உலகின் அதிக உயரமான வலைப்பந்து வீராங்கனை தர்ஜினி சிவலிங்கத்தின் அசாத்தியமான 208 சென்டிமீற்றர் உயரம் மற்றும் அபாரமான ஷூட்டிங்கினால் புனித அல்பான்ஸ் அணி அவுஸ்திரேலியாவின் GFL தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ளது.
வலைப்பந்து அரங்கில் கோல் ஷூட்டரான தர்ஜினி சிவலிங்கம் கூட்டமொன்றுக்கு மத்தியில் நிற்க எந்த சிரமத்திற்கும் முகம் கொடுக்கமாட்டார்.
அது தனது சொந்த ஊரான வட இலங்கையின் யாழ்ப்பாணம் அல்லது சுப்பர்செயின்ட்ஸ் வலைப்பந்து அரங்காக இருந்தாலும் சரியே. 37 வயதான அந்த வீராங்கனை பொதுவாக எப்போதும் அனைவரது அவதானத்துக்கும் உள்ளாவார்.
அவரது 208 சென்டி மீற்றர் உயரத்தால் அனைவரது கவனத்தையும் கவர்வது இயற்கையானதாகும்.
இவ்வாறான தவிர்க்க முடியாத அவதானிப்புகள் அவருக்கு பெரும் பாதகமாகவே இருக்கும். அது ஒரு வித்தியாசமான உணர்வையே ஏற்படுத்தும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
தனது உயரம் காரணமாக தர்ஜினி ஒரு சிறுமியாக இருந்த காலத்திலேயே தேவையற்ற அவதானிப்புகளால் அதிகம் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்திருக்கிறார்.
எனினும் அவைகளைத் தாண்டி அவர் இலங்கை தேசிய அணியிலும் இந்த ஆண்டு GFNL ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வீராங்கனையாகவும் விக்டோரியா வலைப்பந்து லீக்கின் சிட்டி வெஸ்ட் பெல்கன்ஸ் அணியிலும் வெற்றிகளைக் கண்டு வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் வலைப்பந்து போட்டிகளில் விளையாடியது தனது கண்களை திறந்த அனுபவம் என்று தர்ஜினி குறிப்பிட்டுள்ளார். சொந்த நாட்டை விடவும் மக்கள் தம்மை ஆதரிப்பதை காணமுடிந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
“எனது உயரத்தை நான் விரும்பவில்லை. (அதற்காக) நான் கவலை அடைந்தேன்” என்று அவர் கூறுகிறார்.
“இலங்கையில் நான் சிறு வயதாக இருக்கும்போது எல்லோரும் என்னைப் பார்த்து சிரிப்பார்கள். எனது உயரம் பெரிய பிரச்சினையாக இருந்தது. எனது பெற்றோரும் அதிக அழுத்தத்திற்கு முகம்கொடுத்தார்கள்.
இந்த உயரத்தை விரும்புவதாக அவுஸ்திரேலிய மக்கள் என்னிடத்தில் கூறினார்கள். எனது உயரம் அவுஸ்திரேலியாவில் அதிகம் ஏற்கப்பட்டது. வலைப்பந்து அரங்கில் இது ஒரு ஆயுதமாக இருக்கிறது. இதனைக் கொண்டு அணிக்கு வேகமாக புள்ளிகளை பெற்றுக் கொடுக்க முடியும்” என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத் தொடரின் சம்பியனாக ஆவரங்கால் மத்தி
2017ஆம் ஆண்டில் புனித அல்பான்சுக்கு ஆடுகளத்தில் தர்ஜினியின் உயரம் அதிர்ஷ்டத்தை தேடித்தந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
சுப்பர்செயின்ட்ஸ் கடந்த பருவத்தில் ஐந்து போட்டிகளில் வென்று ஒன்பதாவது இடத்தை பிடித்தபோதும் இம்முறை தனது அணியில் நட்சத்திர ஷூட்டர் மற்றும் உலகின் அதிக உயரமான சர்வதேச வலைப்பந்து வீராங்கனையை பெற்றிருப்பதால் அந்த அணி பூர்வாங்க இறுதிப் போட்டி ஒன்றில் தொடர்ச்சியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் சவுத் பர்வோன் அணியை எதிர்கொள்கிறது.
பெரும்பாலான தற்காப்பு வீராங்கனைகளை விடவும் அனுகூலம் ஒன்றை பெற்றிருந்தபோதும் அதற்காக அவரது திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையில் அவர் பந்தை வலைக்குள் செலுத்த தவறினால் அவரது பயிற்சியாளர் தண்டனையாக 1000 தடவைகள் பந்தை வலைக்குள் போடும்படி பயிற்சி அளிப்பார். அதனால் தவறு விடாமல் அவர் விரைவாக கற்றுக்கொள்வார்.
புனித அல்பான்ஸ் அணியில் இணைந்தது தொடக்கம் அந்த அணியில் இருப்பவர்கள் தமக்கு செய்தது அவர்களுக்கு சிறிய விடயமாக இருந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் அங்கு கழித்த ஐந்து மாதங்களும் அந்த கழகம் தமக்கு ஒரு புதையலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
“இந்த ஆண்டு GFL தொடரில் புனித அல்பான்ஸ் அணியில் நான் முழுமையாக விருப்பத்துடன் விளையாடினேன்” என்றார்.
“நான் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அவுஸ்திரேலிய மக்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் நட்பு அபாரமானது.
புனித அல்பான்ஸ் மக்களும் அதிக விருந்தோம்பல் மற்றும் ஆதரவு தந்தார்கள். அவுஸ்திரேலிய காலநிலையில் அதிக குளிரை சமாளிக்க எனக்கு நீண்ட காற்சட்டைகளையும் தந்தார்கள்.
“முன்னாள் அவுஸ்திரேலிய வீராங்கனை நிகோல் ரிச்சட்சன் மற்றும் அழகான பெண்ணான முகாமை தலைவி மெகான் டீன் ஆகியோரின் கீழ் விளையாடுவதை நான் விரும்புகிறேன்.
வீராங்கனைகள் அதிக உதவி மனப்பான்மை கொண்டவர்களாகவும் நட்பு பாராட்டுபவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறான ஆதரவு சூழல் எனது ஆட்டத்திறமையை மேம்படுத்த உதவியதாக உணர்கிறேன்
கீலொங் (நகர்) அற்புதமானது. இங்கு டி கிரண்டி விளையாட்டு விற்பனை கூடத்தில் எனக்கு பொருத்தமான பெண்களின் 17 அளவு பாதணிகளைக் கூட பெறமுடியுமாக உள்ளது” என்று தர்ஜினி சிவலிங்கம் குறிப்பிட்டார்.
இலங்கையில் அரிதாக இருக்கும் அதிகம் ஒருங்கிணைக்கப்பட்ட போட்டி தொடர் ஒன்றில் விளையாடுவது அதிக சவாலானது என்று எல்லோராலும் அன்பாக ‘ஜெனி’ என்று அழைக்கப்படும் அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த தொடர் காரணமாக குறுகிய காலத்திற்குள் தனது உடல் தகுதி மற்றும் பலம் அதிகரித்ததாக குறிப்பிட்டார்.
தர்ஜினி ஆடும் சிட்டி வெஸ்ட் கழகத்தின் உதவி பயிற்சியாளர் ரிச்சட்சன் இந்த ஆண்டு போட்டி தொடரில் தர்ஜினி ஆட்டத்தை மேம்படுத்துவதில் அதிகம் அவதானம் காட்டி வருகிறார். இதனால் இந்த இருவருக்கும் இடையில் அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
டயமன்ட்ஸ் மிட்கோர்ட் கன் கழக முன்னாள் வீராங்கனையும் 2002 பொதுநலவாய போட்டியில் தங்கம் வென்றவருமான ரிச்சட்சன், தனது உற்ற நண்பி ஒருவர் வளர்ச்சிப் பாதையில் செல்வது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார்.
“அவர் ஒரு தனி நபராக வளர்ச்சி பெற்றுள்ளார். இதில் வலைப்பந்து வீராங்கனையாக மாத்திரமன்றி அவரது ஆளுமையும் வெளிப்பட்டுள்ளது. ஆட்டத்தில் அவர் நீண்ட தூரம் வந்துள்ளார். ஆனால் ஆடுகளத்திற்கு வெளியிலும் கூட அவர் வளர்ச்சி பெற்றிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது” என்று ரிச்சட்சன் குறிப்பிட்டார்.
“அவர் அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர். சிட்டி வெஸ்ட் பெல்கன்ஸ் மற்றும் சென் அல்பான்ஸ் இரண்டுக்கும் மிகப்பெரிய சொத்தாகும். அவரை அடுத்த ஆண்டிலும் வரவழைக்க நாம் எதிர்பார்த்திருக்கிறோம். என்றாலும் அவர் இலங்கை அணியின் மிக முக்கிய வீராங்கனையாக உள்ளார்.
இங்கு அவுஸ்திரேலியாவில் அவர் தொடர்ந்து தனது ஆட்டத்தை மேம்படுத்துவது இலங்கைக்கு மிக நல்லதாக இருக்கும் என்பதே எமது பார்வையாகும். என்றாலும் அவர் நிலையான ஆட்டத்தை கொண்டிருக்கிறார். எனவே எவ்வாறான நிலை ஏற்படும் என்பது பற்றி நாம் பார்த்திருக்கிறோம்” என்று ரிச்சட்சன் கூறினார்.
அடுத்த வாரம் இடம்பெறவிருக்கும் மாபெரும் இறுதிப் போட்டியின் இரண்டு நாட்களுக்கு பின் தர்ஜினி சிவலிங்கம் சொந்த நாட்டுக்கு திரும்புகிறார். தனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் மீண்டும் திரும்பி வந்து தனது திறமையை தக்கவைத்துக் கொள்வார் அல்லது மேலும் திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இலங்கை தேசிய அணியுடனான எனது பொறுப்புகளில் மாத்திரே அது தங்கியுள்ளது. அடுத்த ஆண்டு நாம் ஆசிய கிண்ணத்தை எதிர்கொள்கிறோம். அது உலக சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டியாகவும் உள்ளது” என்று அவர் கூறினார்.
“எனினும் புனித அல்பான்ஸ் மற்றும் சிட்டி வெஸ்ட் பெல்கன்ஸ் அணிகளுக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெறுவதை விரும்புகிறேன்.
எனது விருப்பமான பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் இல்லாமல் இருப்பது அதிகம் கடினமாக இருக்கும். அவர்கள் இல்லாதது பெரும் இழப்பாக இருக்கும்” என்றும் கூறினார்.