டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்ச்சியில் இலங்கை கொடியை ஜூடோ வீரர் சாமர நுவனும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா டி சில்வாவும் ஏந்திச் செல்வார் என தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெறவிருந்தது. ஆனால், உலக முழுவதும் வேகமாகப் பரவிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடைபெறவிருந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் பங்குபற்றும் இலங்கை வீரர்களுக்கு விசேட கொடுப்பனவு
இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு மத்தியிலும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதற்கு ஜப்பான் அரசும், சர்வதேச ஒலிம்பிக் சங்கமும் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா இம்மாதம் 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜப்பான் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீர வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கு இலங்கையிலிருந்து 9 வீரர்கள் தகுதிபெற்றுள்ள நிலையில், இலங்கை அணி எதிர்வரும் 15ஆம் திகதி ஜப்பான் புறப்பட்டுச் செல்கின்றது.
இம்முறை இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு 4 வீரர்களும், 5 வீராங்கனைகளும் தகுதிபெற்றுள்ளனர்.
அதேபோல, இலங்கை வீரர்களுடன் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 17 பேர் டோக்கியோ செல்லவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
மூன்றாவது தடவையாக ஒலிம்பிக் செல்கிறார் நிலூக கருணாரத்ன
இதன்படி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் குதிரைச் சவாரி, ஜிம்னாஸ்டிக், துப்பாக்கி சுடுதல், பெட்மிண்டன், ஜூடோ, நீச்சல் மற்றும் மெய்வல்லுனர் ஆகிய 7 விளையாட்டுகளில் இலங்கை பங்கேற்கிறது.
இலங்கையின் நட்சத்திர பெட்மிண்டன் வீரரான நிலூக கருணாரத்ன, மூன்றாவது தடவையாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் களமிறங்கவுள்ளார்.
முன்னதாக இவர் 2012 லண்டன் மற்றும் 2016 றியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் இலங்கை சார்பாகப் போட்டியிட்டதுடன், இலங்கை அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, டோக்கியோ ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் ஜப்பான் நாட்டு அரசின் விசேட அழைப்பின் பேரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவரும், சுவீடனில் வசித்து வருகின்றவருமான மெதில்டா கார்ல்சன் குதிரைச் சவாரி போட்டியில் களமிறங்கவுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் குதிரைச் சவாரிப் போட்டியில் பங்குபற்றும் முதல் இலங்கையர் இவர் ஆவார்.
இதனிடையே, தேசிய கனிஷ்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான 18 வயதுடைய மில்கா டி சில்வா, பெண்களுக்கான கலைத்துவ ஜிம்னாஸ்டிக் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
இந்த நிலையில், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் டெஹானி எகொடவெலவும், ஆண்களுக்கான ஜூடோவில் சாமர நுவன் தர்மவர்தனவும் பங்குபற்றுகின்றனர்.
இவர்களுடன் நீச்சல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க 100 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியிலும், அனிக்காஹ் கபூர் பெண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியிலும் களமிறங்கவுள்ளனர். s
இவர்கள் இருவரும் வைல்ட் கார்ட் முறையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இவர்கைள விட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டரில் யுபுன் அபேகோனும், பெண்களுக்கான 800 மீட்டரில் நிமாலி லியனஆராச்சியும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார் நிமாலி
இதேவேளை, டோக்கியோ ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் இலங்கை தேசிய கொடியை சாமர நுவனும், மில்கா டி சில்வாவும் ஏந்திச் செல்லவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எனவே, ஓலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இதுவரை 2 வெள்ளிப் பதக்கங்களை மாத்திரம் வெற்றி கொண்டுள்ள இலங்கை 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் கனவோடு களமிறங்குகின்றது.
22 மில்லியன் இலங்கையர்களின் 20 வருட கனவை இம்முறை எமது ஒலிம்பிக் நட்சத்திரங்கள் நிறைவேற்ற வேண்டும் என நாங்களும் பிரார்த்தனை செய்வோம்.
ஒலிம்பிக் செல்லும் இலங்கை அதிகாரிகள்
காமனி ஜயசிங்க – இலங்கை ஒலிம்பிக் குழுவின் தலைமை அதிகாரி.
விங் கமாண்டர் (ஓய்வுநிலை) சந்தன லியனகே – ஊடக இணைப்பாளர்.
டொக்டர் ஹிமன் டி சில்வா. – கொவிட்-19 இணைப்பதிகாரி.
ஹன்சிகா விஜயகுணவர்தன – நிருவாக உத்தியோகத்தர்.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க…