ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற தருஷி, டில்ஹானி

61
Tharushi & Dilhani qualify for 2024 Paris Olympics

இலங்கையின் இளம் மத்திய தூர ஓட்ட வீராங்கனை தருஷி கருணாரத்ன மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை டில்ஹானி லேக்கம்கே ஆகிய இருவரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

உலக மெய்வல்லுனர் தரவரிசைகளின் அடிப்படையில் இவ்விருவரும் தகுதிபெற்றுள்ளதாக உலக மெய்வல்லுனர் சங்கத்தின் இணையத்தளத்தில் நேற்று (02) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் போட்டியிலும், தில்ஹானி லேக்கம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்டுத்தவுள்ளனர்.

இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு 48 வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி உலக தரவரிசையில் தருஷி கருணாரட்ன 45ஆவது இடத்தை அடைந்ததன் மூலம் ஒலிம்பிக்கில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

அத்துடன், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்காக 32 வீராங்கனைகள் இம்முறை ஒலிம்பிக் விழாவிற்காக தகுதி பெற்றுள்ள நிலையில், உலக தரவரிசையில் 26ஆவது இடத்தைப் பெற்ற தில்ஹானி லேக்கம்கே ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

இதேவேளை, தெற்காசியாவின் அதிவேக வீரரான யுபுன் அபேகோன், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடி தகுதியை பெறும் வாய்ப்பை இழந்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூலை 7ஆம் திகதிக்கு முன்னர் அவரால் ஏதேனும் சர்வதேசப் போட்டியில் 100 மீற்றர் தூரத்தை 10.44 செக்கன்களுக்குள் பூர்த்தி செய்ய முடியுமாக இருந்தால் வைல்ட் கார்ட் முறையில் ஒலிம்பிக் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

எனவே, 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஜூலை 7ஆம் திகதிக்குள் சிறந்த திறமையை காண்பிப்பவர்களுக்கு மாத்திரம் வைல்ட் கார்ட் அனுமதி வழங்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பெரும்பாலும் அருண தர்ஷனவுக்கு ஒலிம்பிக்கில் பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது உலக தரவரிசையில் 51ஆவது இடத்தில் இருக்கிறார். உலக தரவரிசையில் உள்ள 48 வீரர்களுக்கு மாத்திரம் தான் இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்குபற்ற முடியும். எனவே தரவரிசையில் அருணவிற்கு முன்னாள் உள்ள 3 வீரர்களில் யாராவது ஒருவர் வெளியேறினால் அவருக்கு ஒலிம்பிக் செல்ல வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பது நாளை (04) தெரியவரும்.

இது இவ்வாறிருக்க, இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையில் இருந்து இதுவரை 5 வீரர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<