தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவராக டெம்பா பவுமா நியமனம்

675
Temba Bavuma named new South Africa Test captain

தென்னாபிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவராகும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவராக டீன் எல்கர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் தென்னாபிரிக்கா அணி முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதில் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் வெற்றியும் அடங்கும். இருப்பினும், தென்னாபிரிக்கா அணி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை இழந்தது. டீன் எல்கர் தலைமையில் தென்னாபிரிக்கா அணி 19 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றிகள்,7 தோல்விகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனவே, குறித்த தொடருக்கு முன் தென்னாபிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து டீன் எல்கர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக புதிய டெஸ்ட் தலைவராக டெம்பா பவுமாவை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே தென்னாபிரிக்கா ஒருநாள் மற்றும் T20I அணிகளின் தலைவராக டெம்பா பவுமா செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20I உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றோடு தென்னாபிரிக்கா அணி வெளியேறியது. இதனையடுத்து T20I அணியின் தலைவர் பதவியை டெம்பா பவுமா இராஜினாமா செய்தார்.

எனவே, தற்போது தென்னாபிரிக்கா டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் தலைவராக டெம்பா பவுமா செயல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெம்பா பவுமா தலைமையில் தென்னாபிரிக்கா அணி களமிறங்குகின்ற முதல் டெஸ்ட் தொடராக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் அமையவுள்ளது. இந்த தொடர் இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்கா அணி நேற்று (17) அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ராஸி வென் டெர் டுசென், லுங்கி என்கிடி மற்றும் கைல் வெர்ரைன் ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல, இனி வரும் காலங்களில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சரேல் எர்வியை டெஸ்ட் அணிக்காக பரிசீலிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, எய்டன் மார்க்ரமை மீண்டும் அணிக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த கீகன் பீட்டர்சனும் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்கா டெஸ்ட் குழாம்

டெம்பா பவுமா (தலைவர்), ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், சைமன் ஹார்மர், மார்கோ ஜென்சன், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் காப்பளார்), கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, அன்ரிச் நோக்கியா, கீகன் பீட்டர்ஸன், ககிசோ ரபாடா, ரையன் ரிகெல்டன்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<