு பயிற்சியாளராக, வனிந்துவின் திறமை பற்றி நான் நன்கு அறிந்து வைத்திருந்தேன். ஆனால், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடன் பணிபுரியும் போது ஒரு நபராகவும், வீரராகவும் நான் வனிந்துவை முழுமையான அறிந்து கொண்டேன்.
LPL தொடரை ஆக்கிரமித்த பந்துவீச்சாளர்கள்
வனிந்து ஒரு அற்புதமான வீரர். அவரது விடாமுயற்சி பாராட்டத்தக்கது. போட்டிக்கு முன்பு முடிந்தவரை பந்து வீசவும் முடிந்தவரை துடுப்பாட்டம் செய்வதும் தான் அவருக்கு மிகவும் விருப்பம். ஒரு வித்தியாசமான வீரர். மிகவும் வேடிக்கையாக இருப்பார். தற்போது உள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் இரண்டு அல்லது மூன்று உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருந்தால், அவர்களில் ஒருவர் வனிந்து ஹசரங்க என்று நான் கூறுவேன்.
கேள்வி – இம்முறை தொடரில் எது சவாலாக அமைந்தது?
பதில் – கொழும்பு அணி மிகவும் வலுவான அணியாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றதால், அதே அணியுடன் தான் தொடர்ந்து விளையாடியது. அதனால்தான் இறுதியில் அவர்களின் வீரர்களுக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டன என்று நினைக்கிறேன்.
கேள்வி – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணித் தலைவர் திசர பெரேராவுடனான ஒப்பந்தம் பற்றி கூறுங்கள்?
பதில் – அணித் தலைவர் பொறுப்பை நாம் ஏற்கும்போது அணி நிர்வாகம் மற்றும் வீரர்களின் தேவைகளை நாம் அடையாளம் காண வேண்டும். திசரவும், நானும் எமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நன்கு அறிந்து வைத்திருந்தோம்.
குறிப்பாக, தற்போது இருப்பது முன்னர் இருந்த திசர பெரேரா அல்ல. அவர் கட்டுக்கோப்பான ஒரு வீரராக மாறிவிட்டார். இளம் வீரர் ஒருவர் அணியில் இடம்பெற்றாலும், திசர பெரேராவிடம் ஏதாவது எடுத்துச் சொன்னால் அவர் அதுதொடர்பில் அவதானம் செலுத்துவார். அவரது தலைமைப் பண்புகள் நீண்ட தூரம் வந்துள்ளதை இந்த தொடரின் மூலம் காணமுடிந்தது.
கேள்வி – திலின கண்டம்பி கட்டுப்பாடுகள், கடுமையான விதிமுறை பின்பற்றுகின்ற ஒரு பயிற்சியாளரா?
பதில் – வீரர்களின் தரப்பில் சுதந்திரம் கொடுப்பதில் நான் அதிக அக்கறை செலுத்துவேன். பொதுவாக வீரர் ஒருவர் ஆடுகளத்திற்குச் சென்ற பிறகு அடிப்பாரா? இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்தால் அந்த சந்தேகத்தை பெரும்பாலும் அகற்றுவது தான் எனது பொறுப்பு.
LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான தனன்ஜய லக்ஷான்
இது பாடசாலை அல்ல. இங்கே பெரிய வீரர்கள் உள்ளனர். ஏராளமானோருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளார்கள். எனவே ஒரு பயிற்சியாளராக என்னிடம் தேவையற்ற கட்டுப்பாடுகளோ, விதிமுறைகளோ இருக்கவில்லை.
கேள்வி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியஸ்காந்திற்கு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் எவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டது?
பதில் – அவர் சிறந்த எதிர்காலம் கொண்ட வீரர். வியாஸ்காந்திற்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது அவரிடம் காணப்பட்ட திறமைக்கே தவிர, அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் அல்ல. ஏனென்றால் அவர் உண்மையில் திறமையானவர்.
திறமையான இளம் வீரர்களை வெளியே கொண்டு வருவதே லங்கா ப்ரீமியர் லீக்கின் பிரதான குறிக்கோள். அதனால்தான் சீக்குகே பிரசன்ன, சச்சித்ர சேனாநாயக்க, டில்ஷான் முனவீர, அகில் தனன்ஜய போன்ற வீரர்கள் 2012இல் ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக் மூலம் வெளியே வந்தார்கள். இலங்கை அணிக்கும் விளையாடினார்கள்.
Video – வியாஸ்காந்தின் திறமைக்கு உத்தரவாதம் கொடுத்த Wanindu Hasaranga..!
புதியவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை நாம் வழங்க வேண்டும். எனது அணியில் உள்ள 16 வீரர்களுக்கும் அவ்வப்போது அணியில் விளையாட வாய்ப்பு அளித்தேன்.
கேள்வி – நீங்கள் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன் மற்றும் சனத் ஜயசூரியா ஆகியோருடன் விளையாடியுள்ளீர்கள். அப்போதைய இலங்கை அணிக்கும், தற்போதுள்ள இலங்கை அணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பதில் – எங்கள் வீரர்களின் திறமை குறித்து எந்த கேள்வியும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு அணியாக அவர்களை எவ்வாறு ஒன்று சேர்ப்பது என்பதுதான் பிரச்சினை. அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்களின் ஒற்றுமையை இன்னும் கொஞ்சம் அதிகரிப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
கேள்வி – கிரிக்கெட் விளையாடுவதா அல்லது பயிற்றுவிப்பதா இலகுவானது?
பதில் – கிரிக்கெட் விளையாடுவது மற்றும் பயிற்சியாளராக இருப்பதும் இரண்டு விடயங்கள். பயிற்சியாளராக செயல்படுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் நான் அந்த சவாலை விரும்புகிறேன். இந்த வெற்றி எனது பயிற்சியாளர் வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
கேள்வி – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு வெளிநாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தீர்கள்?
பதில் – திசர பெரேரா உலகின் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்துடன், திசர பெரேராவுக்கு வெளிநாட்டு வீரர்களுக்கு தேர்ந்தெடுக்க முன்னுரிமை அளித்தோம். அவர்களில், பாகிஸ்தானைச் சேர்ந்த சொஹைப் மலிக் மற்றும் உஸ்மான் ஷின்வாரியை நான் தேர்ந்தெடுத்தேன். எஞ்சிய வீரர்களை திசர பெரேரா தேர்ந்தெடுத்தார்.
கேள்வி – இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் களமிறங்கிய இளம் வீரர்களிடையே ஒரு பெயர் இருக்கும் என்றால் அது யார் என்று நினைக்கிறீர்கள்?
பதில் – 2012 ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக்குடன் ஒப்பிடும்போது, இந்த முறை இளம் வீரர்கள் களமிறங்கியிருந்தமை குறைவாகவே காணப்பட்டது. ஒவ்வொரு அணியிலும் 20 வயதுக்குட்பட்ட அல்லது 23 வயதுக்குட்பட்ட வீரர் கட்டாயம் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆனால் இந்த ஆண்டு அத்தகைய வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. எங்கள் அணியின் வியாஸ்காந்த் மற்றும் சரித் அசலங்க, கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தனன்ஜய லக்ஷான் மற்றும் சஹான் அராச்சி ஆகிய நால்வரும் தான் இம்முறை தொடரில் இளம் வீரர்களாக என் நினைவுக்கு வருகிறார்கள்.
கேள்வி – லங்கா ப்ரீமியர் லீக்கானது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு பயனளிக்குமா?
பதில் – இது அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு. வீரர்கள், பயிற்சியாளர்கள், கிரிக்கெட் சபை, அரசாங்கம் என அனைவருக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தப் போட்டியில் அனைவரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம்.
உதாரணமாக, நம் நாட்டின் நிலைமையை அரசாங்கத்தால் உலகுக்குக் காட்ட முடியும். அந்த வகையில் இது அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக இருந்தது. இது ஆண்டுதோறும் நடைபெறவுள்ளது. இதனால் மேலே குறிப்பிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த தொடர் நடைபெறுவதால் பயனளிக்கவுள்ளது.
கேள்வி – இலங்கை கிரிக்கெட் சபை எதிர்காலத்தில் T10 லீக் போட்டிகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தொடரில் பயிற்சியாளராக உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில் – வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயமாக பரிசீலிக்கப்படும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<