இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக மீண்டும் திலகா ஜினதாசவை நியமிக்க இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஹயசின்த் விஜேசிங்க கடந்த சில தினங்களுக்கு முன் தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் பதவிக்கு திலகா ஜினதாச மற்றும் முன்னாள் தேசிய வீராங்கனை சோமிதா டி அல்விஸ் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இந்த நிலையில், சி. ரத்னமுதலிகே, யசா ராமச்சந்திர மற்றும் சமன் குமார குணவர்தன ஆகியோர் தலைமையிலான குழுவின் முன்னிலையில் இடம்பெற்ற நேர்காணலின் பின்னர் திலகா ஜினதாச இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
- புதிய பயிற்சியாளரை தேடும் இலங்கை வலைப்பந்து அணி
- மத்திய ஆசிய மகளிர் கடற்கரை கரப்பந்தாட்டத்தில் சம்பியானகிய இலங்கை
- 2022 இல் இலங்கை விளையாட்டில் சாதித்த தமிழ் பேசும் வீரர்கள்
திலகா ஜினதாச இலங்கை வலைபந்தாட்ட அணியை பயிற்றுவிப்பது இது மூன்றாவது தடவையாகும்.
இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக கடமையாற்றிய திலகா ஜினதாச அப்போது தான் பதவியேற்று ஆறு மாத காலங்களுக்குள்ளேயே மலேசியாவில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதில் முக்கி பங்கு வகித்தார். அத்தோடு, அப்போதைய இலங்கை வலைபந்தாட்ட அணி உலக தரவரிசையில் 14 ஆவது இடத்தையும் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல. 2011 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக திலகா ஜினதாச பணியாற்றியதோடு, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்து தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகவும் அவர் பணியாற்றினார். எவ்வாறாயினும், 2020ஆம் ஆண்டு அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை அணி, இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்து தொடருக்கு தகுதி பெற்றது.
எனவே, குறித்த தொடருக்காக இலங்கை வலைப்பந்தாட்ட அணி தயாராகி வரும் நிலையில், இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள திலகா ஜினதாசவின் முதல் போட்டித் தொடராக உலகக் கிண்ண வலைப்பந்து தொடர் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<