சுவிஸ் தேசிய அணியில் யாழ் மத்திய கல்லூரி மாணவராக பெருமை கொள்ளும் திலீபன்

487

கிரிக்கெட் விளையாட்டில் திறமையும் ஆர்வமும் இருந்தால் எங்கு சென்ற போதிலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கின்றார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசலிங்கம் திலீபன்.  

யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவரான திலீபன் தனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தினாலும் திறமையினாலும் இன்று சுவிஸ் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணி வீரராக மாறியிருக்கின்றார்.

இந்நிலையில் திலீபனின் கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டும் பொருட்டு ThePapare.com ஆனது அவருடன் சிறப்பு நேர்காணல் ஒன்றை நடாத்தியிருந்தது. குறித்த நேர்காணலை சுவாரஷ்யமாக்கிய வினாக்கள் எமது இணையதள வாசகர்களுக்காக….  

முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்துள்ள இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி ……..

கே – உங்களைப் பற்றிய அறிமுகம்?

எனது பெயர் இராசலிங்கம் திலீபன். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவனாகவும் இருக்கின்றேன். கடந்த 1977ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி பிறந்தேன். பின்னர், 1995ஆம் ஆண்டு தாய்நாட்டை பிரிந்து லண்டனில் 7 வருடங்கள் வாழ்ந்தேன். தற்போது சுவிஸ் நாட்டில் பிராஜவுரிமை பெற்று அங்கே வாழ்வதோடு அந்நாட்டின் தேசிய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடுகின்றேன். 

கே – கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி? 

ஆரம்பப் பாடசாலையில் இணைகின்ற போது கிரிக்கெட் விளையாட்டு பிரபல்யம் அடைந்த யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் இணைந்தமையே இன்றுவரை கிரிக்கெட்டில் தீராத காதலோடு பயணிக்க காரணமாக உள்ளது.

கே – நீங்கள் எப்படியான கிரிக்கெட் வீரர்?

நான் ஒரு சகலதுறை வீரர். பாடசாலை காலம் முதலே அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளன். இந்த தகைமையே என்னை பல நாடுகளில் பல அணிகளில் முதன்மைபெற வைத்தது. இதுவே, சுவிட்சர்லாந்து தேசிய அணியிலும் வாய்ப்பு பெற காரணமாக இருந்தது. 

கே – கிரிக்கெட் விளையாட்டில் உங்களது ஆரம்ப பயிற்சிகள் எவ்வாறு இருந்தன?   

எங்கள் பாடசாலையின் உறுதிக்கும் வளர்ச்சிக்கும் மிகப்பெரும் பலமாவது பழையமாணவர் சங்கமும் அதன் கிரிக்கெட் அணியுமாகும். அங்கிருந்த பல ஜாம்பவான்கள் எம்மை பயிற்றுவிப்பார்கள். அவர்கள் பாடசாலையின் பழைய கிரிக்கெட் வீரர்களும் கூட. என்னை முதன் முதல் அடையாளம் கண்டவர் ” பாலா” அண்ணன் ஆவார். 

அப்போது 15 வயது பாடசாலை கிரிக்கெட் அணிக்கு தெரிவாகும் போது இறுதி அணித்தெரிவுக்கு முதல் சில வாரங்கள் கொழும்பில் நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. கொழும்பில் இருந்து திரும்பி வந்தபோது அணி தெரிவாகி ஸ்டான்லிக் கல்லூரியுடன் புதிய பயிற்றுவிப்பாளர் ஜோன்சன் மாஸ்டர் தலைமையில் அடுத்த நாள் மோத தயாராக இருந்ததது. அப்போது என்னை அழைத்துச்சென்று நாளைய ஆட்டத்தில் இவனை நிச்சயம் சேர்க்கவும் என பரிந்துரைத்து என் வாழ்க்கையில் கிரிக்கெட்டின் பெரும் பயணத்தை பாலா அண்ணாவே ஆரம்பித்து வைத்தார். 

அதன்பின் ஜோன்சன் மாஸ்டர் எமக்காக போர்க்கால சூழலிலும் மைதானங்கள் இல்லாமல் போராடிய போதும் எம்மை சிறப்பாகப் பயிற்றுவித்தார். அப்போது கிரிக்கெட்டில் கல்லாக இருந்த என்னை சிலையாக மாற்ற சிறந்த பயிற்றுவிப்புக்களை சண்முகலிங்கம் எனும் சிறந்த பயிற்றுவிப்பாளர் வழங்கினார். யாழ்ப்பாணக் கிரிக்கெட் வரலாற்றில் சண்முகலிங்கம் அவர்களுக்காக தனி இடம் இருக்கின்றது. இன்னும் அம்பலவாணன், மித்திரன் என பழைய மாணவர்கள் எனக்கு ஒவ்வொரு படிநிலையிலும் பயிற்சி அளித்தனர். இறுதியில் அண்ணன் அருனோதயன் பயிற்சியில் மறக்கமுடியாத 1995ஆம் ஆண்டு வடக்கின் பெறும் சமரில் (யாழ் மத்திய கல்லூரி – சென்ஜோன்ஸ் கல்லூரி இடையிலான வருடாந்த போட்டி) ஆடினேன். அதன் பின்னர், 1996ஆம் ஆண்டு எமது இறுதி ஆண்டு வடக்கின் சமரில் விளையாடும் வாய்ப்பற்ற வேதனை இன்னமும் வலிக்கிறது. 

கே – உங்களது பாடசாலை கிரிக்கெட் பற்றி கூறுங்கள்?

எங்கள் பாடசாலையின் கிரிக்கெட் என்பது ஓர் வரலாறு. சிறந்த மைதானமும் ஆகச் சிறந்த வீரர்களையும் காலங்காலமாக உருவாக்கும் பாடசாலை. நான் குறைந்தது 250 பேரில் பாடசாலை அணிக்கு 15 பேரை தெரிவு செய்யும் காலத்தில் பயணித்தவன். 

எனது கல்லூரி கிரிக்கெட் வீரர்களை சிறந்த கௌரவத்துடன் பாதுகாக்கும் ஓர் பாடசாலை. வடக்கின் சமர் என இன்றுவரை பயணிக்கின்ற சிறந்த ஆட்டங்களை நிர்வகிக்கும் மத்திய கல்லூரியின் கிரிக்கெட் வீரன் என்பது சுவிட்சர்லாந்து தேசிய அணி வீரன் என்பதைவிட எனக்குப் பெருமை தருகின்றது.

இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து T20I குழாம் அறிவிப்பு: வில்லியம்சன் இல்லை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு ……..

கே – நீங்கள் பங்கேற்று விளையாடிய வடக்கின் சமர் கிரிக்கெட் தொடர்கள் பற்றி? 

முதன் முதலாக 1994ஆம் ஆண்டு வடக்கின் சமரில் மணிவண்ணன் தலைமையில் ஆடினேன். அடுத்த ஆண்டு ரவி சங்கர் தலைமையில் ஆடினேன். என்னுடைய இறுதி ஆண்டு அதாவது 1996ஆம் ஆண்டு வடக்கின் சமர் நாட்டின் அசாதாரண சூழல்நிலை காரணமாக நடைபெறவில்லை. 1994ஆம் ஆண்டு சிறந்த வீரர்களை உள்ளடக்கி இருந்தமையால் பந்துவீச்சு மட்டுமே எனக்கான பொறுப்பாக இருந்தது. மிகவும் சந்தோசமான வடக்கின் சமர் அது. 

சுவிஸ் தேசிய அணி வீரர்களுடன் திலீபன்

எனினும், 1995ஆம் ஆண்டு பொறுப்புக்களின் அளவு அதிகரித்ததது. இன்னும் 1995ஆம் ஆண்டு வடக்கின் சமர் மறக்க முடியாத போட்டியும் கூட. குறித்த வடக்கின் சமர் போட்டியில் 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் இழந்து எமது பாடசாலை அணி தடுமாறி 188 ஓட்டங்கள் வரை பயணித்தது. இப்போட்டியினை நண்பன் அமலன், சண்முகா, நிசாகரன், நான் என நால்வர் அணியை தூக்கி நிறுத்தினோம். மேலும், இந்தப்போட்டி எமது பாடசாலை கௌரவத்தையும் தூக்கி நிறுத்தியது. எமது ஆட்டத்தை கண்டு செய்தி இதழ் ஒன்றும் எங்களது பெயர்களை பிரசுரம் செய்தது மனம் மகிழ்ந்த விடயங்களில் ஒன்றாகும். 

கே – பாடசாலை கிரிக்கெட்டில் நீங்கள் ஏதாவது சாதனைகள் செய்துள்ளீர்களா? 

பாடசாலை கிரிக்கெட் காலங்களில் இன்னும் என் நினைவில் நிலைத்திருப்பது என் பந்துவீச்சுதான். பல ஆட்டங்களை என் பந்துவீச்சு மூலம் மாற்றியிருக்கின்றேன். 1994ஆம் ஆண்டு 19 வயதின் கீழ்ப்பட்ட அணிக்காக ஆடும் போது மகாஜன கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்த்தினோம். அதில் நான் மட்டும் 8 விக்கெட்டுக்கள் எடுத்தேன். அதே ஆண்டு புனித பத்திரிசியார் கல்லூரியுடன் இறுதி ஓவர் இறுதி ஆட்டக்காரர் ஒரு ஓட்டம் தேவை. குறித்த போட்டியில் இறுதி துடுப்பாட்ட வீரரை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தேன். இதற்காக மைதானத்தில் இருந்து பாடசாலை வரை இரசிகர்கள் என்னை தோள்களில் சுமந்து சென்ற சம்பவம் இனிமையானது. 

பின்னர், 1994ஆம் ஆண்டு அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளர் பட்டியலை பார்த்தபோது என் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது இதனைக் கண்டு மகிழ்ந்தேன்.

கே – பாடசாலை கிரிக்கெட் தவிர கழங்களுக்கு ஆடிய அனுபவம் எப்படி இருந்தது? 

பாடசாலையில் ஆடும் போதே பழைய மாணவர் அணிக்காக ஆடும் வாய்ப்பைப் பெற்றேன். பழைய மாணவர் அணிக்காக முதன்முதலாக 17 வயதில் நட்பாட்டம் ஒன்றில் பங்கு கொண்டு 10 ஓவர்கள் பந்துவீசி வெறும் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்தேன். இந்த பந்துவீச்சு பெறுதியே எனக்கான முதல் அடையாளமாக இருந்தது. அதுவே என்னை 1993ஆம் ஆண்டு வடக்கின் சமருக்கு 14ஆவது ஆட்டக்காரராகவும் குழுவில் பெயர்பெற வைத்தது. பாடசாலை முடிய முதலே நாட்டை விட்டு நீங்கியதால் யாழ்ப்பாணக் கழகங்களில் ஆட வாய்ப்பற்றுப் போனது.   

இலங்கையில் இருந்து லண்டன் சென்றபின் லண்டனில் பல கழகங்களில் ஆடினேன்.  அதில் கொன்கோர்ட் கிரிக்கெட் கழகம், ஸ்ட்ரீத்தம் மற்றும் மேர்ல்ப்ரோ கிரிக்கெட் கழகம் என்பன அவற்றில் முதன்மையானவை. தொடர்ந்து நன்கொடை ஒன்று சேகரிக்க நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரித்தானிய தமிழர்கள் அணியின் தலைவராக செயற்பட்டிருக்கின்றேன். 

கொழும்பு வெஸ்லிக்கு அதிர்ச்சி கொடுத்தது யாழ் மத்திய கல்லூரி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, கொழும்பு ………

கே – சுவிஸ் தேசிய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு எப்படி?

சுவிஸ் நாட்டுக்கு வந்த பின்னர் 2007ஆம் ஆண்டில் கொஸ்ஸனாய் கிரிக்கெட் கழகத்திற்காக ஸ்வீஸ் கிரிக்கெட் லீக்கில் ஆட ஆரம்பித்தேன். ஆரம்பத்திலேயே சுவிஸ் தேசிய அணிக்காக வாய்ப்பு வந்தாலும் என்னிடம் சுவிஸ் பிராஜவுரிமை இல்லாமையால் ஆடவில்லை. 

பின்னர் 2016ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டு பிராஜவுரிமை கிடைத்த பின்னர் 2017ஆம் ஆண்டு கொஸ்ஸனாய் கிரிக்கெட் கழகத்தில் எனக்கு சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது கிடைத்தது. அதன் மூலம் சுவிஸ் தேசிய அணிக்காக ஆடும் வாய்ப்பும் கிடைத்தது.  

கே – சுவிஸ் தேசிய கிரிக்கெட் அணியில் இணைந்த பின்னர்…..?

முதன் முதலாக சுவிஸ் தேசிய அணிக்காக மத்திய ஐரோப்பா போலாந்து T20 லீக்கில் ஆடினேன். அந்த ஆட்டத்தின் முதல் பந்துவீச்சாளனாக பந்துவீசினேன். குறித்த லீக்கில் சிறந்த பந்துவீச்சாளர் விருதுக்கு 2 விக்கெட்டுக்கள் குறைவாக இருந்தது. ஏனெனில், நான் ஒரு ஆட்டத்தில் விளையாடத்தவறினேன். தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இவ்வாண்டு ஆடிவருகின்றேன்.  

கே – சுவிஸ் தேசிய அணியில் எப்படி வீரர்கள் தெரிவு இடம்பெறுகின்றது?

சுவிஸ் தேசிய அணியை பொருத்தவரை ஒவ்வொரு கழகமும் சிறந்த ஆட்டக்காரரை பரிந்துரைக்கும். அவர்கள் சுவிஸ் கிரிக்கெட் லீக் ஆட்டங்களில் எப்படிப் பிரகாசிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து 80 சிறந்த ஆட்டக்காரர்களில் 15 பேர் தேசிய அணிக்கு தெரிவாகுவார்கள். அந்த அடிப்படையில் சுவிஸின் சிறந்த சுழல் பந்துவீச்சாளர் வரிசையில் தற்சமயம் நான் இருப்பதால் தேசிய அணி வாய்பைப் பெற்றேன். 

கே – சுவிஸ் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை பற்றி இன்னும் கூறுங்களேன்… 

சுவிஸ் நாட்டின் கிரிக்கெட்டை பொருத்தவரை மிக நீண்ட வரலாறு ஒன்று இருக்கின்றது. இங்கே கிரிக்கெட் கடந்த 200 ஆண்டுகளாக பயணிக்கின்றது. ஆனால், இப்போது மிக உச்சநிலை அடைந்திருக்கின்றது. கழகங்கள் தமக்கான சொந்த மைதானங்களை பெற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. 

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து வாழ் வீரர்களே இங்கே அதிகம். தற்சமயம் சுவிஸில் சர்வதேச பாடசாலைகள் கிரிக்கெட் ஆட்டங்களை சிறு வயது முதல் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கின்றனர். என்னுடைய கழகமும் 13 வயதுக்கு உட்பட்ட அணி, 15 வயதுக்கு உட்பட்ட அணி, 19 வயதுக்கு உட்பட்ட அணி என பல பகுதிகளாக விரிவாக்குகின்றது. கொஸ்ஸனாய் கிரிக்கெட் கழகத்தில் இருந்து என்னுடன் சேர்த்து ஐந்து பேர் வரையில் இதுவரை தேசிய அணிக்கு ஆடியிருக்கின்றோம். 

இந்த ஆண்டு எமது கிரிக்கெட் கழகம் 30ஆவது வருடத்தை மகிழ்வுடன் கொண்டாடுகின்றது. சுவிஸ் தேசிய அணி பல வெற்றிகளை ஐரோப்பிய கிரிக்கெட் சுற்றுத் தொடர்களில் பெற்றிருக்கின்றது. இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய ஐரோப்பா ஒருநாள் சம்பியன்ஷிப் தொடர் முக்கியத்துவமிக்கது. இந்த தொடரில் ஆடிய பதிவை எனக்கான கௌரவமாக கருதுகின்றேன். இந்த ஆண்டு ஜூன் மாதம் ப்ராகுவில் நடைபெற்ற மத்திய ஐரோப்பா T20 லீக்கிலும் ஆடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கே – வட மாகாணத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது ?

வடக்கின் கிரிக்கெட் வீரர்களுக்கு சொல்ல விரும்புவது நாங்கள் வாழ்ந்த காலங்களில் எங்கள் கிரிக்கெட் வாழ்வு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், இன்று நீங்கள் சாதிக்க நிறைய வாய்புகள் உள்ளன. தீவிர பயிற்சியோடு மட்டுமல்லாது அதைவிட தீவிரமாக இந்த விளையாட்டை நேசிக்க வேண்டும். சிறந்த வீரர்களை எமது நாடு பெறும் வாய்ப்பை வடக்கின் கிரிக்கெட் வீரர்கள் படைக்க வேண்டும்.  

பல்கலைக்கழக கிரிக்கெட் இறுதி மோதலில் யாழ், ஸ்ரீ ஜயவர்தனபுர அணிகள்

இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு ………

யாழ்ப்பாண மத்திய கல்லூரி நிச்சயமாக வல்லவர்களை படைக்கும் என்பதை பெருமையுடன் சொல்லக் கடமைப்படுகின்றேன். சுவிஸ் தேசிய அணியில் தெரிவாக 24 வயது நிரம்பியவர்களே போராடும் போது 42 வயதாகிய நான் தெரிவாகியது நான் யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் தயாரிப்பு என்ற காரணத்தினாலேயே அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? 

கே – நன்றி சொல்ல விரும்புபவர்கள் பற்றி? 

வளமாகவும் நலமாகவும் என்னை படைத்த தாய்க்கும் சிறப்பானவனாக என்னை உருவாக்கிய மத்திய கல்லூரிக்கும் கல்லாக இருந்த என்னை சிலையாக வடித்த என் பெருமையுள்ள அத்தனை பயிற்றுவிப்பாளருக்கும். இவ்வாறு என்னோடு பயணித்த, பயணிக்கின்ற அத்தனை கிரிக்கெட் வீரர்களுக்கும் எனது நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.

கே – ThePapare.com பற்றி ? 

ThePapare.com அத்தனை விளையாட்டுத்துறைக்கும் ஒற்றைப் புள்ளியாக வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது. இன்றும் என் பாடசாலையின் வடக்கின் பெரும் சமரை கண்முன்னே நேரலையாக காண பாதைதந்த உங்களுக்கு கோடி நன்றிகள். இன்னும், எனக்கான ஓர் பகுதியை உருவாக்கி பெருமை சேர்த்த ThePapare.com இற்கும் காலமெல்லாம் என் நன்றிகள்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<