பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் இடம்பெற்ற பிரீமியர் லீக் சம்பியன்ஷிப் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) தொடரின் போட்டியொன்றில் பதுளை கொம்ரட்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் திஹாரிய யூத் அணிகள் மோதிக் கொண்டன. இப்போட்டியின்போது முறைகேடாக நடந்து கொண்ட பார்வையாளர்களினால் திஹாரிய யூத் அணி வீரர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெலிஓய – ரெட் சன் இடையிலான போட்டி ஆரம்பிக்க முன்னரே இடைநிறுத்தம்
இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 ( பிரிவு 1) கால்பந்து சுற்றுப்போட்டியில், கெலிஓய…
எமக்கு கிடைத்த தகவல்களின் படி, போட்டி நிறைவடைய சில நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் திஹாரிய யூத் வீரர் ஒருவரிற்கு நடுவரினால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டுள்ளது. குறித்த முடிவு தொடர்பாக திஹாரிய யூத் வீரர்கள் நடுவரிடம் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த போது பார்வையாளர்கள் மைதானத்தை ஆக்கிரமித்து அவ்வணியின் வீரர்களை தாக்கியுள்ளனர். எனினும் மற்றுமொரு தகவலின்படி, திஹாரிய யூத் வீரர்கள் முதலில் நடுவரை தாக்கியதாகவும் அதன் காரணமாகவே பார்வையாளர்கள் மைதானத்திற்குள் நுழைந்து அவ்வீரர்களை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திஹாரிய யூத் கழகத்தின் செயலாளர் மொஹமட் அஸ்கர் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “போட்டியின் ஆரம்பம் முதலே எதிரணியினால் (கொம்ரட்ஸ் விளையாட்டுக் கழகம்) மைதானத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படாமை தொடர்பில் நாம் நடுவரிடம் முறையிட்டிருந்தோம். எனினும் அவர் எமது கோரிக்கையை உதாசீனப்படுத்தி போட்டியை ஆரம்பித்தார். போட்டியின் போது எமது வீரர்கள் மீது கற்களை வீசி தாக்கியிருந்தனர். எதிரணி கோல் ஒன்றை பெற்றுக் கொண்ட போது உதவி நடுவர் ஓப்சைட் காரணமாக அதனை நிராகரிப்பதாக கொடியை உயர்த்தி சைகை வழங்கினார். எனினும் பின்னர் பார்வையாளர்களின் அச்சுறுத்தலின் காரணமாக அவர் கொடியை தாழ்த்தி கோல் செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தார்,” எனத் தெரிவித்தார்.
Highlights – Super Sun SC v Blue Star SC – DCL17 (Week 1)
Uploaded by ThePapare.com on 2017-09-08.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “அதன் பின்னரும் போட்டியை நடாத்த உகந்த சூழ்நிலை இல்லை என்பதை நடுவர் உதாசீனப்படுத்தி இரண்டாம் பாதி ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார். நடுவரினால் போட்டி ஆரம்பிக்கப்பட்டமை பிழையானது. இது தொடர்பில் நாம் இலங்கை கால்பந்து சம்மேளனத்திடம் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளோம்,” என்றார்.
தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது யாழ் சென் மேரிஸ்
இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 (பிரிவு 1) கால்பந்து சுற்றுத் தொடரின் யாழ்ப்பாணம், அரியாலை…
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் விதிமுறைகளின்படி போட்டியை நடாத்தும் அணி போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்திற்கொண்டு போட்டியை ஆரம்பிக்கவும் நிறுத்தவும் நடுவருக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வினவ நாம் கொம்ரட்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தை தொடர்பு கொண்ட போதிலும், அவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை.