முரளி கிண்ணம் 2016 செப்டம்பர் 21 முதல்

5600
2016 Murali Cup

முரளி நல்லிணக்க கிண்ணம் 2016 நேற்று வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது. இதன்படி இந்த கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறத் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

முரளி கிண்ணம் அபிவிருத்தி மற்றும் குறிப்பாக, இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலை கிரிக்கட் வீரர்களை ஊக்குவிக்க மற்றும் வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கிரிக்கட் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடத்தப்படும் ஒரு கிண்ணமாகும். அத்தோடு மக்களிடையே ஒற்றுமை, நல்லெண்ணம், நல்லிணக்கம்.மற்றும் மனிதாபிமானத்தை வளர்க்கவே இந்தக் கிண்ணம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறுகையில் “விளையாட்டு என்பது அனைவருக்கும் எவ்வாறு ஒரு நாடாக ஒன்றாக இருப்பது, ஒரு உயிர்நாடியாக செயற்படுவது என்ற செய்தியை பரப்பும் மையமாகும். இந்தக் கிண்ணம் திறமைகளைக் கொண்ட வீரர்களுக்கு தமது திறன்களை வெளிக்காட்ட சிறந்த ஒரு வாய்ப்பாக அமையும், மற்ற கலாச்சரங்களை பற்றி அறியக் கூடியதாக இருக்கும்” என்று கூறி இருந்தார். இந்த தடவை நடைபெறும் முரளி நல்லிணக்க கிண்ணம் 5ஆவது தடவையாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அத்தோடு இந்த தொடர் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்தக் கிண்ணம் தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன கூறுகையில் “கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற முரளி நல்லிணக்க கிண்ணத்தின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திறமையான கிரிக்கட் வீரர்கள் இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. இங்கு பிரகாசிக்கும் வீரர்கள் எப்போதாவது ஒருநாள் இலங்கை தேசிய அணியில் விளையாட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்” என்று கூறியிருந்தார்.

5 நாட்களாக நடைபெற உள்ள இந்த தொடரில் 16 பாடசாலை மாணவர் அணிகளைக் கொண்ட அணிகளும், 8 23 வயதிற்குட்பட்டோர் பெண்கள் கிரிக்கட் கழக அணிகளும் களமிறங்க உள்ளன. அத்தோடு இந்த தொடரின் போட்டிகள் வடக்கு மாகாணங்களில் உள்ள நகரங்களான யாழ்ப்பாணம், ஒட்டுசுட்டான், மாங்குளம், மற்றும் கிளிநொச்சியில் அமைந்துள்ள 5 மைதானங்களில் நடைபெற உள்ளது.

கடந்த கால போட்டிகளைப்  பார்க்கும் போது ஆண்கள் பிரிவில் புனித பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரி கொழும்பு ஆகிய அணிகள் தலா 2 தடவைகள் கிண்ணத்தை வென்றுள்ளதோடு நிட்டம்புவ பெண்கள் கழக அணி ஒரு தடவை வென்றுள்ளது. கொழும்பு ரோயல் கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி கொழும்பு மற்றும் நாலந்தா கல்லூரி கொழும்பு ஆகிய அணிகள் இந்த முறை முரளி கிண்ண போட்டியில் முதல் தடவையாக இடம்பெற உள்ளன.

ஆண்கள் போட்டி – குழு A – யாழ்ப்பாணம் / புனித சம்பத்தரிசியார் கல்லூரி மைதானத்தில்

1. யாழ்ப்பாணம் இணைந்த கல்லூரிகள்
2. கொழும்பு றோயல் கல்லூரி
3. சீனிகம இணைந்த கல்லூரிகள்
4. மலையக இணைந்த கல்லூரிகள்

ஆண்கள் போட்டி – குழு B – யாழ்ப்பாணம் / மத்திய கல்லூரி மைதானத்தில்
1. மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்
2. செயின்ட் ஜோசப் கல்லூரி, கொழும்பு
3. மொனராகல இணைந்த கல்லூரிகள்
4. சாஹிரா கல்லூரி, மருதானை

ஆண்கள் போட்டி – குரூப் C – கிளிநொச்சி / மத்திய கல்லூரி மைதானத்தில்
1. கிளிநொச்சி – முல்லைத்தீவு இணைந்த கல்லூரிகள்
2. நாலந்தா கல்லூரி, கொழும்பு
3. களுத்துறை வித்தியாலயம்
4. புனித அலோசியஸ் கல்லூரி, இரத்தினபுரி

ஆண்கள் போட்டி – D – முல்லைத்தீவு / DIOR ஓவல்
1. மன்னார்-வவுனியா இணைந்த கல்லூரிகள்
2. கிங்ஸ்வூட் கல்லூரி, கண்டி
3. காலி மஹிந்த கல்லூரி
4. திருகோணமலை / பட்டி இணைந்த கல்லூரிகள்

பெண்கள் போட்டி – குழு A
1. நிட்டம்புவ பெண்கள் அணி
2. சக்தி பெண்கள் அணி
3. வடக்கு / கிழக்கு இணைந்த பெண்கள் அணி
4. பதுள்ள பெண்கள் அணி

பெண்கள் போட்டி – குழு B
1. சீனிகம பெண்கள் அணி
2. மாத்தளை பெண்கள் அணி
3. பொலன்னறுவை பெண்கள் அணி
4. மொனராகல பெண்கள் எகடமி அணி

இந்த வருந்த முரளி கிண்ணத்தின் பிரதான அனுசரணையாளர்களாக அரின்மா ஹோல்டிங்ஸ் நிறுவனமும் மற்ற முக்கிய அனுசரணையாளர்களாக பார்ச்சூன், டோக்கியோ சிமெண்ட், மாஸ், எக்ஸஸ், இலங்கை விளையாட்டு சங்கம் – குயின்ஸ்லாந்து மற்றும் சப்வே ஆகிய நிறுவங்களும் செயற்படவுள்ளன.