டி மெசனோட் கல்லூரிக்கு எதிரான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரி நெருக்கடி இன்றி அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.
களனி கால்பந்து வளாகத்தில் இன்று (8) நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸாஹிரா கல்லூரி அணி ஆட்டத்தின் கடைசிவரை தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொண்டது.
ரசூனியாவின் ஹெட்ரிக் கோலால் புனித பேதுரு அரையிறுதிக்கு முன்னேற்றம்
சபீர் ரசூனியாவின் ஹெட்ரிக் கோலின் உதவியோடு யாழ் மத்திய…..
இதன்படி Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் தோல்வியுறாத அணியாக நீடிக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
முன்னதாக நேற்று (7) நடைபெற்ற முதலாவது காலிறுதியில் யாழ் மத்திய கல்லூரியை 6-4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து புனித பேதுரு கல்லூரி முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய போட்டி ஆரம்பித்த விரைவிலேயே கொழும்பு ஸாஹிரா கல்லூரி தனது பலத்தை காட்ட ஆரம்பித்தது. 5 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர்கள் சிறப்பாக பந்தை பரிமாற்றி எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமித்து வலையை நோக்கி உதைத்தபோது டி மெசனொட் கோல்காப்பாளர் பாய்ந்து தடுத்தார். அவ்வாறு பட்டு வந்த பந்து மொஹமட் ஆகிப்பிடம் செல்ல அவர் மீண்டும் கோலை நோக்கி உதைத்தார். எவ்வாறாயினும் டி மெசனொட் கோல்காப்பாளர் தினெத் தீக்ஷன போராடித் தடுத்தார். அடுத்த நொடியோ ஸாஹிரா கல்லூரி மற்றொரு கோல் வாய்ப்பை பெற்றபோதும் அதுவும் தவறிப்போனது.
எவ்வாறாயினும் 11 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்கு தொலையில் இருந்து சரீக் அஹமட் அபாரமாக உயர உதைக்க அதனை தடுப்பதற்கு தீக்ஷன முன்னோக்கி வந்தார். எனினும் அவரையும் தாண்டி அந்தப் பந்து வலைக்குள் விழுந்தது. இதன் மூலம் ஸாஹிரா கல்லூரி போட்டியில் முதல் கோலை புகுத்தியது.
ஸாஹிரா அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க போராடிய டி மெசனொட் கல்லூரிக்கு 21 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. பெனால்டி பெட்டிக்கு அருகில் கிடைத்த ப்ரீ கிக்கை அவிஷ்க தேஷான் உதைத்தபோது அந்தப் பந்து நேராக எதிரணி கோல்காப்பாளரின் கைகளுக்குச் சென்றது.
இந்நிலையில் 23 ஆவது நிமிடத்தில் டி மெசனொட் கல்லூரியின் பின்களத்தில் ஏற்பட்ட பலவீனத்தை பயன்படுத்தி மொஹமட் ஆகிப் ஸாஹிரா கல்லூரிக்காக இரண்டாவது கோலை புகுத்தினார். ஆகிப் இந்தத் தொடரில் பெறும் ஐந்தாவது கோல் இதுவாகும். இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக கோல்களை பெற்றிருக்கும் அவிஷ்க தேஷானுடன் முதலிடத்தை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஸாஹிரா வீரர்கள் அடுத்த நிமிடமே எதிரணி கோல் எல்லையை ஆக்கிரமித்தனர். எனினும் டி மெசனொட் கோல்காப்பாளர் கடுமையாக போராடி பந்து வலைக்குள் செல்லாமல் தடுத்தார்.
Vantage FA கிண்ணம் பொலிஸ் அணி வசம்
இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தை…..
மறுபுறம் டி மெசனொட் கல்லூரி, ஸாஹிரா கல்லூரியின் கோல் எல்லையை ஆக்கிரமிப்பதற்கு போராடியது. 40 ஆவது நிமிடத்தில் பெனால்டி விளிம்பில் ப்ரீ கிக் வாய்ப்புக் கிடைத்தபோது அந்த அணிக்கு கோல் பெற பொன்னான வாய்ப்பாக அது இருந்தது. எனினும் நிசல் உதயங்க தாழ்வாக உதைத்த பந்தை ஸாஹிரா வீரர் வெளியே தட்டிவிட்டார்.
முதல் பாதி: ஸாஹிரா கல்லூரி 2 – 0 டி மெசனொட் கல்லூரி
முதல் பாதி போலன்றி இரண்டவது பாதி ஆட்டம் மந்தமாகவே நீடித்தது. ஸாஹிரா வீரர்கள் தனது வலுவான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி கோல் பகுதியையும் அடிக்கடி ஆக்கிரமித்ததோடு டி மெசனொட் வீரர்கள் பதில் கோல்களை திருப்பும் முயற்சியை விடவும் தனது கோல் பகுதியை பாதுகாப்பதற்கே அதிக நேரத்தை செலவிட்டனர்.
இதனால் இரண்டாவது பாதியின் முதல் முப்பது நிமிடங்களும் எந்த கோல் வாய்ப்புகளும் இன்று அதிக நேரம் பந்து மைதானத்தின் நடுவிலேயே சுழன்றது.
78 ஆவது நிமிடத்திலேயே கடைசி பாதியின் முதல் கோல் முயற்சி ஒன்று பதிவானது. அக்தர் பரிமாற்றிய பந்தை ரிசா கோலை நோக்கி உதைத்தபோது டி மெசனொட் கோல்காப்பாளர் நூலிழையில் அதனைத் தடுத்தார்.
எனினும் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு இரண்டு நிமிடம் இருக்கும்போது ஸாஹிரா கல்லூரி தனது மூன்றாவது கோலை புகுத்தியது. டி மெசனொட் கோல் கம்பத்தில் இருந்து தொலைவில் வைத்து எம்.எம்.எம். முஷ்திர் வேகமாக உதைத்த பந்து தினெத் தீக்ஷனவின் கையில் பட்டு வலைக்குள் சென்றது. தொடர்ந்து ஸாஹிரா கல்லூரி மற்றொரு கோலை நெருங்கியபோதும் இம்முறை தீக்ஷன பந்தை வலைக்குள் செல்லாமல் தடுத்தார்.
Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் கடைசி இரு காலிறுதிப் போட்டிகளும் நாளை (9) நடைபெறவுள்ளன. இதில் நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரி அணி யாழ்ப்பாணத்தின் புனித ஹென்றியரசர் கல்லுரியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி நாளை மாலை 4 மணிக்கு பெத்தகானா கால்பந்து மைதானத்தில் நடைபெறும்.
ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்: காலிறுதியில் மோதும் அணிகள்
இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான……
அதேபோன்று மற்றொரு காலிறுதிப் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளது.
முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 3 – 0 டி மெசனொட் கல்லூரி
கோல் பெற்றவர்கள்
ஸாஹிரா கல்லூரி – சரீக் அஹமட் 11’, மொஹமட் ஆகிப் 23’, எம்.எம்.எம். முஷ்திர் 88’
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<