சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் 12ஆவது நாளான நேற்று (04) இலங்கை அணி ஒரு தங்கப் பதக்கத்தையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் வென்று அசத்தியது.
இதன்மூலம் இம்முறை ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் 45 நாடுகளில் ஒட்டுமொத்தமாக 4 பதக்கங்களை வென்ற இலங்கை அணி மெய்வல்லுனர் போட்டிகளுக்கான பதக்கப் பட்டியலில் 8ஆவது இடத்தைப் பிடித்தது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நதீஷா தில்ஹானி லேக்கம்கே வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் இலங்கை முதல் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.
அதேபோல, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றதுடன், ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்காக தங்கம் வென்று கொடுத்த வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
>>இலங்கைக்கு பதக்க எதிர்பார்ப்பை கொடுத்த 18 வயது வீராங்கனை
அதுமாத்திரமின்றி, பெண்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் பெண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை சாதனைகள் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேபோல, 1951ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை இதுவரை 11 தங்கம், 6 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 31 பதக்கங்களை சுவீகரித்துள்ளது.
இதனிடையே, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொண்ட 14 வீரர்களில் 2 பேர் தனிநபர் நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்றதுடன், 2 குழு நிலை நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.
தங்க மகள் தருஷி
பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை வீராங்கனை தருஷி கருணாரட்ண முதலிடம் பிடித்து ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.
ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் மெய்வல்லுனர் போட்டி நிகழ்ச்சியில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வென்ற முதலாவது தங்கப் பதக்கமாகவும், ஒட்மொத்தத்தில் இலங்கை கைப்பற்றிய 12ஆவது தங்கப் பதக்கமாகவும் இது இடம்பிடித்தது.
இதற்கு முன் 2022இல் தென்கொரியாவின் பூசானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் சுசந்திகா ஜயசிங்க (100 மீட்டர்) மற்றும் தமயந்தி தர்ஷா (400 மீட்டர்) ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களை வெற்றிருந்தனர்.
அதேபோல, 72 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற இளம் இலங்கை வீராங்கனையாக இடம்பிடித்த அவர், ஆண் மற்றும் பெண் இருபாலாருக்குமான ஆசிய விளையாட்டு விழா 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார். அத்துடன், ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற 4ஆவது இளம் இலங்கை வீராங்கனையாகவும் இடம்பிடித்தார்.
வலள ஏ ரத்நாயக மத்திய கல்லூரியில் உயர்தரம் கல்வி கற்று வருகின்ற 18 வயதான தருஷி, இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மட்டப் மெய்வல்லுனர் போட்டிகளில் 3 தங்கம் உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக 8 பதக்கங்களை வெற்றி கொண்டார்.
>>இலங்கை சாதனையுடன் பதக்கம் வென்று புது வரலாறு படைத்த நதீஷா
அதுமாத்திரமின்றி, இந்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் 2 தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அசத்தினார். இதில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீட்டரை 2 நிமிடங்கள் 00.66 செக்கன்களில் நிறைவு செய்து ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையையும், இலங்கை சாதனையையும் முறியடித்து அசத்தினார். இந்த நேரப் பெறுதியானது அவரது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுதியாகவும் பதிவாகியது.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் கடந்த 5 மாதங்களில் 8 சர்வதேச பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.
வலள ஏ ரத்நாயக கல்லூரியின் மெய்வல்லுனர் பயிற்சியாளராக சுசன்த பெர்னாண்டோ தருஷியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருவதுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலையீட்டினால் கடைசி நேரத்தில் ஆசிய விளையாட்டு விழாவிற்காக சீனா சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் தேசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இது இவ்வாறிருக்க, தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்ற போட்டியில் இந்தியாவின் ஹார்மில்ன் பெய்ன்ஸ் (2 நிமிடங்கள் 3.75 செக்கன்கள்) வெள்ளிப் பதக்கத்தையும், சீனாவின் வேங்க் சுன்யு (2 நிமிடங்கள் 3.90 செக்கன்கள்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
இப்போட்டியில் பங்கேற்ற மற்றுமொரு இலங்கை வீராங்கனையான கயன்திக்கா அபேரட்ண 2 நிமிடங்கள் 5.87 செக்கன்களில் நிறைவு செய்து 8 ஆவது இடத்தை பிடித்தார்.
இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு வெண்கலப் பதக்கம்
நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 02.55 செக்கன்களில் நிறைவு செய்த இலங்கை அணியினர் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.
பதக்கம் வென்ற இலங்கை அணியில் அருண தர்ஷன, காலிங்க குமாரகே, கேஷான் பபசர, ராஜித ராஜகருணா ஆகியோர் இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தனர்.
இறுதியாக 2006இல் கத்தாரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் இந்திய அணியினர் (3:01.52) தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள, கத்தார் அணியினர் (3:02.05) மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை தமதாக்கினர்.
இதனிடையே, பெண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள், 30.88 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது.
>>17 ஆண்டுகால பதக்க கனவை கோட்டை விட்ட இலங்கை
பெண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணியினால் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாக இது இடம்பிடித்ததுடன், இலங்கை சாதனையாகவும் பதிவானது.
அத்துடன், ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் பெண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை வென்ற முதல் பதக்கமும் இதுவாகும்.
இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் இலங்கை அணியில் சயுரி மெண்டிஸ், தருஷி கருணாரத்ன, ஜயஷி உத்தரா மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகியோர் இடம்பெற்றனர்.
பெண்களுக்கான 4X400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் பஹ்ரைன் அணி (3:27.65) தங்கப் பதக்கத்தையும், இந்திய அணி (3:27.85) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<