கராச்சியில் நேற்று (2) இடம்பெற்று முடிந்த இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, குறித்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் போராடி தோற்றது இலங்கை
கராச்சியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் ……..
நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த இலங்கை கிரிக்கெட் அணி சவாலான வெற்றி இலக்கு ஒன்றினை (298) பாகிஸ்தானுக்கு நிர்ணயம் செய்தது. எனினும், சிறிய இடைவெளி ஒன்றின் பின்னர் அணிக்கு திரும்பிய ஆபித் அலி மற்றும் பக்கார் சமான் ஆகியோர் பாகிஸ்தானுக்கு அரைச்சதங்களுடன் சிறந்த ஆரம்பத்தை கொடுக்க ஹாரிஸ் சொஹைலும் மத்திய வரிசையில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி பாகிஸ்தான் தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்பராஸ் அஹ்மட், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியிருந்த துடுப்பாட்ட வீரர்களை பாராட்டும் விதமாக தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
”வெற்றி இலக்கு ஒன்றினை விரட்டுவது உண்மையில் சாதாரண விடயம் கிடையாது. ஆனால், எமக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுத்தந்த ஆபித் அலிக்கே அனைத்து பாராட்டுக்களும் போய்ச் சேரும். அதோடு, எமது ஏனைய துடுப்பாட்டவீரர்களும் வெற்றி இலக்கை விரட்டுவதற்கான தமது பொறுப்பை சரியாக செய்திருந்தனர்.”
எனினும், சர்பராஸ் அஹ்மட் இலங்கை அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் களத்தடுப்பை விமர்சித்திருந்ததோடு, அது முன்னேற வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
”(வெற்றி பெற்றாலும்) நாம் எதிர்பார்த்த தரத்தில் எமது களத்தடுப்பானது அமைந்திருக்கவில்லை. இப்படியாக தொடர்ந்தும் செயற்பட்டால் இனி எம்மால் போட்டிகளில் வெற்றி பெற முடியாது.”
இதேநேரம், பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரின் பின்னர் இலங்கையுடன் ஆடவுள்ள T20 தொடரில் முழுமையாக சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தும் என சர்பராஸ் அஹ்மட் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையுடனான T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று …….
ஆபித் அலி, இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஒருநாள் போட்டிகளில் பெற்ற இரண்டாவது அரைச்சதத்துடன் 74 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று பாகிஸ்தான் அணியின் வெற்றியினை உறுதி செய்ய முக்கிய காரணமாக அமைந்த ஆபித் அலியும் போட்டி பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
”எனக்கு நல்ல வாய்ப்பொன்று வழங்கப்பட்டது. அதன் மூலம் நான் சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்தினேன். எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய அணி முகாமைத்துவத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அதோடு, இப்போட்டியினை மைதானத்திற்கு வந்து பார்வையிட்ட கிரிக்கெட் இரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.”
இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பாகிஸ்தான் அணி, இந்த ஒருநாள் தொடரின் பின்னர் இலங்கை வீரர்களுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடவுள்ளது. இந்த T20 தொடரின் போட்டிகள் யாவும் லாஹூர் நகரில் இடம்பெறவுள்ளதோடு, தொடரின் முதல் போட்டி சனிக்கிழமை (5) நடைபெறவுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<