சம்பியன் பட்டத்தினை தொடர்ந்து தக்கவைக்குமா மேற்கிந்திய தீவுகள்??

225

T20 உலகக் கிண்ணத்தொடரில் நடப்புச் சம்பியனாக இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தில் சுபர் 12 சுற்றில் குழு 1 இல் நேரடியாக ஆடுகின்றது.

வரலாறு

T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் 2012 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த தொடரின் நடப்புச் சம்பியனாகவும் காணப்படுகின்றது.

>>T20 உலகக்கிண்ணத்தில் அதிர்ச்சிக்கொடுக்க காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்

அதேநேரம் T20 உலகக் கிண்ணத்தினை அதிக தடவைகள் வெற்றி கொண்ட அணியாகவும் உள்ள மேற்கிந்திய தீவுகள், தொடரினை இந்த ஆண்டு வெல்வதற்கு எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

கடந்த காலப்பதிவுகளை நோக்கும் போது T20 உலகக் கிண்ணத் தொடர்களில் 31 போட்டிகளில் ஆடியுள்ள மேற்கிந்திய தீவுகள் அதில் 17 போட்டிகளில் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, 12 போட்டிகளில் தோல்வியினையும் பதிவு செய்திருக்கின்றது. இதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணி ஆடிய ஒரு போட்டி சமநிலையிலும், ஒரு போட்டி முடிவுகள் எதுவுமின்றியும் நிறைவடைந்திருக்கின்றன.

தயார்படுத்தல்கள்

மேற்கிந்திய தீவுகள் அணியினைப் பொறுத்தவரை அவ்வணி T20 போட்டிகளுக்கான சிறப்புவீரர்களினை கொண்ட ஒரு தொகுதியாக காணப்படுகின்றது. அவ்வணி T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடரினை பறிகொடுத்த போதும், அணியின் வீரர்கள் கரீபியன் பிரிமியர் லீக், இந்திய பிரிமீயர் லீக் என அண்மையில் நிறைவடைந்த உள்ளூர் T20 லீக்குகளில் அபார திறமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.

தயார்படுத்தல்கள் ஒரு பக்கமிருக்க, மேற்கிந்திய தீவுகள் T20 போட்டிகள் என வரும் போது எப்போதும் பலமிக்க துடுப்பாட்ட வரிசையினை கொண்ட ஒரு அணியாகவே காணப்படுகின்றது.

அணிக்குழாம்

இந்த T20 உலகக் கிண்ணத்தில் சகலதுறைவீரர் கீய்ரோன் பொலார்ட் மூலம் வழிநடாத்தப்படவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்துறையினை நோக்கும் போது அவ்வணிக்கு முன்வரிசையில் துடுப்பாட்ட பலம் வழங்கும் வீரர்களாக நிகோலஸ் பூரன், லென்டல் சிம்மோன்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் போன்ற வீரர்கள் காணப்படுகின்றனர்.

>>முதல் T20 உலகக் கிண்ணத்தை குறிவைத்துள்ள தென்னாபிரிக்கா

இதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணியின் மத்திய வரிசை ரொஸ்டன் சேஸ், அதிரடி சகலதுறைவீரரான அன்ட்ரே ரசல் மற்றும் டிவெய்ன் பிராவோ ஆகியோருடன் பலம் பெறுகின்றது.

அதோடு அணியின் பந்துவீச்சுத்துறையானது ரவி ராம்போல், ஒசானே தோமஸ், பிரதியீட்டு வீரராக அணிக்குள் நுழைந்த வேகப்பந்துவீச்சாளர் அகில் ஹொசைன் போன்றோரினால் பலப்படுத்தப்படுகின்றது.

>>T20 உலகக் கிண்ணத்திலிருந்து விலகும் பேபியன் அலென்

எதிர்பார்ப்பு வீரர்கள்

கிறிஸ் கெயில் – எதிர்பார்க்கப்படுவதன் அடிப்படையில் 90களில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அறிமுகமான கிறிஸ் கெயில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆடும் பிரியாவிடை T20 உலகக் கிண்ணமாக இந்த T20 உலகக் கிண்ணம் கருதப்படுகின்றது.

அதேநேரம் கிறிஸ் கெயில் T20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகவென இந்திய பிரீமியர் லீக் போட்டிகளில் இருந்தும் பாதியிலேயே விலகியிருந்தார்.

எனவே தனது ஓய்வுக்கு முன்னர் கிறிஸ் கெயில், மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆடும் இந்த T20 உலகக் கிண்ணத்தொடரில் அவரினது சிறப்பு ஆட்டத்தினை வெளிப்படுத்த எதிர்பார்க்க முடியும்.

அன்ட்ரூ ரசல்

T20 உலகக் கிண்ணத்தில் ஆடும் வீரர்களின், T20 போட்டி அனுபவங்களினை கருதும் போது அன்ட்ரூ ரசலே அதிக அனுபவம் கொண்ட வீரர்களில் ஒருவராக காணப்படுகின்றார்.

உலகின் அனைத்து வகையான உள்ளூர் T20 லீக்குகளிலும் ஆடியுள்ள அன்ட்ரூ ரசல், தனது அனுபவத்தின் வெளிப்பாட்டினை இந்த T20 உலகக் கிண்ணத்தில் காட்டுவதனை அவதானிக்க முடியும். அதேநேரம், அன்ட்ரூ ரசல் துடுப்பாட்டவீரராக Settle ஆகும் சந்தர்ப்பங்களில் மேற்கிந்திய தீவுகள் அணி, இமாலய ஓட்டங்களை இந்த T20 உலகக் கிண்ணத்தில் பெறுவதனையும் அவதானிக்க முடியும்.

அணிக்குழாம்

கீய்ரொன் பொலார்ட் (அணித்தலைவர்), நிகோலஸ் பூரன், அகில் ஹொசைன், டிவெய்ன் பிராவோ, ரொஸ்டன் சேஸ், அன்ட்ரே பிளச்சர், கிறிஸ் கெயில், சிம்ரோன் ஹெட்மேயர், ஈவின் லூயிஸ், ஒபெட் மெக்கோய், ரவி ராம்போல், லென்டல் சிம்மோன்ஸ், அன்ட்ரே ரசல், ஒசானே தோமஸ், ஹேய்டன் வேல்ஸ்

இறுதியாக

தீடிர் திருப்பங்களை ஏற்படுத்தும் மேற்கிந்திய தீவுகள் மிகவும் பலமிக்க வீரர்கள் கொண்ட தொகுதியாகவே இந்த T20 உலகக் கிண்ணத்தில் மேற்கிந்திய தீவுகள் களமிறங்குகின்றது.

ஆனால், T20 உலகக் கிண்ணத்தில் இந்தமுறை மேற்கிந்திய தீவுகள் அணி அதிர்ச்சிகரமான முடிவுகளையும் வெளிப்படுத்த முடியும். எனவே, என்ன நடைபெறுகின்றது என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேற்கிந்திய தீவுகளின் போட்டிகள்

எதிர் இங்கிலாந்து – ஒக்டோபர் 23

எதிர் தென்னாபிரிக்கா –  ஒக்டோபர் 26

எதிர் பங்களாதேஷ் – ஒக்டோபர் 29

எதிர் இலங்கை – நவம்பர் 2

எதிர் அவுஸ்திரேலியா – நவம்பர் 6

<<மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு>>