கிங்ஸ்வூட் கல்லூரியை இலகுவாக வென்றது யாழ் மத்திய கல்லூரி

177

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இரண்டாவது வார போட்டியில் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அணியினை  தொடரில் அறிமுக அணியான யாழ் மத்திய கல்லூரி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டது.  

இலங்கையின் முதல் தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்து நடாத்தும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பாடசாலை அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் கடந்த வாரம் ஆரம்பமாகியிருந்தது.  தொடரின் இரண்டு போட்டிகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நிறைவுக்கு வந்தன. 

ஸாஹிராவுக்கு இலகு வெற்றி: நடப்புச் சம்பியனை சமன் செய்த றோயல் கல்லூரி

பாடசாலை அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்…

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி எதிர் யாழ் மத்திய கல்லூரி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற குழு A இற்கான மோதலில் முதலாவது வார போட்டியில் கம்பளை ஸாஹிரா கல்லூரி அணியை 2-0 என வெற்றிகொண்ட அறிமுக அணியான யாழ் மத்திய கல்லூரியினர், முதலாவது போட்டியில் றோயல் கல்லூரிக்கு எதிராக 2-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்த கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியினரும் போட்டியிட்டிருந்தனர். 

போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் மத்திய கல்லூரியின் ஜேசுராஜ் கோலினை நோக்கி உள்ளனுப்பிய பந்தினை பத்தும் மதுமால் வெளியில் அனுப்ப முயற்சிக்கையில் அது கோலாக மாறியது. 

தொடர்ந்தும் பந்தை தம் கட்டுபாட்டில் வைத்திருந்த மத்திய கல்லூரியின் முன்னிலையினை இரட்டிப்பாக்கும் சந்தர்ப்பம் அபிமன்யுவின் பந்துப்பரிமாற்றம் மூலம் கிடைத்தபோதும் ஜேசுராஜ் உதைந்த பந்து கோலிற்கு மேலாக செல்ல வாய்ப்பு நழுவியது. 

தொடர் முயற்சிகளை அடுத்து மத்திய கல்லூரியின் கோல் பரப்பினை ஆக்கிரமித்த கிங்ஸ்வூட் அணிக்காக இஷான் அடுத்தடுத்து இருசந்தர்ப்பங்களை உருவாக்கியபோதும் அதனை கோலாக்கத் தவறினார். 

22ஆவது நிமிடத்தில் கிங்ஸ்வூட் கல்லூரியின் கோல்காப்பாளரை ஏமாற்றி பந்தை வலையினுள் செலுத்தி மத்திய கல்லூரியினை இரண்டு கோல்களால் ஆர்த்திகன் முன்னிலைப்படுத்தினார். 

தொடர்ந்தும் பந்தை மத்திய கல்லூரி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும், முதலாவது பாதியின் இறுதி நேரத்தில் கிங்ஸ்வூட் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கினை கோலாக மாற்றினார்.

முதல் பாதி: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 2 – 1 கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி 

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே யாழ் வீரர்களின் கோல்பரப்பினை கண்டி வீரர்கள் ஆக்கிரமித்தனர். எனினும் அவர்களது கோல் முயற்சிகளை யாழ் வீரர்கள் சிறப்பாக தடுத்தனர். 

மத்திய கல்லூரியின் விக்னேஷ் லாவகமாக மேற்கொண்ட இரு முயற்சிகளையும் அபாரமான முறையில் எதிரணி கோல்காப்பாளர் ரத்னாயக்க தடுத்தார். 

பெனால்டி எல்லையினுள் மத்திய  கல்லூரியின் பின்கள வீரரால் கிங்ஸ்வூட் வீரர் வீழ்த்தப்பட கிடைக்கப்பெற்ற பெனால்டி உதையினை நேர்த்தியாக பயன்படுத்தி பத்தும் மதுமால் கோல் கணக்கினை சமன் செய்தார்.

69ஆவது நிமிடத்தில் ஜேசுராஜ் மைதானத்தின் இடது பக்கத்திலிருந்து கோலினை நோக்கி உதைந்த பந்தை பிடிக்க முயன்ற கோல்காப்பாளரிடமிருந்து நழுவிய பந்தை விக்னேஷ் கோலாக்கினார். 

போட்டி நிறைவுறும் தருவாயில் யாழ் தரப்பிற்கு கிடைத்த கோணர் கிக்கினை ஜேசுராஜ் உதைய ஹடர் மூலம் ஆர்த்திகன் கோலாக மாற்றினார். 

பங்கபந்து தங்க கிண்ண தொடருக்கான இலங்கை குழாமில் புதிய வீரர்கள்

பங்களாதேஷில் இந்த மாதம் 15ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள…

இன்றைய வெற்றியுடன் தொடரில் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பதிவு செய்து குழு A இல் யாழ் மத்திய கல்லூரி முன்னிலை பெற்றுள்ளது. 

முழு நேரம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 4 – 2 கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி 

கோல் பெற்றவர்கள் 

  • யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – ஜேசுராஜ் 2’, ஆர்த்திகன் 22’  & 90’, விக்னேஷ் 69’
  • கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி – கோறளகே 41’, பத்தும் மதுமல் 65’ 

புனித பத்திரிசியார் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி, கட்டுனெரிய

குழு B இல் நிரலிடப்பட்டுள்ள கடந்த வருட அரையிறுதி போட்டியாளரான புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர்  கட்டுனெரிய புனித செபஸ்டியன் கல்லூரிக்கெதிரான போட்டியை ஆரம்பித்துள்ளனர். போட்டியின் முதல் பாதி முழுவதுமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த புனித பத்திரிசியார் கல்லூரியினர் 4 கோல்களை பதிவு செய்தனர். இரண்டாவது பாதியில் தமது ஆட்டத்தினை உத்வேகப்படுத்திய விருந்தினர்களான புனித செபஸ்டியன் கல்லூரியினர் 3 கோல்களை பதிவு செய்தபோதும் பத்திரிசியார் கல்லூரி மேலும் 2 கோல்களைப் பதிவு செய்து போட்டியை 5-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டனர்.  

கோல் பெற்றவர்கள் 

  • புனித பத்திரிசியார் கல்லூரி – பவிராஜ் 14 ‘ , 45’+1’, ஷரோன்  39 ‘, சாந்தன் 40’, ஜோன்ஸ் லோஜாஸ் 89’ 
  • புனித செபஸ்டியன் கல்லூரி – றசாண்ட டில்றுக்ச 52’, திலான் இஷார 69’, சஹான் கவிந்த 77’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<