சமநிலையில் நிறைவுற்ற ஸாஹிரா – மகாஜனா இடையிலான விறுவிறுப்பான மோதல்

581

ThePapare.com இன் அனுசரணையில் இடம்பெறும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இன்று (12) இடம்பெற்ற கொழும்பு ஸாஹிரா மற்றும் யாழ்ப்பாணம் மகாஜனாக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான மிகவும் விறுவிறுப்பான மோதல் 1-1 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவுற்றது.

இந்த தொடரில் C குழுவில் இடம்பெறும் இவ்விரு அணிகளும், தொடரில் மோதும் முதல் போட்டியாக இந்த ஆட்டம் அமைந்தது. போட்டி, கொழும்பு ராஜகிரிய ஜனக ரனவக்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

புனித பேதுரு கல்லூரிக்கு அதிர்ச்சி கொடுத்த கிந்தொட்டை ஸாஹிரா கல்லூரி

தற்பொழுது இடம்பெற்று வரும் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித்…

போட்டியின் 5ஆவது நிமிடத்தில் மகாஜனா வீரர்களின் எல்லையில் கிடைத்த ப்ரீ கிக்கின்போது ரஷீட் மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தை தனிமையில் இருந்து பெற்ற 19 வயதின் கீழ் தேசிய அணி வீரர் மொஹமட் ஆகிப் இலகுவாக கோலுக்குள் செலுத்தி போட்டியின் ஆரம்பத்திலேயே ஸாஹிரா அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து எதிரணியின் பாதியில் வைத்து கிடைத்த பல ப்ரீ கிக் வாய்ப்புக்களை ஸாஹிரா வீரர்கள் சிறப்பாக நிறைவு செய்யத் தவறினர்.

ஆட்டத்தின் 15 நிமிடங்களின் பின்னர் யாழ்ப்பாண வீரர்களின் வேகம் சற்று அதிகரித்தது. அவ்வணியின் பந்துப் பரிமாற்றங்கள் மிகவும் வேகமாக அமைந்தன.

மீண்டும் 23ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோலுக்கு நேர் எதிரே ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின் போது உள்ளனுப்பப்பட்ட பந்து ஒரு வீரரின் உடம்பில் பட்டு கோலை நோக்கி சென்றுகொண்டிருக்கையில், மகாஜனா கோல் காப்பாளர் லக்ஷான் பந்தைத் தட்டி விட்டார். மீண்டும் ஸாஹிரா வீரர்கள் பந்தைப் பரிமாற்றம் செய்து கோலுக்குள் செலுத்துகையில் வேகமாக வந்த லக்ஷான் எதிரணியின் அடுத்த முயற்சியையும் தடுத்தார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் கனுஜன் முன்னோக்கி பந்தை எடுத்துச் சென்று ஸாஹிரா பின்கள வீரர்களையும் தாண்டி பெனால்டி எல்லைக்குள் வந்து சஜீபனிடம் பந்தைப் பரிமாற்றம் செய்தார். அவர் கோலுக்கு எடுத்த முதல் முயற்சி தடுக்கப்பட, மீண்டும் தன்னிடம் வந்த பந்தை கெஸ்றோவிடம் வழங்கினார். கெஸ்றோ அதனை கோலின் இடது பக்கத்தினூடாக வலைக்குள் செலுத்தி ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.

மீண்டும் 27ஆவது நிமிடத்தில் மகாஜனா வீரர்கள் எதிரணியின் பெனால்டி பெட்டியினுள் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்தை ஸாஹிரா கோல் காப்பாளர் ஸாகிர் வெளியே தட்டிவிட்டார்.

ThePapare சம்பியன்ஷிப் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி

குதிரைப்பந்தய திடல் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ThePapare கால்பந்து…

34ஆவது நிமிடத்தில் மகாஜனா வீரர்களின் தடுப்பின்போது மிகவும் உயர்ந்த பந்து அவ்வணியின் கோல் திசையை நோக்கி சென்று கொண்டிருக்கையில், லக்ஷான் வேகமாக வந்து பந்தை பாய்ந்து பற்றிக்கொண்டார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் அவ்வணியினர் மேற்கொண்ட முயற்சியை ஸாஹிரா பின்கள வீரர்கள் தடுத்தனர். குறித்த நேரத்தில் இரு அணிகளது விளையாட்டின் வேகமும் ஆட்டத்தின் முன்னிலை கோலுக்கான முயற்சிகளாகவே இருந்தன.

முதல் பாதியின் 45 நிமிடங்கள் கடந்த நிலையில் மகாஜனா அணியின் பெனால்டி எல்லையில் வைத்து அவ்வணியின் பின்கள வீரரால் ஸாஹிரா வீரர் மொஹமட் முர்ஷித் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். எனவே கொழும்பு வீரர்களுக்கு வழங்கப்பட்ட பெனால்டியின்போது முர்ஷிட் உதைந்த பந்தை கோல் காப்பாளர் லக்ஷான் பாய்ந்து தடுத்தார். இதன் போது மீண்டும் ஸாஹிரா வீரர்கள் அடுத்தடுத்து மேற்கொண்ட முயற்சிகளையும் தடுத்த லக்ஷான் இறுதியில் பந்தைப் பற்றிக்கொண்டார்.

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 1 – 1 மகாஜனாக் கல்லூரி

இரண்டாவது பாதியில் ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த முதல் ப்ரீ கிக்கின் போது உதையப்பட்ட பந்தை லக்ஷான் தனது கைகளால் குத்தி வெளியேற்றினார்.

55ஆவது நிமிடம் மகாஜனா வீரர் கனுஜன், ஸாஹிரா அணியின் பெனால்டி எல்லையின் இடது புறத்தில் இருந்து கோலுக்கு எடுத்த முயற்சியின்போது, கோல் காப்பாளர் ஸாகிரின் கைகளுக்கே பந்து சென்றது.

அதனைத் தொடர்ந்து ஸாஹிரா வீரர் சாஜித் தனக்கு வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்போது கோலுக்கு எடுத்த முயற்சியின்போது, கம்பங்களை விட்டு பந்து வெளியே சென்றது.

 போட்டியை மீண்டும் பார்வையிட 

ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் மகாஜனா வீரர்கள் தமது எல்லையில் இருந்து பந்தை எடுத்து வந்து ஸாஹிரா வீரர்களின் கோல் பரப்பில் வைத்து வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்போது, ஸாகிர் வேகமாக வந்து பந்தை பற்றிக்கொண்டார்.

போட்டியின் 70 நிமிடங்கள் கடந்த நிலையில் ஆகிப் உள்ளனுப்பிய பந்தை முர்ஷிட் கோலுக்கு அண்மையில் இருந்து ஹெடர் செய்ய, மகாஜனா கோல் காப்பாளரால் பந்து தட்டி வெளியேற்றப்பட்டது.

அடுத்த 6 நிமிடங்களில் மகாஜனா வீரர்கள் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை அவ்வணியின் ஜாம்சன் பெனால்டி எல்லையில் இருந்து கோலுக்காக உயர்த்தி செலுத்துகையில், கோல் காப்பாளர் ஸாகிரின் கைகளில் பட்டு, கோலின் மேல் கம்பத்தில் பட்டு பந்து மீண்டும் மைதானத்திற்குள் வந்தது.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தில் ஸாஹிரா அணி வீரர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருந்தது. எனினும், யாழ் பின்கள வீரர்களின் தடுப்பாட்டம் பலம் கொடுக்க கொழும்பு வீரர்களுக்கு முன்னிலைக்கான கோலைப் பெற முடியாமல் போனது.

ஆட்டம் நிறைவடையும் தருவாயிலும் ஸாஹிரா வீரர்கள் தமக்கு எதிரணியின் பாதியில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்புக்களையும் சிறந்த முறையில் பயன்படுத்தத் தவறியமையினால், முதல் பாதியில் பெற்ற இரண்டு கோல்களுடன் ஆட்டம் சமநிலையடைந்தது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 1 – 1 மகாஜனாக் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி – மொஹமட் ஆகிப் 5′

மகாஜனாக் கல்லூரி – கெஸ்றோ 25′

மஞ்சள் அட்டை 

மகாஜனாக் கல்லூரி – S. சஜீபன் 31′, கனுஜன் 53′, ஜக்சன் 90′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க