அடுத்த வாரம் ஆரம்பமாகும் தென்னாபிரிக்க அணியுடனான T-20 தொடரில் விளையாடும் 15 பேர் கொண்ட இலங்கை வீரர்களின் குழாத்தினை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இக்குழாமில் ஆச்சரியமூட்டும் விதமாக, மஹிந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போது சிலாபம் மேரியன்ஸ் கழகத்திற்காக சகலதுறை ஆட்டக்காரராக விளையாடும் திக்ஷில டி சில்வாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சீம்(Seam) வேகப்பந்து வீச்சாளரான அவர், உள்ளூர் போட்டிகளில் அதிரடியாக ஆடக்கூடியவர். மேலும் அவர், 144.47 என்னும் ஓட்டவிகித சராசரியினையும் தன்னகத்தே வைத்துள்ளார்.
பர்ஹான் பெஹர்டீனின் தலைமையில் இலங்கையுடன் மோதவுள்ள தென்னாபிரிக்க T-20 அணி
இறுதியாக, கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் T-20 தொடர் ஒன்றினை விளையாடிய இலங்கை அணி அதனை 2-0 எனப் பறிகொடுத்திருந்தது. அத்தொடரில் இலங்கை குழாமில் இணைக்கப்பட்டிருந்த குசல் பெரேரா, திசர பெரேரா, சஜித்ர சேனநாயக்க, கசுன் ராஜித, மிலிந்த சிறிவர்தன, தசுன் ஷானக்க மற்றும் சாமர கபுகெதர ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
முன்வரிசை இடது கை துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் இத்தொடர் மூலம் அணிக்கு மீள்வருகை தந்திருக்கின்றனர். கடைசியாக 2016ஆம் ஆண்டு ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியொன்றில் விளையாடிய இசுரு உதானவிற்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனது திறமையை வெளிப்படுத்தி, இலங்கை அணிக்கு மீண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாகவே அவர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவர் இதுவரை 7 சர்வதேச T-20 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
அவுஸ்திரேலிய தொடரின் பின்னர் முழங்கால் தசை உபாதை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டிருந்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், இந்த T-20 தொடரில் மீண்டும் அணியை வழிநடாத்துவார். மேலும், இலங்கை அணியின் முண்ணனி வேகப்பந்து வீச்சாளர்களான நுவான் பிரதீப், சுரங்க லக்மால் ஆகியோரும் இத்தொடருக்காக குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்க சுற்றுத்தொடரில் இருந்து நீக்கப்பட்டார் மாலிங்க
நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், டெஸ்ட் தொடரினை அடுத்து நாடுதிரும்ப இருந்த லஹிரு குமார, T-20 தொடரினை அடுத்து இடம்பெற இருக்கும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவிலேயே தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
T-20 தொடருக்கான இலங்கை குழாம்
அஞ்சலோ மெதிவ்ஸ்(தலைவர்), தினேஷ் சந்திமால்(துணைத்தலைவர்), குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணத்திலக்க, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன, சஜித் பத்திரன, லக்ஷன் சந்தகன், திக்ஷில டி சில்வா, நுவான் குலசேகர, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், இசுரு உதான
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான T-20 தொடர்
முதல் போட்டி – ஜனவரி 20ஆம் திகதி – செஞ்சூரியன் மைதானம்
இரண்டாவது போட்டி – ஜனவரி 22ஆம் திகதி – ஜொகன்னஸ்பெர்க் மைதானம்
மூன்றாவது போட்டி – ஜனவரி 25ஆம் திகதி – கேப் டவுன்