இலங்கைக்கு பதக்க எதிர்பார்ப்பை கொடுத்த 18 வயது வீராங்கனை

Asian Games 2022

855

சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இன்று (04) நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் தருஷி கருணாரத்ன, கயன்திகா அபேரட்ன ஆகிய இருவரும் களமிறங்கவுள்ளனர்.

அதேபோல, இன்று நடைபெறவுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான
4×400 மீட்டர் அஞ்சலோட்டம் இறுதிப் போட்டியில் இலங்கை அணி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டு விழாவின் 11ஆவது நாளான நேற்று (03) காலை நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியின் 2ஆவது தகுதிகாண் சுற்றை 2 நிமிடங்கள் 07.17 செக்கன்களில் நிறைவு செய்த கயன்திகா அபேரட்ன 3ஆவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3ஆவது தகுதிகாண் சுற்றில் பங்கேற்ற 18 வயதுடைய தருஷி கருணாரத்ன, போட்டியை 2 நிமிடங்கள் 05.48 செக்கன்களில் நிறைவு செய்து 2ஆவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இதன்படி, பெண்களுக்கான 3 தகுதிகாண் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பிரகாரம் ஒட்டுமொத்த நிலையில் தருஷி கருணாரத்ன 2ஆவது இடத்தையும், கயன்திகா அபேரட்ன 6ஆவது இடத்தையும் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இன்று (04) மாலை நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் தருஷி கருணாரத்னவிற்கு பதக்கமொன்றை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்லோட்டத்தின் 2ஆவது தகுதிகாண் சுற்றில் களமிறங்கிய தினுக தேஷான், பபசர நிகு, ரஜித ராஜகருணா மற்றும் பசிந்து கொடிக்கார அடங்கிய இலங்கை அணி, போட்டி தூரத்தை 3 நிமிடங்கள் 06.60 செக்கன்களில் கடந்து 2வது இடத்தைப் பிடித்தது.

இதன்படி, 12 அணிகள் பங்குபற்றிய ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்லோட்டத்தில் ஒட்டுமொத்த நிலையில் 4ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை அணி நாளை (04) நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

அதேபோல, பெண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்லோட்டத்தின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<