தேசிய வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவின் பதவிக்காலம் 2020 வரை நீடிப்பு

185

இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாஸவின் பதவிக்காலம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நேற்று (05) அவருக்கான நீடிப்பு கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.

இதற்கமைய அவரின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைப்பந்தாட்ட போட்டித் தொடர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்

உலக வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த ஜுன் மாதம் 30ஆம்…

தொடர் தோல்விகள், பின்னடைவுகள் மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில் இளம் வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணியை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகரவின் வேண்டுகோளுக்கு அமைய முன்னாள் பயிற்றுவிப்பாளரான திலகா ஜினதாச கடந்த வருடம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து கடந்த செப்டெம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரை இலக்காகக் கொண்டு சுமார் ஏழு மாதங்களாக பெற்றுக்கொண்ட பயிற்சிகளின் பிரதிபலனாக இலங்கை அணி ஐந்தாவது தடவையாக, அதாவது 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இலங்கை அணியின் குறுகிய கால மீள் எழுச்சிக்கும், இந்த வெற்றிக்கும் முக்கிய காரணமாக திலகா ஜினதாச இருந்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இந்த நிலையில், இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் யாப்புக்கு அமைய பயிற்சியாளரது சேவைக்காலம் ஒரு வருடத்துக்கு உட்பட்டதாக வரையறுக்கப்பட்டு இருந்த காரணத்தால் திலகா ஜினதாசவின் பதவிக்காலம் கடந்த வாரம் நிறைவுக்கு வந்தது.

எனவே, ஆசிய வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அணியை வெற்றி பெற வைத்தமை, பிளவுபட்டு இருந்த வீராங்கனைகளை ஓர் அணியாக கட்டியெழுப்பியமை உள்ளிட்ட விடயங்களை எல்லாம் கருத்திற் கொண்டு அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டித் தொடர் வரை அவருக்கான சேவைக்காலத்ததை நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றையெல்லாம் கருத்திற் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, 25ஆம் இலக்க விளையாட்டுத்துறை யாப்பின் 39(1) பிரிவின்படி விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அவருக்கான பதவி நீடிப்பை இன்னும் 2 வருடங்களுக்கு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கருத்து வெளியிடுகையில், ”அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளை இலக்காகக் கொண்டு திலகா ஜினதாசவின் சேவையை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அத்துடன், மிகக் குறுகிய கால பயிற்சி மற்றும் குறைந்தளவு வசதிகளுடன் எமது வலைப்பந்தாட்ட அணி ஆசிய சம்பியன் பட்டத்தை வென்றது. எனவே வலைப்பந்தாட்ட அணிக்கு கிடைக்கின்ற வசதிகள் தொடர்பில் என்னால் திருப்தி அடைய முடியாது. எனவே அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளுக்கு முன் அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

வடக்கின் கில்லாடி யார்? பெனால்டியில் றோயலை வென்ற பாடும்மீன் இறுதிப்போட்டிக்கு

Thepapare.com இன் ஊடக அனுசரணையில் அரியாலை சரஸ்வதி..

அத்துடன், உலக தரவரிசையில் இலங்கை அணியை முன்னிலை அணியாக கொண்டு வருவதற்கான மன உறுதியும், சக்தியும் அவருக்கு கிடைக்க வேண்டும் என வாழ்த்துக்களையும்” அவர் தெரிவித்தார்.

இதேநேரம், தனது பதவி நீடிப்பு குறித்து திலகா ஜினதாச கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த இந்த பொறுப்பை 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் செய்து இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் வளர்ச்சிக்கு எனது முழு பங்களிப்பினையும் வழங்குவேன்” என தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடருக்கு இந்த மாத இறுதியில் இருந்து பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். குறித்த தொடரில் முதல் 10 அணிகளுக்குள் இடம்பெறுவதே எமது முதல் குறிக்கோளாகும். அதற்காக நாம் ஓர் அணியாக செயற்பட வேண்டியது தொடர்பில் அவதானத்துடன் இருப்பேன். அதுமாத்திரமின்றி, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

ஒன்பது வருடகால கசப்பான அனுபவத்தை மறந்துவிட்டு புதிய எதிர்பார்ப்புடன், புதிய அணியாக திலகா ஜினதாசவின் பயிற்றுவிப்பின் கீழ் கட்டியெழுப்பப்பட்ட இலங்கை அணி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு இலங்கைக்கு பெருமையையும், கௌரவத்தையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என ThePapare.com வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க