நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை உத்தேச அணி

1535

இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளையும் வெற்றியீட்டி மகத்தான சாதனை படைத்தது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த இங்கிலாந்து அணி, வெளிநாட்டு மண்ணில் சுமார் 55 வருடங்களுக்குப் பிறகு பெற்றுக்கொண்ட முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாகவும் இது வரலாற்றில் இடம்பிடித்தது.

55 வருட வரலாற்று சாதனையுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இதுஇவ்வாறிருக்க, மூவகை போட்டிகளிலும் அண்மைக்காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை அணி, எதிர்வரும் 3ஆம் திகதி நியூசிலாந்துடனான சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

எனவே, 100 நாட்கள் கொண்டதாக வெளிநாட்டு மண்ணில் இடம்பெறுகின்ற 3 கிரிக்கெட் தொடர்களில் அடுத்தடுத்து விளையாடவுள்ள இலங்கை அணி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஒற்றை டி-20 போட்டிகளில் நியூசிலாந்து அணியை முதலில் சந்திக்கவுள்ளது.

இரண்டு நாள் பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இங்கிலாந்து அணியுடனான தோல்வியை அடுத்து, கிரஹெம் லெப்ரோய் தலைமையிலான தெரிவுக் குழுவை அதிரடியாக நீக்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய அசந்த டி மெல் தலைமையிலான நால்வர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக் குழுவும் உடனடியாக நியமிக்கப்பட்டது.

“இலங்கையில் உள்ள மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் இவர்கள் தான்” ; சந்திக ஹதுருசிங்க

இதன்படி, அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணியைத் தெரிவு செய்வது இப்புதிய தெரிவுக் குழுவின் முதலாவது பணியாக அமையவுள்ளது.

எனினும், குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம், இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், 16 அல்லது 17 வீரர்களைக் கொண்ட குழாமொன்று நியூசிலாந்து டெஸ்ட் தொடரிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கிலாந்து அணிக்கெதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் உபாதைக்குள்ளாகியிருந்தார்.

இதனையடுத்து இங்கிலாந்துடனான எஞ்சிய இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் விலகிக் கொண்டார். எனினும், தற்போது அவர் பூரண குணமடைந்து இருப்பதாகவும், நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை வழிநடத்துவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்து அணியுடன் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் எதிர்பர்ர்த்தளவு துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கவில்லை. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன மாத்திரம் 3 அரைச்சதங்களுடன் 256 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த நிலையில், நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் திமுத் கருணாரத்னவுடன் களமிறங்கவுள்ள அடுத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் யார் என்பது தொடர்பிலும் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

இதில், இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய கௌஷால் சில்வாவுக்கு 4 இன்னிங்ஸிலும் 41 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

எனினும், கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க, முதல் இன்னிங்ஸில் 6 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 18 ஓட்டங்களையும் குவித்தார். எனவே, நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இளம் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுபுறத்தில், இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் மத்திய வரிசை வீரர்கள் நிதானமாக விளையாடி ஓட்டங்களைக் குவிக்க தவறியமையே இலங்கை அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்தன. எனவே, அனுபவமிக்க வீரரான லஹிரு திரிமான்னவுக்கும், இளம் வீரரான சதீர சமரவிக்ரமவுக்கும் இலங்கை டெஸ்ட் அணியில் சந்தர்ப்பம் கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது. இதில் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் விளையாடியிருந்த சதீர சமரவிக்ரம, ஒரு அரைச் சதத்துடன் 90 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இலங்கைக்கு பின்னடைவு

இதேநேரம், 7ஆம் இலக்கத்தில் தொடர்ந்து மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்லவுக்குப் பதிலாக சதீர சமரவிக்ரமவை இறுதி பதினொருவர் அணியில் களமிறக்குவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுஇவ்வாறிருக்க, ரங்கன ஹேரத்தின் ஓய்வினை அடுத்து இலங்கை அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளராக தில்ருவன் பெரேரா செயற்படவுள்ளார்.

இதேவேளை, காலியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜயவின் பந்துவீச்சு முறை பற்றி சந்தேகம் இருப்பதாக நடுவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.

எனினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடிய அவர், கடந்த 19 ஆம் திகதி பந்துவீச்சுப் பரிசோதனைக்காக அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகினார்.

இதனையடுத்து கடந்த 23ஆம் திகதி பிரிஸ்பேனில் உள்ள ஆய்வு மையத்தில் தனது பந்துவீச்சு பரிசோதனையை மேற்கொண்டார். இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி அவருடைய பந்துவீச்சுப் பரிசோதனையின் அறிக்கை வெளியாகவுள்ளது.

இதனால் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் அகில தனன்ஞயவுக்கு விளையாட முடியாது. எனினும், .சி.சியின் அறிக்கை அகிலவுக்கு சாதகமாக கிடைத்தால் அந்த அணியுடனான ஒரு நாள் மற்றும் டி-20 தொடரில் விளையாடுவதற்காக வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Photos: Sri Lanka Vs. England | 3rd Test | Day 3

இதன்படி, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் விளையாடிய மலிந்த புஷ்பகுமார அல்லது லக்ஷான் சந்தகென் ஆகிய இருவரில் லக்ஷானுக்கு நியூசிலாந்து தொடரில் பங்கேற்பதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகின்றது.

இதனிடையே, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூசிலாந்து ஆடுகளங்களில் இலங்கை சார்பாக 3 வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிற்காக அறிவிக்கப்பட்ட குழாத்தில் இடம்பெற்ற சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர மற்றும் கசுன் ராஜித ஆகிய மூவருக்கு நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

இதேநேரம், உடற்தகுதியை நிரூபிப்பதில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் மற்றும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்து ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட லஹிரு குமாரவுக்கும் இலங்கை டெஸ்ட் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நியூசிலாந்து தொடருக்கான உத்தேச இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க, லஹிரு திரிமான்ன, தனன்ஜய டி சில்வா, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, சதீர சமரவிக்ரம, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லக்ஷான் சந்தகென், சுரங்க லக்மால், லஹிரு கமகே, கசுன் ராஜித, நுவன் பிரதீப், சுரங்க லக்மால்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<