இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு ஜனவரி 28ஆம் திகதி ஆரம்பமாக உள்ள தென்னாபிரிக்கா அணியுடனான 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளைக் கொண்ட தொடருக்கு தற்காலிக அணித் தலைவராக உபுல் தரங்கவை அறிவித்துள்ளது.
தென்னாபிரிக்கா சுற்றுபயணத்துக்கு அணித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அஞ்சலோ மெதிவ்ஸ் நடந்து முடிந்த இரண்டாவது T20 போட்டியின் போது ஏற்பட்ட தசை பிடிப்பு உபாதை மற்றும் சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அணியிலிருந்து விலக நேரிட்டது. அதனை தொடர்ந்து தினேஷ் சந்திமால் அணித் தலைவராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூத்த வீரர் மற்றும் அதிக அனுபவம் என்பவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உபுல் தரங்க தேர்ந்து எடுக்கப்பட்டார்.
அத்துடன் உபுல் தரங்க, கடந்த ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய அணிகளுடனான மும்முனை போட்டித் தொடரில், அஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமாலின் பிரசன்னம் அற்ற நிலையில், இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணியை வெற்றி பாதைக்கு வழி நடத்தியிருந்தார்.
அதே நேரம் ஒருநாள் போட்டிகளுக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் வேகப் பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் காயம் காரணமாக இந்த வார ஆரம்பத்தில் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்கள்.
மேலும், இடது கை சுழல் பந்து வீச்சாளர் மற்றும் சகல துறை ஆட்டக்காரர் சதுரங்க டி சில்வா மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி சார்பாக 6 போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள அவர், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலக கிண்ணப் போட்டிகளில் லசித் மாலிங்கவின் தலைமையில், சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்த இலங்கை குழாமில் இடம் பிடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பருவக்காலத்துக்காக NCC கழகத்திலிருந்து சோனகர் விளையாட்டுக் கழகத்துக்கு மாறிய அவர் 6 போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் 50.90 சராசரியில் 560 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
23 வயது நிரம்பிய NCC, ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி முதல் தடவையாக பெயரிடப்பட்டுள்ளதோடு, கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வேகப்பந்து வீச்சாளார் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் லஹிறு மதுஷங்கவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
நடைபெற்று வரும் இலங்கை கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வரும் சந்துன் வீரக்கொடி 6 போட்டிகளில் 100 விகித துடுப்பாட்ட வேகத்தில், இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் உள்ளடங்கலாக 530 ஓட்டங்களை குவித்துள்ளார். மாத்தளை, புனித தோமியர் கல்லூரியை சேர்ந்த மதுஷங்க, 27 லிஸ்ட் A போட்டிகளில் பங்குபற்றியுள்ளதோடு, அண்மையில் நடந்து முடிந்த நான்கு நாட்களை கொண்ட சூப்பர் 8 போட்டியில் துடுப்பாட்டத்தில் 164 ஓட்டங்களையும் தனது பந்து வீச்சின் மூலம் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
இருபதுக்கு இருபது போட்டிகளில் நிபுணத்துவம் வாய்ந்த இசுறு உதான, சீக்குகே பிரசன்ன மற்றும் திக்ஷீல டி சில்வா ஆகியோர் தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்று T20 போட்டிகளை கொண்ட தொடர் முடிவுற்றவுடன் நாடு திரும்பவுள்ளனர்.
இலங்கை ஒருநாள் சர்வதேச குழாம் – உபுல் தரங்க (அணித் தலைவர்), தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், சந்துன் வீரக்கொடி, அசேல குணரத்ன, சச்சித் பத்திரண, லக்ஷான் சந்தகன், சதுரங்க டி சில்வா, ஜெப்ரி வண்டர்சே, லஹிரு மதுஷங்க, லஹிரு குமார, விகும் சஞ்சய, சுரங்க லக்மால், நுவன் குலசேகர