சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கப் போகும் வீரர்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது.
இத்தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசி இனால் தடைசெய்யப்பட்டது. இதனால் இலங்கையில் நடைபெறவிருந்த ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடர் தென்னாபிரிக்காவிற்கு மாற்றப்பட்டது.
அந்த வகையில் உலகம் முழுவதிலிருந்து மொத்தம் 16 கிரிக்கெட் அணிகள் இம்முறை ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத் தொடரை வெல்வதற்காக இறுதிப்போட்டி உட்பட 41 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
1988ஆம் ஆண்டு முதன்முறையாகத் ஆரம்பமாகிய இந்தப் போட்டித் தொடரில் இதுவரை இதுவரை 7 நாடுகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
- இலங்கை 19 வயதின் கீழ் குழாத்தில் சாருஜன் சண்முகநாதன்
- இளையோர் உலகக் கிண்ண நடுவர் குழாத்தில் இலங்கையர்
இந்தியா (5), அவுஸ்திரேலியா (3), பாகிஸ்தான் (2), பங்களாதேஷ் (1), தென்னாபிரிக்கா (1), மேற்கிந்தியத் தீவுகள் (1) மற்றும் இங்கிலாந்து (1) ஆகிய அணிகள் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளன, அதே நேரத்தில் இலங்கை 2000ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியது. இதுதான் இளையோர் உலகக் கிண்ணத்தில் வெளிப்படுத்திய அதிகபட்ச திறமையாகும்.
இதனிடையே, இளையோர் உலகக் கிண்ணத்தின் மூலம் தான், பிற்காலத்தில் கிரிக்கெட் அரங்கில் பல முன்னணி நட்சத்திரங்களை உலகுக்கு அறிமுகப்படுத்த முடிந்தது.
எனவே, இதுவரை நடைபெற்ற 14 உலகக் கிண்ணத் தொடர்கள் மற்றும் அதில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் குறித்த சிறப்பு கண்ணோட்டத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
1988 – அவுஸ்திரேலியா சம்பியன்
எட்டு அணிகள் பங்கேற்ற அங்குரார்ப்பண இளையோர் உலகக் கிண்ணத்தை நடத்திய அவுஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.
இந்தத் தொடரில் இலங்கைக்கு 5ஆவது இடம் கிடைத்தது.
* குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: சனத் ஜயசூரிய, நசார் ஹுசைன், மைக்கல் அதர்டன், பிரையன் லாரா, கிறிஸ் கெய்ர்ன்ஸ்
1998 – இங்கிலாந்து சம்பியன்
முதல் இளையோர் உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி சம்பியாக மகுடம் சூடியது.
மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெய்ல் இந்தப் போட்டித் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக இடம்பிடித்தார், மற்றொரு சிறந்த மேற்கிந்திய வீரரான ராம்நரேஷ் சர்வான், ஜிம்பாப்வேயின் முலுலேகி என்காலாவுடன் இணைந்து தலா 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தத் தொடரில் இலங்கைக்கு 6ஆவது இடம் கிடைத்தது.
* குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: கிறிஸ் கெய்ல், ராம்நரேஷ் சர்வான், சொஹைப் மலிக், இம்ரான் தாஹிர், கைல் மில்ஸ், ஹர்பஜன் சிங், விரேந்திர சேவாக், கிரேம் ஸ்வான்
2000 – இந்தியா சம்பியன்
இலங்கையில் நடைபெற்ற 3ஆவது இளையோர் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
போட்டித் தொடரின் நாயகனாக யுவராஜ் சிங் தெரிவு செய்யப்பட்டதோடு, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிரேம் ஸ்மித் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக தெரிவானார்.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: மைக்கல் கிளார்க், மிட்செல் ஜொன்சன், ஷேன் வொட்சன், இயென் பெல், யுவராஜ் சிங், பிரண்டன் மெக்கல்லம், கிரேம் ஸ்மித், ஜொனாதன் ட்ரொட்
2002 – அவுஸ்திரேலியா சம்பியன்
நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த தொடரில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியா இளையோர் உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்றது.
ஜிம்பாப்வேயின் தடெண்டா தைபு தொடர் நாயகன் விருதையும், அவுஸ்திரேலிய அணித்தலைவர் கெமரூன் வைட் போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரருக்கான விருதையும் தட்டிச்சென்றனர்.
இந்தத் தொடரில் இலங்கைக்கு 8ஆவது இடம் கிடைத்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: உபுல் தரங்க, கெமரூன் வைட், ஜோர்ஜ் பெய்லி, சுரேஷ் ரெய்னா, மஷ்ரபி மோர்டசா, ரொஸ் டெய்லர், உமர் குல், ஹஷிம் அம்லா, டெரன் சமி, டுவைன் பிராவோ.
2004 – பாகிஸ்தான் சம்பியன்
பங்களாதேஷில் நடைபெற்ற இந்த தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக இளையோர் உலகக் கிண்ண சம்பியனாக மாறியது.
இந்தியாவின் ஷிகர் தவான் போட்டியின் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்து, தொடர் நாயகன் விருதை வென்றார்.
இலங்கைக்கு இத்தொடரில் 5ஆவது இடம் கிடைத்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: அஞ்செலோ மெதிவ்ஸ், அலெஸ்டயார் குக், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், வஹாப் ரியாஸ், இயென் மோர்கன்
2006 – பாகிஸ்தான் சம்பியன்
இலங்கையில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதி பெற்றன.
110 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றியிலக்கை கடந்து இளையோர்; உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற முதல் மற்றும் ஒரே அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.
இந்த தொடரில் இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக முதலிடம் பிடித்து தொடர் நாயாகனாகவும் தெரிவானார்.
சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தத் தொடரில் இலங்கைக்கு 6ஆவது இடம் கிடைத்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, டேவிட் வோர்னர், முஷ்பிகுர் ரஹீம், சகிப் அல் ஹசன், தமிம் இக்பால், மொயின் அலி, சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, டிம் சவுத்தி, சர்பராஸ் அஹமட், டீன் எல்கர், சுனில். நரைன், கிரென் பொல்லார்ட்
2008 – இந்தியா சம்பியன்
கிரிக்கெட் உலகின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக உலக சம்பியன் ஆனது.
இந்தத் தொடரில் தான் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களாக கருதப்படும் விராட் கோஹ்லி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூன்று வீரர்களும் களமிறங்கியிருந்தார்கள்.
எவ்வாறாயினும், தொடரின் நாயகனாக நியூசிலாந்தின் டிம் சவுத்தி தெரிவானார்.
இத்தொடரில் இலங்கைக்கு 7ஆவது இடம் கிடைத்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: குசல் ஜனித் பெரேரா, ஜோஷ் ஹேசல்வுட், ஸ்டீவ் ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், விராட் கோஹ்லி, கேன் வில்லியம்சன், ஷான் மசூத், போல் ஸ்டிர்லிங்
2010 – அவுஸ்திரேலியா சம்பியன்
நியூசிலாந்தில் நடைபெற்ற 8ஆவது இளையோர் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி மூன்றாவது தடவையாக உலக சம்பியன் ஆனது.
இந்தத் தொடரில் இலங்கை அணி நான்காவது இடத்தைப் பிடித்தது. அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணி, பின்னர் நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியைத் தழுவியது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ஜோஸ் பட்லர், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், பாபர் அசாம், கேஎல் ராகுல், மிட்செல் மார்ஷ், ஆடம் ஜம்பா, ஜேசன் ஹோல்டர், டொம் லதம்
2012 – இந்தியா சம்பியன்
முதன்முறையாக அவுஸ்திரேலியா நடத்திய இந்தத் தொடரில் உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணி வரவேற்பு நாடான அவுஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது தடவையாக உலக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்தத் தொடரில் இலங்கைக்கு 9ஆவது இடம் கிடைத்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: டிராவிஸ் ஹெட், இமாம் உல் ஹக், இஷ் சோதி, அகீல் ஹொசைன், லிட்டன் தாஸ், தஸ்கின் அஹமட்
2014 – தென்னாபிரிக்கா சம்பியன்
டுபாயில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்கா அணி பாகிஸ்தானை வீழ்த்தி முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை வென்றது.
தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்திய எய்டன் மார்க்ரம் தொடர் நாயகன் விருதை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அத்துடன், இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இலங்கையின் அனுக் பெர்னாண்டோ முதலிடத்தைப் பிடித்தாலும், இலங்கை அணிக்கு ஒட்டுமொத்த அணிகளில் 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: குசல் மெண்டிஸ், ஸ்ரேயாஸ் ஐயர், குல்தீப் யாதவ், முஸ்தபிசூர் ரஹ்மான், எய்டன் மார்க்ரம், கங்கிசோ ரபாடா, நிக்கொலஸ் பூரான், கைல் ஜேமிசன், ஷிம்ரோன் ஹெட்மயர்.
2016 – மேற்கிந்திய தீவுகள் சம்பியன்
பங்களாதேஷில் நடைபெற்ற இந்தத் தொடரில் இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் தடவையாக சம்பியன் பட்டம் வென்றது.
தொடரின் நாயகனாக பங்களாதேஷ் அணியின் மெஹிதி ஹசன் தெரிவானார்.
இந்தத் தொடரில் நான்காவது இடத்தை இலங்கை பிடித்தது.
போட்டியின் அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த இலங்கை, மூன்றாவது இடத்திற்கான போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: வனிந்து ஹஸரங்க, சரித் அசலங்க, ரஷித் கான், சதாப் கான், சாம் கரண், அல்சாரி ஜோஷப், ரிஷாப் பாண்ட், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரன், மெஹிதி ஹசன் மிராஸ்
2018 – இந்தியா சம்பியன்
நியூசிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று மூன்றாவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
தொடர் நாயகனாக இந்தியாவின் சுப்மன் கில் தெரிவானார்.
இந்தத் தொடரில் இலங்கைக்கு 9ஆவது இடம் கிடைத்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: ஜெரால்ட் கோட்ஸி, சுப்மன் கில், தௌஹித் ஹிரிடோய், ஹெரி புரூக், நவீன் உல் ஹக், ரஹ்மானுல்லா குர்பாஸ், சஹீன் அப்ரிடி, முஜீப் உர் ரஹ்மான்
2020 – பங்களாதேஷ் சம்பியன்
இந்தத் தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்ட பிரபல இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி முதல் தடவையாக சம்பியனாகத் தெரிவாகியது.
இந்தத் தொடரில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும், தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.
இந்தத் தொடரில் இலங்கை 10ஆவது இடத்தைப் பிடித்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: மதீஷ பத்திரண, நூர் அஹமட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவி பிஷ்னோய், ஜெய்டன் சீல்ஸ்
2022 – இந்தியா சம்பியன்
இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி ஐந்தாவது முறையாக உலக சம்பியன் ஆனது.
தென்னாபிரிக்காவின் டெவால்ட் ப்ரீவிஸ் இந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்து தொடர் நாயகன் விருதை வென்றதுடன், இலங்கை அணித்தலைவர் துனித் வெல்லாலகே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடம் பிடித்தார்.
இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், இலங்கை அணி இந்தத் தொடரில் 6ஆவது இடத்தைப் பிடித்தது.
*குறித்த தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகிய நட்சத்திரங்கள்: துனித் வெல்லாலகே, டெவால்ட் ப்ரீவிஸ், ரெஹான் அஹ்மட்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<