பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கையுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து தென்னாபிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா விலகியுள்ளார்.
சுற்றுலா தென்னாபிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இறுதிவரை போராடிய இலங்கைக்கு திரில் வெற்றி
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து தென்னாபிரிக்க அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது 26ஆவது ஓவரில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க விக்கெட் காப்பாளரை நோக்கி வீசிய பந்து டெம்பா பவுமாவின் வலதுகை பெருவிரலை பலமாகத் தாக்கியது.
எனவே, அந்த அணிக்காக திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த டெம்பா பவுமா, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 38 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், போட்டியின் பிறகு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது வலதுகை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளமை கண்டயறியப்பட்டது.
இதனையடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை உடனடியாக தென்னாபிரிக்காவுக்கு திருப்பி அழைக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
Video – இலங்கை அணியின் வெற்றி எந்தவகையில் சிறந்தது?| SLvSA – 1st ODI Cricketry
இந்நிலையில், இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக சுழல் பந்துவீச்சாளர் கேஷவ் மகராஜ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள T20 தொடரில் தென்னாபிரிக்க அணித்தலைவராக யார் செயல்படுவார் என்பது அடுத்துவரும் நாட்களில் அறிவிக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பகலிரவுப் போட்டியாக கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<