Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 சுற்றுத்தொடரின் முதல் வாரத்திற்காக வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் அல் அக்ஸா மற்றும் புனித ஹென்ரியரசர் கல்லூரிகள் வெற்றி பெற, தர்மதூத மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான மற்றொரு மோதல் சமநிலையில் முடிவடைந்தது.
புனித பெணடிக்ஸ் கல்லூரி எதிர் அல் அக்ஸா கல்லூரி
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரிக்கு எதிரான இந்தப் போட்டியை கொழும்பு புனித பெணடிக்ஸ் கல்லூரி தமது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. முதல் பாதியில் சொந்த மைதான தரப்பினர் தமக்கு கிடைத்த கோல் வாய்ப்புக்களை தவறவிட, சகீல் மூலம் அல் அக்ஸா வீரர்கள் தமக்கான முதல் கோலைப் பெற்று முதல் பாதியில் முன்னிலையடைந்தனர்.
- வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த சென் ஜோசப், ஹமீட் அல் ஹுசைனி
- ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 இந்த வாரம் ஆரம்பம்
- மீண்டும் கலைகட்டவுள்ள Deedat ஸாஹிரா சூப்பர் 16 – 2022
- சிறந்த திட்டமின்றி இலங்கை கால்பந்தை முன்னேற்ற முடியாது – அமானுல்லா
எனினும், இரண்டாம் பாதி ஆரம்பித்து 15 நிமிடங்களில் சலஹச புனித பெணடிக்ஸ் கல்லூரிக்கான கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார். அந்த கோல் பெறப்பட்டு 17 நிமிடங்களில் அல் அக்ஸா வீரர் அப்னாஸ் அடுத்த கோலையும் பெற, ஆட்ட நிறைவில் 2-1 என வெற்றி பெற்ற கிண்ணியா வீரர்கள் எதிரணியின் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் பெற்ற வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தனர்.
முழு நேரம்: புனித பெணடிக்ஸ் கல்லூரி 1 – 2 அல் அக்ஸா கல்லூரி
கோல் பெற்றவர்கள்
புனித பெணடிக்ஸ் கல்லூரி – பசுர சலஹச 60’
அல் அக்ஸா கல்லூரி – மொஹமட் சகீல் 42’, மொஹமட் அப்னாஸ் 77’
தர்மதூத கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி
கொழும்பு புனித பேதுரு கல்லூரி மற்றும் பதுளை தர்மதூத கல்லூரிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி பதுளை வின்சண்ட் டயஸ் அரங்கில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
ஆட்டம் ஆரம்பித்து 5 நிமிடங்கள் செல்வதற்குள் புனித பேதுரு வீரர் பேர்மன் போட்டியின் முதல் கோலைப் பெற்றார். பதிலுக்கு ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் சிபான் கலீல், தர்மதூத அணிக்கான கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார்.
போட்டி இறுதிவரை மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில் தலா ஒரு கோல்களுடன் ஆட்டம் சமநிலையடைந்தது.
முழு நேரம்: தர்மதூத கல்லூரி 1 – 1 புனித பேதுரு கல்லூரி
கோல் பெற்றவர்கள்
தர்மதூத கல்லூரி – சிபான் கலீல் 13’
புனித பேதுரு கல்லூரி – பேர்மன் 4’
புனித ஹென்ரியரசர் கல்லூரி எதிர் கம்பளை ஸாஹிரா கல்லூரி
யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் ரொனால்ட் கிளைமன் புனித ஹென்ரியரசர் கல்லூரிக்கான முதல் கோலைப் பெற்றார்.
தொடர்ந்து இரண்டாம் பாதியில் ஜதுசன் இரண்டு கோல்களையும், கனிஜூட் ஒரு கோலையும் புனித ஹென்ரியரசர் அணி சார்பாக போட, விருந்தினரான கம்பளை ஸாஹிரா அணிக்காக ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் மிஹ்ரான் ஒரு கோலைப் பெற்றார்.
எனவே, ஆட்ட நிறைவில் இளைய வீரர்களை அதிகமாகக் கொண்ட புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி பெற்றது.
முழு நேரம்: புனித ஹென்ரியரசர் கல்லூரி 4 – 1 கம்பளை ஸாஹிரா கல்லூரி
புனித ஹென்ரியரசர் கல்லூரி – ரொனால்ட் கிளைமன் 25’, M ஜதுசன் 56’ & 82’, S கனிஜூட் 86’
கம்பளை ஸாஹிரா கல்லூரி – M மிஹ்ரான் 85’
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<