தேசிய மட்ட ஸ்னூகர் போட்டிகளில் அண்மைக்காலமாக நட்சத்திர வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற கியூ கழகத்தைச் சேர்ந்த எம்.எப்.எம் பாசில், இம்முறை நடைபெற்ற 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.
இலங்கை மோட்டார் கார் சங்க ஸ்னூகர் விளையாட்டு அரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், MICH அணிக்காக விளையாடிய மொஹமட் தாஹாவை 6 இற்கு 4 என்ற செட் கணக்கில் தோல்வியடையச் செய்த மொஹமட் பாசில், இம்முறை போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்றார்.
இப்போட்டியின் முதலிரண்டு சுற்றுக்களிலும் பாசில் வெற்றிகளைப் பதிவுசெய்து முன்னிலை பெற்றிருந்த போதிலும், அடுத்த 3 சுற்றுக்களையும் தாஹா வெற்றிகொண்டு பாசிலுக்கு மிகப் பெரிய சவாலை கொடுத்திருந்தார். எனினும் எஞ்சிய 2 சுற்றுக்களையும் இலகுவாக வெற்றிகொண்ட பாசில், தொடர்ச்சியாக 5ஆவது தடவையாகவும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச கனிஷ்ட ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இவ்விரு வீரர்களும் பெற்றுக்கொண்டனர். முன்னதாக 2016இல் நடைபெற்ற 21 வயதுக்கு உட்பட்ட ஆசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பாசில், இறுதி 16 சுற்றுக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தேசிய தரத்திலான கூடைப்பந்து மைதானம்
முன்னதாக கடந்த 2016இல் நடைபெற்ற 64ஆவது தேசிய ஸ்னூகர் போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொண்ட 19 வயதான பாசில், கடந்த 2 தசாப்தங்களாக ஸ்னூகர் சம்பியனாக வலம்வந்து கொண்டிருந்த 18 தடவைகள் ஸ்னூகர் சம்பியன் பட்டத்தை வென்றவருமான சுசந்த பொதேஜுவை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியதுடன், முதற்தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து எம்.எம்.எம் முபீனுடன் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்திய பாசில், 6 இற்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இளம் வயதில் தேசிய ஸ்னூகர் சம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரராகவும் வரலாற்றில் இடம்பிடித்தார். இதேவேளை, 2014ஆம் ஆண்டு முதல் கனிஷ்ட ஸ்னூகர் சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற பாசில், கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கை ஸ்னூகர் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 65ஆவது தேசிய ஸ்னூகர் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்ததுடன், அதில் முன்னாள் சம்பியனான சுசந்த பொதேஜுவிடம் தோல்வியைத் தழுவி 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வெற்றியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது பாசில் கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் எனது இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த எனது ஆரம்ப நாள் ஆலோசகரும், இலங்கை ஸ்னூகர் சம்மேளனத்தின் தலைவருமான சுல்பி பசேலாவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விளையாட்டிற்காக நான் பிரவேசித்த ஆரம்ப காலத்திலிருந்து இன்றுவரை முழு ஆதரவை வழங்கி வருகின்ற அவர், இதற்கான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்தார்.
அதுமாத்திரமின்றி, எனது சகோதரன் பாஹிமும் ஸ்னூகர் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான் சிறுவனாக இருக்கும்போது அவர் விளையாடுவதைப் பார்ப்பதற்காக கியூ கழகத்துக்கு ஒவ்வொரு நாளும் செல்வேன். அதனால் ஏற்பட்ட ஆசையினால் தான் நானும் இந்த விளையாட்டை தெரிவு செய்தேன்.
இதனால், இலங்கையின் முதல்தர ஸ்னூகர் விளையாட்டு கழகமான கியூ கழகம், என்னை உற்காசப்படுத்தி ஸ்னூகர் பயிற்சிகளை இலவசமாக மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்ததுடன், உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பெற்றுக்கொடுத்தனர். இதன் காரணமாக 2016இல் இளம் வயதில் தேசிய ஸ்னூகர் சம்பியன் பட்டத்தை வென்ற முதல்வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனவே இதுவரையான எனது வெற்றிப் பயணத்துக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
”இதுதவிர, இவ்விளையாட்டுக்கு நான் பிரவேசித்த போது அப்போதைய இலங்கை ஸ்னூகர் மற்றும் பில்லியர்ட் சம்மேளனத்தின் தலைவராக இருந்த சுரைஸ் ஹாசிமின் முயற்சியினால், உலக பில்லியர்ட் சம்பியனான மைக் ரஸல்ஸின் கீழ் 3 மாதகாலம் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. நான் ரஸலிடம் 3 மாத காலப்பகுதியில் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். இதனால் எனது விளையாட்டுத் திறமை நாளுக்குநாள் வேகமாக முன்னேற்றம் கண்டது. இந்த காலகட்டத்தில் நான் பெற்ற நம்பிக்கையானது எனக்குத் தேவையான முடிவுகளை பெற்றுக் கொடுத்தது, இதன் முதல் படியாக நான் 2014 ஆம் ஆண்டு தேசிய கனிஷ்ட ஸ்னூகர் சம்பியன் பட்டத்தை வென்றேன். இதனையடுத்து 2018 வரை தொடர்ச்சியாக 5 வருடங்களாக அந்த சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளவும் முடிந்தது” என்றார்.
இந்நிலையில், முதற்தடவையாக தேசிய கனிஷ்ட சம்பியனாகத் தெரிவாகிய பாசில், 2015இல் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட ஸ்னூகர் சம்பியன்ஷிப் மற்றும் டுபாயில் நடைபெற்ற சிக்ஸ் போல் ரெட் ஸ்னூகர் சம்பியன்ஷிப் உள்ளிட்ட தொடர்களில் முற்தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டார். இதனையடுத்து 2016இல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய ஸ்னூகர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணியில் இடம்பிடித்த பாசில், இறுதி 16 சுற்றுக்குத் தெரிவாகி தனது சிறந்த வெற்றியையும் பதிவுசெய்தார்.
தேசிய மட்ட வீரர்களுக்கு விரைவில் தொழில் வாய்ப்பு – விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி
இந்நிலையில், மிகவும் கஷ்டத்துக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஸ்னூகர் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்ற பாசில், இதுவரை எந்தவொரு நிரந்தர தொழிலொன்று இல்லாமல் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார். இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,
”எனது இந்த வெற்றிக்குப் பின்னால் பல கசப்பான அனுபவங்களும் இருந்தன. உண்மையில் கொழும்பில் உள்ள பிரபல கியூ கழகமொன்றுக்கு நான் விளையாடினாலும் எனக்கு தேவையான உதவிகளை இதுவரை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்நிலையில், 8 பந்துகள் கொண்ட கழகமொன்று என்னுடைய திறமைகளை இனங்கண்டு எனக்கு உதவி செய்ய முன்வந்ததுடன், என்னை அவர்களது கழகத்தின் அங்கத்தவராகவும் இணைத்துக்கொண்டனர். எனவே எனது திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய அடிப்படை தேவைகளை அவர்கள் எனக்கு வழங்கியிருந்தார்கள்” என்றார்.
இதேவேளை, தெமடகொட சென். ஜோன்ஸ் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்ட பாசிலுக்கு, பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்ப பின்னணி காரணமாக மேற்படிப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போனது. எனினும், தனது சகோதரனது வழிகாட்டலின் உதவியுடன் ஸ்னூகர் விளையாட்டுக்கு பிரவேசித்த பாசில், இன்று இலங்கையின் இளம் ஸ்னூகர் சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்றார்.
இறுதியாக, ”19 வயதில் இந்த மைல்கல்லை எட்ட முடிந்தமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. எனது திறமைகளை வளர்த்து ஒரு சிறந்த ஸ்னூகர் வீரராக வரவேண்டும் என்பதுதான் எனது இலட்சியம். அதே நேரம், இலங்கையின் முன்னாள் ஸ்னூகர் ஜாம்பவானான மறைந்த எம்.ஜே.எம் லாபிரைப் போல வெற்றிகளைப் பெற்று எனது பெற்றோருக்கும், வீட்டாருக்கும் பெருமையை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது அடுத்த இலக்கு. இதற்குத் தேவையான பணம் உள்ளிட்ட தேவைகளை யாராவது தனவந்தர்கள், சமூக நலன் விரும்பிகள் முன்வந்து செய்துகொடுத்தால் நிச்சயம் எனது எதிர்காலம் இன்னும் சிறப்பாக அமையும்” எனவும் பாசில் இதன்போது தெரிவித்தார்.