போராடித் தோற்றது புனித பத்திரிசியார்; சென் ஜோசப் இறுதிப் போட்டியில்

627

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்பின் 2022 தொடரின் முதல் அரையிறுதியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை 1-0 என வெற்றி கொண்ட கொழும்பு சென் ஜோசப் கல்லூரி அணியினர் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற ஒரு அரையிறுதியில் புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்கள் களுத்தறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியை யாழ்ப்பாணம் துரையப்பா அரங்கில் வைத்து 2-0 என வெற்றி கொண்டனர்.

அதேபோன்று, மற்றொரு அரையிறுதியில் புனித ஜோசப் கல்லூரி வீரர்கள் 2-0 என்ற கோல்கள் கணக்கில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு தெரிவாகினர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (11) பெத்தகானை இலங்கை கால்பந்து பயிற்சி நிலைய மைதானத்தில் ஆரம்பமான இந்த அரையிறுதிப் போட்டியின் முதல் 20 நிமிடங்களுக்குள் சென் ஜோசப் வீரர் பெதம் கிம்ஹான் எதிரணியின் திசையில் ஒரு எல்லையில் இருந்து, தடுப்பு வீரர்களையும் தாண்டி கோல் எல்லைவரை பந்தை எடுத்துச் சென்று கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

எனினும், அதன் பின்னர் புனித பத்திரிசியார் வீரர்கள் கோலுக்கு மேற்கொண்ட சிறந்த முயற்சிகள் கோலாகாமல் நிறைவுபெற்றன. எனவே, முதல் பாதி நிறைவில் சென் ஜோசப் வீரர்கள் ஒரு கோலினால் முன்னிலை பெற்றனர்.

தொடர்ந்த இரண்டாம் பாதியின் ஆம்பத்தில் இருந்து புனித பத்திரிசியார் வீரர்கள் போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் இதன்போது எடுத்த பல கோல் முயற்சிகளை சென் ஜோசப் கோல் காப்பாளர் தரூஷ ரஷ்மிக சிறப்பாகத் தடுத்தார்.

போட்டியின் 85வது நிமிடத்தில் சென் ஜோசப் அணியின் முக்கிய வீரரான டேவிட் கருனாரத்ன சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனவே, 10 வீரர்களுடன் எஞ்சிய நேரத்தை விளையாடிய அவ்வணியினர் எதிரணிக்கு கோல் எதனையும் போட விடாமல் தடுத்தனர்.

எனவே, போட்டி நிறைவில் பெதும் கிம்ஹானின் கோலினால் 1-0 என வெற்றி பெற்ற சென் ஜோாசப் வீரர்கள் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் 2022 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

முழு நேரம்: சென் ஜோசப் கல்லூரி 1 – 0 புனித பத்திரிசியார் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

  • சென் ஜோசப் கல்லூரி – பெதும் கிம்ஹான்

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<