அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ICC T20 உலகக் கிண்ணத் தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான 15 பேர்கொண்ட தென்னாபிரிக்கா குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி யின் 7ஆவது T20 உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்காளதேஷ் ஆகிய 8 அணிகள் நேரடியாக சுபர் 12 சுற்றில் விளையாட தகுதி பெற்றுவிட்டன.
இந்த நிலையில், முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சுபர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. மேற்கிந்திய தீவுகள், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன.
இதனிடையே, T20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது தென்னாபிரிக்கா அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- T20 உலகக் கிண்ண அவுஸ்திரேலிய குழாத்தில் சிங்கப்பூர் வீரர்
- T20 உலகக்கிண்ணத்துக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு
அதன்படி, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்கா அணியை டெம்பா பவுமா வழிநடத்தவுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான தொடரில் காயமடைந்த அவர், தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு அணிக்குத் தலைமை தாங்குகிறார்.
அதேபோல, காயம் காரணமாக நட்சத்திர வீரர் ரஸ்ஸி வென் டர் டஸன் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னாபிரிக்கா அணியில் இடம்பெறவில்லை.
கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் போது ராஸி வான் டர் டஸனின் இடது கை ஆள்காட்டி விரலில் முறிவு ஏற்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அவருக்குப் பதிலாக இளம் வீரரான டிரிஸ்டான் ஸ்டப்ஸுக்கு முதல் முறையாக தென்னாபிரிக்கா உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜுலை மாதம் தென்னாபிரிக்கா அணியில் இடம்பிடித்த ரில்லி ரோசவ்வும் T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்கா அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதனிடையே, T20 உலகக் கிண்ணத்துக்கு முன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட T20i மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது.
தென்னாப்பிரிக்கா T20 உலகக் கிண்ண குழாம்:
டெம்பா பவுமா (தலைவர்), குயிண்டன் டி கொக், ரீஷா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாஸன், கேஷவ் மஹாராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ஆன்ரிச் நோர்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிடோரியஸ், கங்கிசோ ரபாடா, ரில்லி ரோசவ், தப்ரைஸ் ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்.
மேலதிக வீரர்கள்: பிஜோர்ன் பார்டுயின், மார்கோ ஜென்சன், அன்டைல் பெஹ்லுக்வேயோ
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<