அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுமுடிந்த T20 உலகக்கிண்ணத்தொடரில் இங்கிலாந்து அணி கிண்ணத்தை வென்று ஒருநாள் மற்றும் T20 உலகக்கிண்ணங்களின் இரட்டை சம்பியனாக மாறியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஏற்கனவே கனித்ததைப்போன்று பல விடயங்கள் நடந்திருந்ததுடன், ஒருசில விடயங்கள் நினைத்தமைக்கு மாறாகவும் நடந்தேறியிருக்கின்றன.
பயிற்றுவிப்பாளராக மீண்டும் இலங்கை வரும் மிக்கி ஆர்தர்!
ரசிகர்களின் கணிப்பின்படி வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த உலகக்கிண்ணத்தில் முக்கிய துறுப்புச்சீட்டு என கருதப்பட்டவாறு அல்லது கணிக்கப்பட்டவாறு அற்புதமாக செயற்பட்டிருந்தனர்.
அதிலும் அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் அதீத வேகத்துக்கு சொந்தக்கார வீரர்களுக்கு மிகச்சிறந்த பரிசுகளை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஓங்கியிருந்தது. எனவே, இந்த உலகக்கிண்ணத்தில் அதிக வேகத்தை தொடும் பந்துவீச்சாளர் யார்? என்ற போட்டி மறைமுகமாக அரங்கேறியிருந்த நிலையில், அதில் யார் வெற்றியாளர் என்பதையும், அதிசிறந்த 10 வேகப்பந்துவீச்சாளர்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- மார்க் வூட் எதிர் நியூசிலாந்து – 154.74kph
இங்கிலாந்து அணி கிண்ணம் வெல்வதற்கு முக்கியமான வீரர்களில் ஒருவர் மார்க் வூட். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடாவிட்டாலும், சுபர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி வெற்றிபெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தார்.
மார்க் வூட் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், இவருடைய 90 சதவீதமான பந்துகள் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தை தொட்டிருந்தன. இதில், நியூசிலாந்து அணிக்கு எதிரான கிளேன் பிலிப்ஸிற்கு வீசிய முதல் பந்தை மணிக்கு 154.74 கிலோமீற்றர் வேகத்தில் வீசியிருந்தார். இந்த பந்துதான் இம்முறை T20 உலகக்கிண்ணத்தில் வீசப்பட்ட வேகமான பந்தாக பதிவாகியது.
- லொக்கி பேர்குஸன் எதிர் அயர்லாந்து -154. 55kph
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகூடிய வேகத்தில் பந்துவீசக்கூடியவர்களில் ஒருவரான நியூசிலாந்து அணியின் லொக்கி பேர்குஸன் இம்முறை உலகக்கிண்ணத்தில் 154.55 என்ற வேகத்தை தொட்டிருந்தார்.
குறித்த இந்த வேகமானது இம்முறை T20 உலகக்கிண்ணத்தின் இரண்டாவது அதிவேக பந்துவீச்சாக மாறியிருந்தது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் 154.55kph வேகத்தை தொட்டிருந்தார். இவர் இம்முறை சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தாத போதும் 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
- என்ரிச் நோக்கியா எதிர் பங்களாதேஷ் – 154.31kph
இந்த உலகக்கிண்ணத்தில் மணிக்கு 154 கிலோமீற்றர் வேகத்தை தொட்ட மூன்றாவது வீரர் தென்னாபிரிக்காவின் என்ரிச் நோக்கியா. வேகத்தால் எதிரணிகளை மிரட்டக்கூடிய இவர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் மணிக்கு 154.31 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசியிருந்தார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் தோல்வியால் தென்னாபிரிக்க அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்திருந்தது. எனினும் மிகச்சிறப்பாக பந்துவீச்சில் பிரகாசித்திருந்த என்ரிச் நோக்கியா 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
- ஹரிஸ் ரவூப் எதிர் பங்களாதேஷ் – 150.75kph
பாகிஸ்தான் அணி இந்த T20 உலகக்கிண்ணத்தின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கொண்ட குழாமாக அமைந்திருந்தது. குறிப்பாக ஹரிஸ் ரவூப் வேகத்தால் கடைசி ஓவர்களை அற்புதமாக வீசியிருந்தார்.
பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதற்கு இவருடைய பங்கு அளப்பரியது. மேற்குறிப்பிட்ட மூன்று வீரர்களுடன் 150kph வேகத்தை தொட்ட நான்காவது வீரராக இவர் மாறியிருந்தார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இவர் மணிக்கு 150.75 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசியிருந்தார். அத்துடன், 7 போட்டிகளில் விளையாடிய இவர் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.
- மிச்சல் ஸ்டார்க் எதிர் அயர்லாந்து – 149.95kph
அவுஸ்திரேலிய அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மணிக்கு 149.95 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசி அசத்தியிருந்தார்.
மிச்சல் ஸ்டார்க்கின் வேகம் மற்றும் ஸ்விங் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்பதுடன், 149.95 வேகத்தில் காற்றில் பந்தை ஸ்விங் செய்து போல்ட் முறையில் கேர்டிஸ் கேம்பரை ஆட்டமிழக்கச்செய்திருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக இந்த தொடரில் இவர் 3 விக்கெட்டுகளை மாத்திரம் சாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டஸ்கின் அஹ்மட் எதிர் தென்னாபிரிக்கா – 149.56kph
பங்களாதேஷ் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான டஸ்கின் அஹ்மட், இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடித்துக்கொள்கின்றார். இவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மணிக்கு 149.56 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசியிருந்தார்.
மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை இவர் வீழ்த்தியிருந்தாலும், ஒருசில போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றாமல் இருந்தாலும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.
- கிரிஸ் ஜோர்டன் எதிர் இந்தியா – 148.74kph
இங்கிலாந்து அணியில் மார்க் வூட்டின் உபாதைக்கு பின்னர் அணிக்குள் அழைக்கப்பட்டவர் கிரிஸ் ஜோர்டன். கிரிஸ் ஜோர்டன் மிதவேக பந்துகளாலும், வேகம் குறைந்த பந்துகளாலும் எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடியவர்.
இவ்வாறான நிலையில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் தன்னுடைய முழு வேகத்தையும் வெளிக்காட்டியிருந்தார். இவர் போட்டியின் கடைசி ஓவரில் மணிக்கு 148.74 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசியிருந்தார். இவர் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் மாத்திரம் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
- லஹிரு குமார எதிர் அவுஸ்திரேலியா – 148.24kph
இலங்கை அணியில் தற்போதுள்ள அதிக வேகத்தில் பந்துவீசக்கூடியவர் லஹிரு குமார. 150 கிலோமீற்றர் வேகத்தை தொடக்கூடிய இவர் இந்த T20 உலகக்கிண்ணத்தில் மணிக்கு 148.24 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசியிருந்தார்.
பேர்த்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர், ஆரோன் பின்ச்சிற்கு எதிராக தன்னுடைய அதிவேக பந்துவீச்சை பதிவுசெய்தார். துஷ்மந்த சமீரவுக்கு பதிலான பொறுப்பை ஏற்றுக்கொண்ட இவர் 6 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
- அல்ஷாரி ஜோசப் எதிர் அயர்லாந்து – 147.82kph
மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றில் அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறியிருந்தது.
முதல் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி மோசமாக ஆடியிருந்தாலும் அல்ஷாரி ஜோசப் ஏனைய வீரர்களை விட சிறப்பாக பந்துவீசியிருந்தார். இதில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் போல் ஸ்ரெய்லிங்கிற்கு எதிராக மணிக்கு 147.82 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசியிருந்தார். அத்துடன், 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் இவர் பெற்றுக்கொண்டார்.
- பெட் கம்மின்ஸ் எதிர் ஆப்கானிஸ்தான் – 147.37kph
T20 உலகக்கிண்ணத்தின் சுபர் 12 சுற்றுடன் அவுஸ்திரேலிய அணி வெளியேறியிருந்தது. இதில் சுபர் 12 சுற்றின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக திரில் வெற்றியொன்றினை அவுஸ்திரேலியா பதிவுசெய்தது.
குறிப்பிட்ட இந்தப்போட்டியில் பெட் கம்மின்ஸ் மணிக்கு 147.37 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீசியிருந்தார். இந்த தொடரில் இவருடைய அதிக வேகமான பந்தாக இது மாறியிருந்தது. எனினும், இம்முறை தொடரில் இவர் 3 விக்கெட்டுகளை மாத்திரம் வீழ்த்தி அணிக்கு ஏமாற்றமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<