இலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் நேரடியாக சென்று கலந்துரையாடியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பணிப்புக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக முத்தையா முரளிதரன் இடம்பிடித்துள்ளார்.
Read : SLCயில் மாற்றத்தை ஏற்படுத்த நீதிமன்றத்தை நாடிய முரளிதரன்!
இந்தநிலையில், முத்தையா முரளிதரன் இன்றைய தினம் (15) இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டு கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் 30 வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் சிலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
குறித்த இந்த சந்திப்பின் போது, இலங்கை அணியின் வீரர்களின் திறமையில் எந்தவித சந்தேகங்களும் இல்லை என்பதை முத்தையா முரளிதரன் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
“வீரர்களின் திறமையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அத்துடன், சிறந்த சகலதுறை வீரர்கள் உள்ளனர். குறிப்பாக என்றும் இல்லாத அளவு இலங்கை அணியில் சகலதுறை வீரர்கள் உள்ளனர்.
T20 போட்டிகளை பொருத்தவரை, குறிப்பாக சகலதுறை வீரர்களில் தெரிவுகள் அதிகமாக உள்ளன. வேகப்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரர்கள் உள்ளனர். சுழல் பந்துவீசக்கூடிய சகலதுறை வீரர்கள் உள்ளனர். எனவே, தற்போது வீரர்களாகிய நீங்கள் (இலங்கை வீரர்கள்) உலக வெற்றியாளர்களாக மாறவேண்டும்.
துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும், ஓய்வுபெறும் போது 30 அல்லது 40 சதங்களை பெறவேண்டும் என நினைக்க வேண்டும். வீரர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு இலக்கினை வைக்கும் போது, அணியின் வெற்றிவாய்ப்பு 50 தொடக்கம் 60 சதவீதம் அதிகமாகும்” என குறிப்பிட்டார்.
அதேநேரம், முரளிதரன் விளையாடும் காலப்பகுதிக்கும், இப்போது விளையாடுவதற்கும் வித்தியாசம் இருந்தாலும், கிரிக்கெட் விளையாடுவதற்கான அணுகுமுறை ஒன்றுதான் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க