இலங்கையை சர்வதேச மட்டத்தில் இரண்டு வகைப் போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருக்கும் திலகா ஜினதாச இலங்கை வலைப்பந்து அணியின் பிரதான பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திலகா ஜினதாச பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்டது குறித்து, இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் செயலாளரான ஜயந்தி சோமசேகரமினால் ThePapare.com இற்கு ஊர்ஜிதம் செய்யப்பட்டிருந்தது.
“ஆம், (ஜினதாசவின்) நியமனம் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தற்போது ஏற்கப்பட்டிருக்கின்றது. இதற்கான (வலைபந்து பயிற்சியாளர் இற்கான) தேர்வுகளை நாம் நவம்பரில் நடாத்தியிருந்தோம். அதில் இரண்டு விடயங்களில் தெளிவு பெற வேண்டி இருந்தது. தற்போது அவை அனைத்தும் சரியாகியிருக்கின்றன. எனினும், இன்னும் சில தனிப்பட்ட விடயங்களை நாம் நிபந்தனைகளாக திலகா ஜினதாசவிடம் வைக்க உள்ளோம். அது அவரை பாதிக்கும் விடயங்களாக இருக்காது“ என சோமசேகரம் ThePapare.com இற்கு கருத்து தெரிவித்திருந்தார்.
தேசிய வலைப்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த யசிந்த் விஜேசிங்க மற்றும் சோமித்த டி அல்விஸ் ஆகியோரினால், தேர்வுகள் இடம்பெற்ற பின்னர் ஆட்சேபனை ஒன்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இது தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மில்டன் அமரசிங்க தலைமையிலான குழு வலைப்பந்து பயிற்சியாளருக்கான தேர்வுகள் யாவும் நேர்த்தியான முறையில் இடம்பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தியது.
“இறுதியாக, இது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கின்றது. எனக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் கிடைத்திருக்கின்றது. நான் (தேசிய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு) பல தடவைகள் முயற்சி செய்திருந்தேன். ஒரு தடவை நான் ஏற்கப்படாமல் போயிருந்ததோடு, பல தடவைகள் பொருத்தமான தகுதிகள் இருந்த போதிலும் நான் கண்டு கொள்ளப்படவில்லை. எனினும், இதற்காக யாரிடம் முறையிட்டுக்கொண்டோ இதற்கான விளக்கங்கள் கேட்டுக்கொண்டோ இருக்கவில்லை. எனது கனவு, தாய் நாட்டுக்காக பயிற்றுவிப்பாளர் ஆகி, கடமை புரிவதே இதற்காக காத்துக் கொண்டிருந்தேன்“ என இலங்கை வலைப்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாச தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
டயலொக் ஜனாதிபதிக் கிண்ணம் கடான அணி வசம்
“அனைவரதும் ஆதரவுகள் கிடைக்கும் பட்சத்தில், திறமைமிக்க இலங்கை வீரர்கள் 2018 ஆம் ஆண்டில் தாம் இழந்த பெருமைகளை மீட்டுக்கொள்வார்கள். எமது பெருமைகளை மீண்டும் அடைந்து கொள்வதே எனது பிரதான இலக்கு. அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்“ என மேலும் ஜினதாச குறிப்பிட்டிருந்தார்.
திலகா ஜினதாச தேசிய வலைபந்து அணியை பயிற்றுவிப்பது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் இலங்கை வலைப்பந்து அணிக்கு பயிற்சியாளராக கடமையாற்றிய திலகா ஜினதாச அப்போது தான் பதவியேற்று ஆறு மாத காலங்களுக்குள்ளேயே 7 ஆவது தடவையாக மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியை சம்பியனாக்க உதவி செய்திருந்தார். அத்தோடு, அப்போதைய இலங்கை வலைபந்து அணி உலக தரவரிசையில் 14 ஆம் இடத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்றுவரை இவ்வாறானதொரு அடைவை இலங்கை மீண்டும் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 11 ஆவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையின் புதிய பயிற்றுவிப்பாளர் இப்படியானதொரு பதிவை மீண்டும் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1963 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி பிறந்த திலகா ஜினதாச, 1988 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இலங்கை சார்பாக பங்குபற்றிய இரண்டு மங்கைகளில் (தீபிகா சன்முகத்தோடு சேர்த்து) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. திலகா ஜினதாச 1984 தொடக்கம் 1991 காலப்பகுதியில் இலங்கையை தடகளப்போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருகின்றார்.
திலகா ஜினதாச 1985, 1987, 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தெற்காசிய சம்மேளன விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி பதக்கங்கள் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 100 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் புதிய தெற்காசிய சம்மேளன சாதனையோடு இவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு சேர்த்து அதே வருடத்தில் 4×100 மீட்டர் தடை தாண்டலில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டலில் வெண்கலமும் வென்றிருந்தார்.
விபுலானந்தன் ஞாபகார்த்த கிண்ணம் ஏழாவது முறையாக சென்றலைட்ஸ் வசம்
1985 ஆம் ஆண்டு தேசிய வலைப்பந்து அணிக்கு தெரிவு செய்யப்பட்ட திலகா ஜினதாச 1991 ஆம் ஆண்டு, தடகளப் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வை அறிவித்த பின்னர் வலைப்பந்து போட்டிகளில் மீண்டும் ஆர்வம் காட்டியிருந்தார். அவரின் தொடர் முயற்சிகளால் தேசிய அணியிலும் ஜினதாச இணைந்தார். இவர் பிரதிநிதித்துவம் செய்த இலங்கை அணி, 1993 ஆம் ஆண்டு ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது. திலகா ஜினதாச 1997 ஆம் ஆண்டு இலங்கை வலைப்பந்து அணியை தனது 34 ஆவது அகவையில் தலைமை தாங்கியிருந்த போது, நான்காவது ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி வெற்றியளராக ஆகியிருந்தது.
1998 ஆம் ஆண்டு, மாலை தீவு அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படத் தொடங்கிய திலகா, அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வலைப்பந்து பயிற்சியாளருக்குரிய சிறந்த அடைவுகளைப் (அவுஸ்திரேலியா தரம் 1, சிங்கப்பூர் தரம் 2) பெற்றிருந்தார். தற்போது திலகா ஜினதாச மூன்றாம் தரத்திற்குரிய சான்றிதழை அவுஸ்திரேலியாவில் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றார். 2009 ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை வென்ற பின்னர் புரூணே அணியின் வலைப்பந்து பயிற்சியாளராக திலகா ஜினதாச இன்றுவரை செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.