பஹ்ரெய்ன் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் சிநேகபூர்வ கால்பந்து போட்டிகளில் பங்குபற்ற கடந்த வெள்ளிக்கிழமை (14) பயணமாகிய இலங்கை மகளிர் அணியில் முதற்தடவையாக மலையகத்தைச் சேர்ந்த தமிழ் வீராங்கனையொருவர் இடம்பெற்றுள்ளார்.
ஹாலி எல தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் பதுளை சரஸ்வதி வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயின்ற செல்வராஜ் யுவராணியே இவ்வாறு தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற முதல் மலையக வீராங்கனை என்ற சாதனையை படைத்து வரலாற்றில் இடம்பிடித்தார்.
ஹாலி எல, போகாமடித்த எலவட்டன் பிரிவைச் சேர்ந்த யுவராணி, 15 வயது முதல் பாடசாலையின் கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்று விளையாடி வந்தார். இதனையடுத்து தேசிய விளையாட்டு விழா உள்ளிட்ட தேசிய மட்டப் போட்டிகளில் ஊவா மாகாண மகளிர் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி திறமைகளையும் வெளிப்படுத்தி வந்தார்.
இதன் பிரதிபலனாக இலங்கை விமானப்படை மகளிர் கால்பந்து அணியில் விளையாடும் வாய்பை பெற்றுக்கொண்ட அவர், அண்மையில் நிறைவுக்கு வந்த மகளிர் அணிகள் மோதிய கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட லீக் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற விமானப்படை அணிக்காக விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
சலன பிரமன்தவின் கடைசி நேர கோலினால் புனித ஜோசப் இறுதிப் போட்டியில்
சலன பிரமன்த கடைசி நேரத்தில் போட்ட அபார கோல் மூலம் மாரிஸ்…
இதன்படி, சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியொன்றில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் 21 வயதான யுவராணிக்கும் வாய்ப்பு வழங்க இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் இலங்கை அணி இறுதியாக பங்கேற்றிருந்தது.
இதுஇவ்வாறிருக்க, இந்தியாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மகளிர் தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டித் தொடர் மற்றும் ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழா மகளிர் கல்பந்தாட்டப் போட்டிகள் ஆகியவற்றுக்கு முன்னாயத்தமாக பஹ்ரெய்ன் மகளிர் கால்பந்தாட்ட அணியுடன் இலங்கை மகளிர் அணி முதல்முறையாக 3 போட்டிகளைக் கொண்ட சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டியொன்றில் விளையாடவுள்ளது.
இப்போட்டிகள் எதிர்வரும் 17ஆம், 20ஆம் மற்றும் 23ஆம் ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
இதேநேரம், இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைவியாக குமுது மாலா லியனகே செயற்படவுள்ளதுடன், சௌண்டரஸ் கழகத்தின் முன்னாள் வீரரான திலக் அபோன்சோ இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.