இலங்கை கிரிக்கெட் தரவு பதிவாளர்களின் சங்கம் (SLCSA) தங்களுடைய 15 வருட பூர்த்தியை முன்னிட்டி, முதன் முதலாக கொழும்பு சசகவ மண்டபத்தில் கிரிக்கெட் தரவு பதிவாளர்களை விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை தேசிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது அணித்தலைவராக செயல்பட்ட பந்துல வர்ணபுர கலந்துகொண்டார். அதேவேளை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் T.M. டில்ஷான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பித்தார். இந்நிகழ்வின்போது இலங்கை கிரிக்கெட் தரவு பதிவாளர்களுக்கான உத்தியோகப்பூர்வ www.slscorers.com எனும் இணையதளமும் T.M. டில்ஷானினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டவேளை, கையளவு அங்கத்தவர்களை கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் தரவு பதிவாளர் சங்கம், தற்போது பெரும் விருட்சமாக வளர்ந்து, மைதான பௌண்டரி எல்லை கோடுகளுக்கு பின்னின்று தமது தரவு சேகரிப்பு பணியினை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது.
மோர்ஸ் விளையாட்டு கழகத்தை பிரதிநித்துவப்படுத்தி, பாடசாலை, விளையாட்டு, கழக மற்றும் சர்வதேச கிரிக்கெட் தரவுகளை ஆழ்ந்த அனுபவத்தோடு பதிவுசெய்து வரும் முன்னணி தரவுப் பதிவாளர் பசால் மொஹமட் சிறந்த கிரிக்கெட் தரவுப் பதிவாளருக்கான விருதைப் பெற்றார். அத்துடன், மூன்று மட்டங்களில் 300க்கும் அதிகமான போட்டித் தரவுகளை பதிவு செய்து அளவற்ற அனுபவங்களை கொண்ட துஷார குரே, மிகவும் பாராட்டுக்குரிய தரவு பதிவாளர் விருது மற்றும் மூன்று தசாப்த கால நீண்ட சேவையை கருத்தில் கொண்டு சிறப்பு விருதொன்றையும் பெற்று கெளரவிக்கப்பட்டார்.
மேலும், சுமித் குணவர்தன, சிறந்த கட்டுப்பாட்டுடைய தரவு பதிவாளர் மற்றும் ஆண்டிக்கான சிறந்த தரவு பதிவாளர் ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.
நீண்ட காலமாக இருந்து வரும் இலங்கை கிரிக்கெட் தரவு பதிவு உறுப்பினர்களான A.பிராங்கி, FMஜயவர்தன மற்றும் அனுர ரத்னாயக்கவுடன், அஜித் CS பெரேரா, அசோகா டீ சில்வா, DAS திஸ்ஸாநாயக்க ஆகியோருக்கும் அவர்களுடைய அயராத உழைப்பு, முயற்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் தரவு பதிவாளர்கள் அபிவிருத்திக்கான பங்களிப்புக்களுக்காக ஆயுள் உறுப்புரிமை வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இலங்கை தரவு பதிவாளர்களின் சங்கத் தலைவர் (SLCSA) சமிந்த டீ சில்வா சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து குறிப்பிடும்பொழுது, ”2020ஆம் ஆண்டுக்கு முன் எந்த கிரிக்கெட் மைதானத்திலிருந்தும் இணையதளமூடாக தரவுகளை நேரடியாக அறியத்தருவதே எமது நோக்கம். இப்போது எங்களிடம் 300க்கும் அதிகமான வெவ்வேறு தரங்களில், தரவு பதிவாளர்கள் இருக்கின்றனர். அத்தோடு 188 முழு நேர அங்கத்தவர்களும், 200 உறுப்பினர் மற்றும் உறுப்பினரல்லாத எமது சங்கத்தோடு இணைந்து பணியாற்றி வருகின்றவர்களும் உள்ளனர்” என தெரிவித்தார்.
இலங்கை தரவு பதிவாளர்களின் சங்க (SLCSA) விருது வெற்றியாளர்கள்
சிறந்த வளர்ந்து வரும் மகளிர் தரவு வழங்குனர் – திருமதி. நில்லுக்கா அமரசேன
சிறந்த வளர்ந்து வரும் ஆடவர் தரவு வழங்குனர் – மாதவ பெர்னாண்டோ
சிறந்த இளையோர் தரவு வழங்குனர் – பிரபாத் பெர்னாண்டோ
சிறந்த பெண் தரவு வழங்குனர் – பூஜா லியனகே
2015 ஆண்டுக்கான அதிகமான போட்டிகளை பதிவு செய்த தரவு வழங்குனர் – ஹேமந்த கபுதுவ
சிறந்த ஆடவர் தரவு வழங்குனர் – பசால் மொஹமட்
சிறந்த அர்ப்பணிப்புள்ள தரவு வழங்குனர் – கீர்த்தி ரணசூரிய
மிக மூத்த தரவு வழங்குனர் – அசோக்க சந்திரசேகர
மிகவும் பாராட்டக்கூடிய தரவு வழங்குனர்(உறுப்பினர்கள் தெரிவு) – துஷார குரே
ஆண்டுக்கான சிறந்த தரவு வழங்குனர் – சமித் குணவர்தன
சிறந்த தரவு பட்டியல் (முதல் தர போட்டி மைதானம்) – மோர்ஸ் அரங்கு
சிறந்த தரவு பட்டியல் (சர்வதேச தர போட்டி மைதானம்) – R பிரேமதாச அரங்கு
மிகவும் பாராட்டத்தக்க நடுவர் (உறுப்பினர்கள் தெரிவு) – ரவீந்திர விமலசிறி
மிகவும் பாராட்டத்தக்க போட்டி மத்தியஸ்தர் (உறுப்பினர்கள் தெரிவு) – நல்லையா தேவராஜன்