உலக கனிஷ்ட மெய்வல்லுனருக்கான இலங்கை அணி அறிவிப்பு

193

பின்லாந்தின் தம்பரே நகரில் எதிர்வரும் ஜுலை மாதம் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 17ஆவது உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் (20 வயதுக்குட்பட்ட) பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா கடந்த வாரம் வழங்கினார்.

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்த இலங்கை

18 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்…

இதன்படி, இம்முறை உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரில் இலங்கையிலிருந்து ஐந்து வீரர்கள், ஆறு வீராங்கனைகள் என 11 பேர் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன், இம்முறை போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியில் 4X400 அஞ்சலோட்டத்திற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் என வெவ்வேறு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. இவ்விரண்டு அணிகளும் அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த மே மாதம் நிறைவுக்கு வந்த மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் மற்றும் கடந்த மாதம் ஜப்பானின் கிபு நகரில் நடைபெற்ற 18ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர் ஆகியவற்றில் திறமைகளை வெளிப்படுத்தி உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கான அடைவுமட்டங்களை பூர்த்தி செய்த மற்றும் பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கே இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு வழங்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

வீரர்களுக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களுக்கு அரசினால் வரி நிவாரணம் – ஜனாதிபதி உறுதி

விளையாட்டுத்துறையில் திறமைகளை..

இதன்படி, இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர்  சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை சார்பாக மூன்றுக்கு மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்று தனிநபர் போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியவரும், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய ஆசிய மற்றும் இலங்கை சாதனைகளுடன் தங்கப் பதக்கத்தை வென்ற அக்குரம்பொட வீரகெப்பெடிபொல தேசிய கல்லூரி மாணவன் அருண தர்ஷன, பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் முதன்மை வீரராக இடம்பெற்றுள்ளார்.

அது மாத்திரமின்றி ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.79 செக்கன்களில் ஓடிமுடித்த அருண தர்ஷன, உலக கனிஷ்ட வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், பெண்களுக்கான மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தெற்காசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 400 மற்றும் 800 மீற்றரில் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்ற  வலள ரத்னாயக்க கல்லூரி மாணவி டிலிஷி ஷியாமலி குமாரசிங்க, தெற்காசியவின் அதிவேக வீராங்கனையாக, அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற கண்டி, சுவர்ணமாலி மகளிர் கல்லூரி மாணவி அமாஷா டி சில்வா ஆகிய வீராங்கனைகளும் உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக, இலங்கை 4X400 அஞ்சலோட்ட குழாத்தில் இடம்பெற்றுள்ள இம்மூன்று வீரர்களும் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் போதே பின்லாந்தில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கான தனிநபர் அடைவு மட்டத்தைப் பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 3,000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி மாணவி பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, இலங்கை அணிக்காக தனிநபர் போட்டிகளில் பங்குபற்றவுள்ள மற்றுமொரு வீராங்கனை ஆவார்.

இந்நிலையில், உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் இடம்பெற்றுள்ள ஏனைய ஏழு வீரர்களும் இலங்கை 4X400 அஞ்சலோட்ட அணி உறுப்பினர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

எனினும், இலங்கை அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ள அருண தர்ஷன, பசிந்து கொடிகார மற்றும் டிலிஷி குமாரசிங்க ஆகிய வீரர்களைத் தவிர ஏனைய வீரர்களுக்கான விசேட பரீட்சாத்த போட்டியொன்றை எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ந்தும் இலங்கை அணியின் தலைவராக லக்மால்

காலியில் வரும் (ஜூலை) 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள…

இதேவேளை, உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, எதிர்வரும் 8ஆம் திகதி பின்லாந்து நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளது.  

இதுவரை நடைபெற்ற உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரின் 16 அத்தியாயங்களிலும் இலங்கை வீரர்கள் எந்தவொரு பதக்கத்தையும் வென்றிருக்கவில்லை. எனவே, அண்மையில் நிறைவுக்குவந்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததால் இம்முறை உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் அவர்கள் சாதனை படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் தொடருக்கான இலங்கை குழாம்

பெயர் போட்டி பாடசாலை
அருண தர்ஷன 400, 4x400 அங்குரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய கல்லூரி
பசிந்து கொடிகார 4x400 குருநாகல் மலியதேவ கல்லூரி
ரவிஷ்க இந்திரஜித் 4x400 கொட்டாஞ்சேனை புனித பெனெடிக்ட் கல்லூரி
பபசர நிக்கு 4x400 கொழும்பு நாலந்த கல்லூரி
ஹர்ஷ கருணாரத்ன 4x400 வலள ஏ ரத்னாயக்க கல்லூரி
அமாஷா டி சில்வா 100,4x400 கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரி
டிலிஷி குமாரசிங்க 800, 4x400 வலல்ல ரத்னாயக்க கல்லூரி
பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா 3000 மீற்றர் தடைதாண்டல் குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி
ருமேஷி அத்திடிய 4x400 நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலை
சச்சினி திவ்யான்ஞலி 4x400 வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை
சதுமினி பண்டார 4x400 கேகாலை புனித ஜோசப் கல்லூரி

இலங்கை அணியின் அதிகாரிகள்

ஜி.எல்.எஸ் பெரேராமுகாமையாளர்

ஜனித் ஜயசிங்க, கே. டி பண்டார, அசங்க ராஜகருணா, எஸ்.டி சில்வா – பயிற்றுவிப்பாளர்கள்

சுனேத்ரா கருணாரத்ன பெண்கள் அணி பொறுப்பாளர்

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<