சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளரான மகீஷ் தீக்ஸன முதலிடம் பெற்றுள்ளார்.
>>முன்னணி வீரரினை சம்பியன்ஸ் கிண்ணத்தில் இழக்கும் நியூசிலாந்து
அண்மையில் நிறைவுக்கு வந்த அவுஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் தொடர் வெற்றியினை உறுதி செய்ய காரணமாக அமைந்த தீக்ஸன மொத்தம் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
ஆஸ்திரேலியா தொடரில் வெளிப்படுத்திய சிறந்த அடைவே தீக்ஸன ஒருநாள் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முதலிடம் பெற காரணமாக அமைந்திருக்கின்றது.
அந்தவகையில் தற்போது இங்கிலாந்தின் முன்னணி சுழல் வீரர் ஆதில் ரஷீட்டினை பின்தள்ளி தீக்ஸன 680 தரநிலைப்புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்படுகின்றார். மறுமுனையில் ஏற்கனவே முதலிடத்தில் காணப்பட்ட ஆதில் ரஷீட் தற்போது 669 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டிருக்கின்றார்.
மறுமுனையில் இந்திய அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சுப்மான் கில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாமினை பின்தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய சுப்மான் கில் 796 புள்ளிகளுடன் முதலிடத்தினைப் பெற்றுள்ளதோடு, பாபர் அசாம் 773 புள்ளிகளுடன் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார்.