கடந்த ஓக்டோபர் 5ஆம் திகதி ஆரம்பமான மாகாண ரீதியிலான மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில், மேல் மாகாண மகளிர் அணிக்கும் வடமத்திய மாகாண மகளிர் அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் மேல் மாகாண மகளிர் அணி வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அண்மையில் அவுஸ்திரேலியா மகளிர் அணியுடன் நடந்த கிரிக்கெட் தொடரில் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டது போல் பாரிய தோல்வியை சந்தித்ததனை அடுத்து, இலங்கை கிரிக்கெட் சபை மீது போதியளவு உள்ளூர் போட்டிகளை நடாத்தி இலங்கை மகளிர் அணி வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து மாகாண ரீதியிலான இந்த போட்டித்தொடர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. மத்திய மாகாணம், தென் மாகாணம், வடமத்திய மாகாணம், மேல்மாகாணம் ஆகிய மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வீராங்கனைகளைக் கொண்டதாக அமைந்த இந்த போட்டித் தொடர் இலங்கையின் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. இப்படியாக நடக்கும் போட்டித் தொடர்கள் திறமையான வீராங்கனைகளை இனங்காண உதவுவதால் எதிர்காலத்தில் மிகச்சிறந்த வீராங்கனைகள் கொண்ட சர்வதேச அணிகளுக்கு சவால் விடக்கூடிய தேசிய அணி உருவாகவும் வழிவகுக்கும்.
மொத்தம் 6 குழு நிலை (Group Stage) போட்டிகளைக் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில் நடைபெறும் போட்டிகளின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு புள்ளிகள் அடிப்படையில் முதலாம், இரண்டாம் இடம் பெறும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டன. அந்த வகையில் வடமத்திய மாகாண மகளிர் அணியும், மேல் மாகாண மகளிர் அணியும் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தன.
இந்த இரண்டு அணிகளும் மோதிய இறுதிப்போட்டி இன்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாணத் தலைவி முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தார். இதனால் முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த வடமத்திய மாகாண அணியினர் சிறப்பான துவக்கத்துடன் விளையாடி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் இலங்கை மகளிர் தேசிய அணிக்காக துணைத் தலைவியாக தற்போது செயற்பட்டு கொண்டிருக்கும், சமரி அத்தபத்து வடமத்திய மாகாண மகளிர் அணி சார்பாக 67 ஓட்டங்களை விளாசினார். பந்து வீச்சில் மேல் மாகாண மகளிர் அணி சார்பாக சந்தனி திவன்கா 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இந்த தொடரில் முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட அணியானது பெற்ற அதிக ஓட்டங்கள் இது என்பதால், மேல் மாகாண மகளிர் அணி சவாலான இலக்கொன்றை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. ஆரம்பம் முதலே சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மேல் மாகாண மகளிர் அணியினர் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று இறுதி ஓவர் வரை சென்று விறுவிறுப்பாக அமைந்த போட்டிக்கு முடிவு கட்டி வெற்றி இலக்கை அடைந்தனர். இதில் மேல் மாகாண மகளிர் அணி சார்பாக ஆட்டமிழக்காமல் ஹன்சிமா கருணாரத்ன பெற்ற 52 ஓட்டங்கள், மேல் மாகாண மகளிர் அணியை தொடரின் சம்பியன் ஆக்குவதற்கு பெரிதும் உதவியது எனலாம். மேலும் இவருடன் நிப்புனி ஹன்சிக்கா மேல் மாகாண மகளிர் அணிக்காகப் பெற்ற 48 ஓட்டங்களும் முக்கியமானது எனலாம். பந்து வீ ச்சில் வட மத்திய மாகாண மகளிர் அணி சார்பாக இனோக்கா ரணவீர 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
வடமத்திய மாகாணம் – 131/5 (20) சமரி அத்தபத்து 67, டிலானி மனோதரா 41, சந்தனி திவன்கா 12/1
மேல் மாகாணம் – 135/4 (19.5) ஹன்சிமா கருணாரத்ன 52*, நிப்புனி ஹன்சிக்கா 48, இனோக்கா 27/2
போட்டி முடிவு – 6 விக்கெட்டுகளால் மேல் மாகாண மகளிர் அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.