Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஸாஹிரா தகுதி

188

Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் 2019 தொடரின் அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம், புனித பத்திரிசியார் கல்லூரியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய கொழும்பு, ஸாஹிரா கல்லூரி அணி, புனித பேதுரு கல்லூரிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

கொழும்பு, குதிரைப்பந்தய திடல் அரங்கில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியாக இன்று (19) நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே, 19 வயதின்கீழ் தேசிய அணி வீரர் மொஹமட் சாஜித்தின் இரட்டை கோல் மூலம் முன்னிலை பெற்ற ஸாஹிரா கல்லூரி சார்பில் இரண்டாவது பாதியில், தேசிய அணி வீரர் மொஹமட் ஆகிப் அபார கோல் ஒன்றை புகுத்தினார்.

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்: யாருக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு?

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இரண்டாவது…

மறுபுறம், புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் தொடர் உபாதைகளுக்கு முகம்கொடுத்ததோடு 71 ஆவது நிமிடத்தில் தியாஸ் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் 10 வீரர்களுடனேயே அவர்களுக்கு ஆட வேண்டி ஏற்பட்டது.

தனது வலுவான 11 வீரர்களுடன் களமிங்கிய ஸாஹிரா கல்லூரி போட்டியின் ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அடிக்கடி புனித பத்திரிசியார் கல்லூரி கோல் பகுதியை ஆக்கிரமித்த அந்த அணிக்கு 08 ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. 

அணித்தலைவர் ரூமி ராசா கச்சிதமாக பந்தை பரிமாற்றியபோது எதிரணி பின்கள வீரர்களை தாண்டி பந்தைப் பெற்ற மொஹமட் சாஜித், அதனை இலகுவாக வலைக்குள் புகுத்தினார். 

தொடர்ந்து 18 ஆவது நிமிடத்தில் மொஹமட் ஆகிப் புனித பத்திரிசியார் பாதுகாப்பு அரணை தாண்டி கோல் கம்பத்திற்கு அருகில் வைத்து வலையை நோக்கி பந்தை உதைத்தபோது அது கம்பங்களுக்கு மேலால் பறந்தது. 

இந்நிலையில் 22 ஆவது நிமிடத்தில் மீண்டும் செயற்பட்ட மொஹமட் சாஜித் மீண்டும் ரூமி ராசா வழங்கிய பந்தை எதிரணி பின்கள வீரர்களை முறியடித்து கோலாக மாற்றினார். 

ரசூனியாவின் கடைசி நேர கோல் மூலம் புனித பேதுரு இறுதிப் போட்டிக்கு தகுதி

சபீர் ரசூனியா கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் Thepapare கால்பந்து சம்பியன்ஷிப்…

ஆரம்பத்தில் தடுமாற்றம் கண்ட புனித பத்திரிசியார் கல்லூரியின் இரு வீரர்கள் 20 நிமிடங்களுக்குள் உபாதைக்கு உள்ளாகி பதில் வீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. 

தொடர்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கல்லூரியின் பின்கள வீரர்களுக்கு சவால் கொடுத்த ஸாஹிரா கல்லூரியின் சரீக் அஹமட் 20 யார்ட் தூரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் உதைத்த பந்தை எதிரணி கோல்காப்பாளர் சாகிர் பாய்ந்து தடுத்தார். 

எவ்வாறாயினும் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு சாதகமாக பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது. பெனால்டி பகுதியில் வைத்து  ஸாஹிரா பின்கள வீரரின் கைகளில் பந்து பட்டதாலேயே அந்த ஸ்பொட் கிக் வழங்கப்பட்டது. அதனை அனுபவ வீரர் ரஜிகுமார் சான்தன் கோலாக மாற்றினார். அவர் பந்தை நேராக உதைத்தபோது தவறாகக் கணித்த ஸாஹிரா கோல்காப்பாளர் மொஹமட் சாகிர் வலது பக்கம் பாய்ந்தார். 

முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 02 – 01 புனித பத்திரிசியார் கல்லூரி

மந்தமாக ஆரம்பமான இரண்டாவது பாதியின் முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளிலும் தெளிவான கோல் முயற்சிகளை காண முடியவில்லை. இரு அணிகளிலும் முட்டி மோதல்களில் ஈடுபட்டமையினால் உபாதைகள் ஏற்பட்டன. 65 ஆவது நிமிடத்தில் மொஹமட் சாஜித் கோல் கம்பத்திற்கு நெருக்கமாக வலையை நோக்கி உதைத்தபோது புனித பத்திரிசியால் கல்லூரி கோல்காப்பாளர் சிறப்பாக தடுத்தார்.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்சியாளராக அமிர் அலஜிக் நியமனம்

இலங்கை கால்பந்தாட்ட அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொஸ்னியாவைச் சேர்ந்த அமிர்…

இந்நிலையில் 71 ஆவது நிமிடத்தில் தியாஸ் மீண்டும் தவறிழைத்ததால் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்று சிவப்பு அட்டையுடன் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது யாழ்ப்பாண அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏற்கனே ஒரு கோலால் பின்தங்கி இருந்த அந்த அணி கடைசி 19 நிமிடங்களையும் 10 வீரர்களுடன் விளையாட வேண்டி ஏற்பட்டது.

பத்திரிசியார் வீரர்கள் சமநிலை கோலை பெறும் முயற்சியாக கடைசி நேரத்தில் அதிகம் ஸாஹிரா கோல் பகுதியை நோக்கி வர அதனை பயன்படுத்தி மொஹமட் ஆகிப் கோலை நோக்கி தனித்து பந்தை எடுத்துச் சென்று கோல் கம்பத்திற்கு நெருக்கமாக வந்தபோது ஸாஹிராவுக்கு பொன்னான வாய்ப்பாக அது இருந்தது. ஆனால் அவர் பந்தை கோலை நோக்கி உதைக்க தாமதித்தது அவரது முயற்சியை எதிரணி பின்கள வீரர் முறியடிப்பதற்கு போதுமான நேரம் கிடைத்தது. 

80ஆவது நிமிடத்திலும் மொஹமட் சாஜித் மீண்டும் ஒருமுறை யாரும் இன்றி எதிரணி கோல் எல்லைக்குள் பந்தை எடுத்துச் சென்றார். அப்போது அவர் தொலைவாக இருந்து வேகமாக உதைத்த பந்து பட்டும் படாமலும் கம்பங்களை விட்டு வெளியேறியது. 

எவ்வாறாயினும், இலங்கை தேசிய அணி வீரரான மொஹமட் ஆகிப் 84 ஆவது நிமிடத்தில் அபார கோல் ஒன்றை பெற்று ஸாஹிரா அணியின் கோல் எண்ணிக்கையை 3ஆக உயர்த்தினார். 30 யார்ட் தொலைவில் இருந்து அவர் தாழ்வாகவும் நேர்த்தியாகவும் உதைத்த பந்தை புனித பத்திரிசியார் கோல்காப்பாளருக்கு பிடிக்க முடியாமல் போனது. 

இதன்மூலம் மொஹமட் ஆகிப் இந்தத் தொடரில் தனது 6ஆவது கோலை பெற்றார். செனால் சந்தேஷ் (10) மற்றும் சபீர் ரசூனியா (08) ஆகியோருக்கு அடுத்து தொடரில் அதிக கோல்பெற்றவராக அவர் உள்ளார். 

 >>இந்தப் போட்டியை மீண்டும் பார்வையிட<< 

கடைசி நிமிடங்களில் ஸாஹிரா கல்லூரியின் வெற்றி உறுதியான நிலையில் அந்த அணியின் வேகத்திற்கு புனித பத்திரிசியார் வீரர்களால் ஈடுகொடுக்க முடியாமல் போனது. 

இதன்மூலம் இரண்டாவது முறையாக நடைபெறும் Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் முறை முன்னேறி இருக்கும் மருதானை ஸாஹிரா கல்லூரி வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெறும் இறுதிப் போட்டியில் புனித பேதுரு கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி இதே குதிரைப்பந்தய திடல் அரங்கில் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 03 – 01 புனித பத்திரிசியார் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி – மொஹமட் சாஜித் 08’, 22’, மொஹமட் ஆகிப் 84’

புனித பத்திரிசியார் கல்லூரி – ரஜிகுமார் சான்தன் 38’

சிவப்பு அட்டை

புனித பத்திரிசியார் கல்லூரி – தியாஸ் 71’

 >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<