சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி.யினால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது என கருதப்படும் ஹோல் ஒப் பேம் (Hall of fame) விருது இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென்னாபிரிக்காவின் அலன் டொனால்ட் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இலண்டனில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, குறித்த மூவருக்கும் ஹோல் ஒப் பேம் விருது வழங்கப்பட்டுள்ளது.
முரளிதரனுக்கு ஐ.சி.சி. இன் அதி உயரிய கௌரவ விருது
இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவனாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையையும், அதிக டெஸ்ட் சதங்களை பெற்றவர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். அத்துடன், ஒருநாள் போட்டிகளிலும் அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையுடன் பல்வேறு சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் கைவசம் வைத்துள்ளார்.
இவ்வாறு பல சாதனைகளை படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர், இந்த விருதினை பெறுவதன் மூலம், ஹோல் ஒப் பேம் விருதினை பெறும் 6வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தனக்கு கிடைத்துள்ள இந்த கௌரவம் குறித்து குறிப்பிட்ட சச்சின்,
“இந்த சந்தர்ப்பத்தில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்த, பெற்றோர், சகோதரன் மற்றும் எனது மனைவி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரம், சிறுபராயத்தில் எனக்கு பயிற்றுவிப்பாளராகவும், ஆலோசகராகவும் ரமகண்ட் அச்ரேகர் கிடைத்தமையை அதிர்ஷடமாக கருதுகின்றேன்” என கூறினார்.
ஐசிசியின் இந்த விருதினை பெறும் மற்றுமொருவர் தென்னாபிரிக்காவின் மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சாளர் அலென் டொனால்ட். இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2003ம் ஆண்டு ஓய்வுபெற்றிருந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் ஹோல் ஒப் பேம் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அலென் டொனால்ட் தென்னாபிரிக்கா அணியில் விளையாடி, 330 டெஸ்ட் விக்கெட்டுகள் மற்றும் 272 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
“எனது வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ச்சியை மின்னஞ்சல் மூலமாக அறிந்துக்கொண்டேன். மின்னஞ்சலை திறந்த போது, நான் ஐசிசியின் ஹோல் ஒப் பேம் விருதுக்கு தெரிவாகியுள்ளேன் என்ற செய்தி மிக மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இந்த விருதுக்காக ஐசிசிக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதுடன், எனது பயிற்றுவிப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் எனது கிரிக்கெட் வாழ்க்கையுடன் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என அலென் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
டிராவிட், பொண்டிங் மற்றும் டெய்லருக்கு ஐ.சி.சி. கௌரவம்
டப்லினில் கடந்த ஞாயிற்றுக்கிழமை……..
இதேவேளை, ஐசிசியின் இந்த உயரிய விருதினை பெறும் மற்றுமொருவராக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனையான கேத்ரின் பிட்ஸ்பாட்ரிக் உள்ளார். வேகப் பந்து வீசும் இவர், அவுஸ்திரேலிய மகளிர் அணிக்காக 109 ஒருநாள் மற்றும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முறையே, 180 மற்றும் 60 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம், ஐசிசியின் ஹோல் ஒப் பேம் விருதினை பெறும் 8வது வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார்.
“கிரிக்கெட்டின் மிகச்சிறந்த விருதினை பெற்றுக்கொள்வதில் பெருமையடைகிறேன். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை விடவும், அவர்கள் அனைவரும் போட்டியின் திசையை மாற்றக்கூடியவர்கள் என்பதை அறிய முடிகின்றது. அவர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவதை தங்களுக்கேற்ப மாற்றிக்கொண்டவர்கள்” என்றார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<