தற்போதைய கிரிக்கெட் உலகை எடுத்துக்கொண்டால் இளம் வீரர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், அணியில் உள்ள சிரேஷ்ட வீரர்களுக்கு இறுதி பதினொருவர் அணியில் இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் ஓரிரெண்டு போட்டிகளில் தொடர்ந்து சொதப்பினால் அவருக்கு வயதாகிவிட்டது, மாற்று வீரராக இந்த இளம் வீரரைத் தேர்வு செய்யலாம் என்ற பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறை பொதுவாக எல்லா அணிகளிலும் இருப்பதை எம்மால் அவதானிக்க முடியும்.
இலங்கையினால் முன்னேற்றம் கண்ட பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள்
உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் அல்லது T20 லீக் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய உடனே அந்த இளம் வீரரை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வீரர்களும் குரல் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
இந்த நடவடிக்கையால் தேர்வாளர்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பார்கள். அணியில் உள்ள சிரேஷ்ட வீரரை எவ்வாறு அணியில் இருந்து தூக்குவது, அந்த வீரர் குறித்து என்ன பதில் சொல்வது, ஊடகங்களிடம் என்ன சொல்வது என்ற பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இதற்கு இலங்கை ஒருநாள் அணியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றங்களை சிறந்த உதாரணமாகக் கூறலாம். திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், சுரங்க லக்மால் போன்ற சிரேஷ்ட வீரர்களை பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனவே, முன்னைய காலங்களை விட சிரேஷ்ட வீரர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகில் சிரேஷ்ட வீரர்களின் இடங்களை இளம் வீரர்கள் இப்படித் தட்டிப்பறித்து வரும் சூழ்நிலையில் 1990களில் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமாகிய சிலர் இன்னும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வீரர்கள் தொடர்ச்சியாக அந்தந்த அணிகளுக்காக விளையாடாவிட்டாலும், உள்ளூர் போட்டிகள் மற்றும் உலகின் பல்வேறு லீக் தொடர்களில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமையால் அவர்களுக்கான இடம் எப்போதும் அணியில் இருந்து கொண்டே வருகிறது.
எனவே, 1990, 2000களில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தற்போதுவரை விளையாடும் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் குறித்த தொகுப்பை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
கிறிஸ் கெய்ல் (42 வயது)
கிரிக்கெட் உலகின் சிக்ஸர் மன்னராக வலம்வந்துகொண்டிருப்பவர் தான் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல். T20 கிரிக்கெட்டில் யுனிவெர்சல் பாஸ் ஆக திகழ்ந்து வருகிறார்.
கிறிஸ் கெய்லுக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார்.
இதுவரை 103 டெஸ்ட், 301 ஒருநாள், 61 T20 போட்டிகளில் என சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள இவர், T20 அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.
சப்பாத்து இல்லாமல் கவலைப்பட்ட ஜிம்பாப்வே வீரருக்கு கைகொடுத்த ’PUMA’!
உலகின் பல்வேறு லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகின்ற கிறிஸ் கெய்ல், இதுவரை 30 இற்கும் மேற்பட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
T20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரராக வலம்வருகின்ற கிறிஸ் கெய்ல், எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்ககுவார். அவருக்கு பந்துவீச பந்துவீச்சாளர்கள் இன்றுவரை பயப்படுவதை நாங்கள் பார்த்துள்ளோம்.
எதுஎவ்வாறாயினும், அண்மையில் தனது ஓய்வைப் பற்றி கருத்து வெளியிட்ட கிறிஸ் கெய்ல், தன்னிடம் கிரிக்கெட் விளையாடுகின்ற உத்வேகமும், திறமையும் இருக்கும் வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன் என தெரிவித்தார்.
எனவே, கிறிஸ் கெய்லின்் ஓய்வைப் பற்றி இப்போதைக்கு ஒன்றும் கூறமுடியாது.
சொஹைப் மாலிக் (39 வயது)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சொஹைப் மலிக் துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர்.
1999ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், இதுவரை 35 டெஸ்ட், 287 ஒருநாள், 113 T20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காகப் பங்கேற்றுள்ளார்.
எனினும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து பாகிஸ்தான் T20 அணியில் விளையாடி வருகிறார்.
39 வயதான மலிக், உலகின் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடி வருவதுடன் இதுவரை 30 இற்கும் மேற்பட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
அடுத்தடுத்த தொடர்களை உறுதிசெய்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்
இதனிடையே, இம்முறை T20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக மலிக் அறிவித்திருந்தாலும், அண்மைக்காலமாக அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே அதில் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. அந்த அணியை ஏதாவது ஒரு சர்ச்சை சுற்றிக்கொண்டே இருக்கும். தற்போது அந்த அணியின் கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் சிரேஷ்ட வீரர்கள் என பலரும் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதில் அணித் தேர்வில் தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணித் தலைவர்களின் தலையீடு தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மொஹமட் ஆமிர். பயிற்சியாளர்களின் பக்கச்சார்பான அணித் தேர்வு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக கிரிக்கெட்டுக்கு மொஹமட் ஆமிர் விடைகொடுத்தார். இந்த வரிசையில் புதிதாக இணைந்துகொண்டவர் தான் சொஹைப் மலிக்.
தன்னை ஏன் பாகிஸ்தான் அணியில் இணைத்துக்கொள்வதில்லை என சொஹைப் மலிக் அண்மையில் கேள்வி எழுப்பி இருந்ததுடன், அந்த அணி நிர்வாகத்தின் மீதும், அணித் தலைவர் பாபர் அசாம் மீதும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எதுஎவ்வாறாயினும், சொஹைப் மலிக்குக்கு தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எஸ் டோனி (40 வயது)
2004ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் இந்தியாவின் முன்னணி வீரர் எம்.எஸ் டோனி. மூன்று வகை கிரிக்கெட்டிலும் தலைவராகத் திகழ்ந்த எம்.எஸ் டோனி 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் ஒருநாள் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகி விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்தார்.
இந்தியாவுக்கு ஐ.சி.சியின் மூன்று உலகக் கிண்ணத்தையும் பெற்றுக்கொடுத்த ஒரே தலைவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான டோனி, தற்போது IPL போட்டிகளில் மாத்திரம் விளையாடி வருகின்றார்.
இங்கிலாந்தில் 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ண தொடருக்குப்பின், இந்திய இராணுவத்தில் பணிபுரிய இருப்பதால் டோனி சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்தார். எனினும், அவரது ஓய்வுக் காலம் முடிந்த பின்னரும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறுவாரா என்பது குறித்து எதுவும் சொல்லாமல் தொடர்ந்து மௌனம் காத்து வந்தார்.
இதனிடையே, கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணம் தான் டோனியின் கடைசி சர்வதேசப் போட்டி என தெரிவிக்கப்பட்டது.
மறுபுறத்தில், IPL தொடரில் டோனி எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும் என அந்த அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.
எதுஎவ்வாறாயினும், கொரோனா வைரஸினால் T20 உலகக் கிண்ணம் கடந்த வருடம் நடைபெறவில்லை. அதேபோல, இந்த வருடம் இந்தியாவில் T20 உலகக் கிண்ணம் நடைபெற்றால் டோனிக்கு அதுதான் கடைசி சர்வதேசப் போட்டித் தொடராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், கொரோனா வைரஸினால் T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறுவது தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை, ஐக்கிய அரபு இராட்சியத்தில் T20 உலகக் கிண்ணம் நடைபெற்றால் அதற்குமுன் நடைபெறவுள்ள IPL தொடரின் எஞ்சிய போட்டிகளுடன் டோனி ஓய்வை அறிவிப்பார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேம்ஸ் அண்டர்சன் (39 வயது)
இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரும், யோர்க்ஷெயார் அணிக்காக விளையாடி வருகின்றவருமான ஜேம்ஸ் அண்டர்சன், கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகள் இரத்தாகினாலும், தான் ஓய்வு பெறுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.
விலா எலும்பு உபாதை காரணமாக கடந்த காலங்களில் எவ்வித டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த ஜேம்ஸ் அண்டர்சன், கடந்த வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி, 600 விக்கெட்டுக்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளரா்கும் ராகுல் டிராவிட்?
அதன்பிறகு, இவ்வருடம் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுடனான டெஸ்ட் தொடர்களிலும் விளையாடிய அவர், இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை தன்னால் சர்வதேச போட்டிகளில் விளையாட முடியும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
எனவே, ஜேம்ஸ் அண்டர்சனின் ஓய்வு இப்போதைக்கு இருக்காது என்பது தான் வெளிப்படையான உண்மையாக உள்ளது.
39 வயதான அண்டர்சன் முதன் முதலாக 2003ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.
ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்ட அண்டர்சன், இதுவரை 160 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 614 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொஹமட் ஹபீஸ் (41 வயது)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான மொஹமட் ஹபீஸ், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், தற்போது ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரம் விளையாடி வருகிறார்.
எனினும், 2019இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் நிரந்தர இடத்தைப் பெற்றுக்கொள்வதற்காக தடுமாறி வருகின்ற அவர், கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணத் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இலங்கையுடனான ஒருநாள் தொடரை தவறவிடும் இங்கிலாந்து பயிற்சியாளர்
எனினும், அவருக்கு அண்மைக்காலமாக பாகிஸ்தான் அணியில் வாய்ப்புகள் வழங்கப்படுவதால் இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டியில் மொஹமட் ஹபீஸ் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட், 218 ஒருநாள் மற்றும் 106 T20 போட்டிகளில் விளையாடியுள்ள மொஹமட் ஹபீஸ், இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் விளையாடியிருந்தார்.
இம்ரான் தாஹிர் (42 வயது)
இம்ரான் தாஹிர் பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர். இவர் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடி உள்ளார். பாகிஸ்தான் ஏ அணியிலும் விளையாடி உள்ளார்.
இருப்பினும், பாகிஸ்தான் அணியில் வலது–கை பந்துவீச்சாளர்கள் தேவை இல்லாததால் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்காத நிலையில் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி திறமையை வெளிபடுத்தியதன் மூலம் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாட முடிவெடுத்தார்.
தென்னாபிரிக்கா அணியில் முதன் முதலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டு தேர்வு குழு பிரச்சினை காரணமாக வெளியேறினார்.
IPL கிரிக்கெட்டில் தடம்பதித்த இந்த சேத்தன் சக்காரியா யார்?
பின்னர் உடனடியாக அந்த பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் எடுக்கப்பட்டு ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படாமல் நாடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து முதன் முதலில் 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றார் இம்ரான் தாஹிர்.
இம்ரான் தாஹிர் ஒருநாள் போட்டி மற்றும் T20 போட்டிகளில் சிறப்பாக விளையாட கூடியவர். இம்ரான் தாஹிர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் சிறப்பான பந்துவீச்சின் மூலம் அந்தத் தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற பெறுமையைப் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற 2015 உலகக் கிண்ணத் தொடரிலும் சிறப்பாக விளையாடினார்.
இதுவரை இம்ரான் தாஹிர் 107 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் 173 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதேபோல் 38 T20 போட்டிகளில் விளையாடி 63 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 20 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 57 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
பல்வேறு காரணங்களால் 2021 IPL ஐ தவறவிட்ட வீரர்கள்
2019இல் வைத்து இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆனால், 2020 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பேன் எனவும் தெரிவித்தார். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வருடம் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறாததால் இம்ரான் தாஹிரின் ஓய்வும் தள்ளிப்போனது.
இந்த நிலையில், IPL உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் அனைத்து T20 லீக் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி வரும் இம்ரான் தாஹிருக்கு அண்மைக்காலமாக தென்னாபிரிக்ககா அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் இவ்வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஹர்பஜன் சிங் (41 வயது)
இந்திய அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்த ஹர்பஜன் சிங் 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி இந்திய அணிக்காக அறிமுகமானார்.
இதுவரை அவர் 103 டெஸ்ட், 236 ஒருநாள், 28 T20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம்வந்த இவர், மொத்தம் 417 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கடைசியாக 2016ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் திகதி இந்திய அணிக்காக T20 போட்டியில் விளையாடிய 40 வயதான ஹர்பஜன் சிங் இன்னும் ஓய்வை அறிவிக்கவில்லை. அஷிஷ் நெஹ்ரா மாதிரி தனக்கு இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.
எதுஎவ்வாறாயினும், அண்மையில் இடைநிறுத்தப்பட்ட IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…