அடிலெய்ட் டெஸ்ட்டில் பட் கம்மின்ஸுக்கு தடை: தலைவரானார் ஸ்மித்

The Ashes – 2021-22

343
Getty Image

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த காரணத்தால் ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பட் கம்மின்ஸ் திடீரென விலகியுள்ளார்.

இதனையடுத்து, இங்கிலாந்துடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அணியின் தலைவராக செயல்படுவார் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று (16) பகலிரவு போட்டியாக ஆரம்பமாகியது.

இதனிடையே, 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பட் கம்மின்ஸுக்கு விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டில் நேற்று இரவு உணவகத்திற்கு சென்ற பட் கம்மின்ஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட் கம்மின்ஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், ஆஷஸ் 2-வது டெஸ்ட்டில் பட் கம்மின்ஸ் விளையாட முடியாத சூழ்நிலை உருவானதால் அவர் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்பில், பட் கம்மின்ஸ் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ”2ஆவது டெஸ்ட்டில் விளையாட முடியாமல் இருக்கிறேன். ஆனால், வேகப் பந்துவீச்சாளர் மைக்கல் நீசர் இறுதியாக வாய்ப்புப் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. அருமையாக பந்துவீசக்கூடியவர், திறமையான வீரர். மிகவும் ஏமாற்றமளிக்கிறது,

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் நம்மை பந்தாடுகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து உற்சாகப்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்

இதனிடையே, பட் கம்மின்ஸின் விலகல் தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிவிப்பில், ‘பட் கம்மின்ஸ் சாப்பிட்ட அதே உணவகத்தில் தான் மிட்ஷெல் ஸ்டார்க், நாதன் லயன் ஆகிய இருவரும் இருந்தார்கள். ஆனால், தனித்தனி மேசையில் இருந்தனர்’ எனத் தெரிவித்துள்ளது.

அதேபோல, மெல்போர்னில் நடைபெறும் Boxing Day டெஸ்ட் போட்டியில் பட் கம்மின்ஸ் விளையாடுவார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்தும், உப தவைராக டிராவிஸ் ஹெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்டின்போது, பந்தை சேதப்படுத்தியதாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சில அவுஸ்திரேலிய வீரர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு ஸ்மித் ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடைபெற்றார். அத்துடன் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தலைவர் பதவியை ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, பட் கம்மின்ஸுக்குப் பதிலாக வேகப் பந்துவீச்சாளர் மைக்கல் நீசர் டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார். முன்னதாக இந்தப் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<