தாய் நாட்டில் தனது கன்னி போட்டியில் ஆடுவதில் ஆர்வம் கொண்டுள்ள ரொஷேன்

886

மூன்று வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் பின்னர், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான ரொஷேன் சில்வாவுக்கு தாய் நாட்டில் அவருடைய கன்னி சர்வதேச போட்டியில் விளையாடும் சந்தர்ப்பம் நாளை (12) காலியில் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் மூலம் கிடைக்கவிருக்கின்றது.

தென்னாபிரிக்க – இலங்கை அணிகள் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் பயிற்சிகளில் சீரற்ற காலநிலை காரணமாக இன்று ஈடுபடவில்லை. எனினும், நிலைமைகள் எவ்வாறு அமைந்த போதிலும் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முழு நம்பிக்கையுடன் உள்ளதாக ரொஷேன் சில்வா குறிப்பிட்டிருந்தார்.

மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால்

“நான் மிகவும் எதிர்பார்ப்புக்களுடன் உள்ளேன். கடந்த டிசம்பர் மாதம் நான் எனது கன்னி (சர்வதேச) போட்டியில் ஆடியிருந்த போதிலும், எனது தாய் நாட்டில் இன்னும் விளையாடவில்லை. எனது அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்ய விரும்புகின்றேன். எனது அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த அதிகபட்ச உதவிகளை செய்ய விரும்புகின்றேன்“ என ரொஷேன் சில்வா தெரிவித்திருந்தார்.

நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் உடனான டெஸ்ட் தொடரில் சில்வா எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சுகளில் துடுப்பாடிய அவர் மொத்தமாக 85 ஓட்டங்களினையே குவித்திருந்தார். ரொஷேன் சில்வா மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் மிகவும் சிரமத்தினை காட்டியிருந்ததோடு, வேகப்பந்து வீச்சாளர்களினால் ஐந்து தடவைகள் ஆட்டமிழப்புச் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இப்படியாக மேற்கிந்திய தீவுகளில் சோபிக்காது போனமை பற்றி சில்வாவின் கருத்து இவ்வாறு அமைந்திருந்தது.

“மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கு முன்னர் நான் கடுமையாக பயிற்சிகளுடன் உழைத்திருந்தேன். அத்துடன் மாகாண ரீதியில் இடம்பெற்ற முதல்தர கிரிக்கெட் தொடரிலும் 500 இற்கு மேலான ஓட்டங்களை பெற்றிருந்தேன். அந்தவகையில் மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடருக்கு நான் மனரீதியில் மிகவும் ஆயத்தமாக இருந்தேன். எனினும், (மேற்கிந்திய தீவுகளில்) எங்களுக்கு எந்தவகையிலும் எதிர்பார்க்காத சவால்கள் காத்திருந்தன. எங்களது தலைமை பயிற்றுவிப்பாளர், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர், அணித்தலைவர் ஆகியோர் கடந்த 10 அல்லது 15 வருட காலங்களுக்குள் அவர்கள் பார்த்த மிகவும் கடினமான ஆடுகளங்களாக (மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளங்களை) வகைப்படுத்தினர். அத்துடன் எமது தலைமைப் பயிற்றுவிப்பாளர் அந்த டெஸ்ட் தொடரை அவர் வாழ்வில் சந்தித்த மூன்று கடினமான தொடர்களில் ஒன்றாக வகைப்படுத்தினார்.  நாங்கள் முதல் டெஸ்ட்டில் தோல்வியை சந்தித்த பின்னர், அவர்கள் சாதாரண வெளிச்சத்தின் கீழ் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியிலும், பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளங்களில் (வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்ற) அதிகமான புற்களை வைத்திருந்தனர்“

இலங்கைக்கு வந்திருக்கும் தென்னாபிரிக்க அணியும் டேல் ஸ்டெய்ன், ககிஸோ றபாடா, லுங்கி ன்கிடி போன்ற அதிக திறன் கொண்ட வேகப்பந்து வீச்சாளர்களை தம்மிடையே கொண்டிருக்கின்றது. எனவே, மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடர் போன்று இலங்கை அணியின் துடுப்பாட்டத்துறை தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களினால் மீண்டும் ஒரு தடவை பரிசோதிக்கப்படவுள்ளது.

இலங்கையின்  ஆடுகளங்கள் பொதுவாக சுழல் பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும். எனவே, தென்னாபிரிக்க அணி தமது வேகப்பந்து வீச்சாளர்களின் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகள் மூலம் இலங்கையின் விக்கெட்டுக்களை இந்த டெஸ்ட் தொடரில் சாய்க்க அதிகம் எதிர்பார்க்கின்றது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு

இறுதியாக நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்த தென்னாபிரிக்கா, காலியில் நடைபெற்றிருந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியினரை டேல் ஸ்டெய்ன், மோர்னே மொர்க்கல் ஆகியோரின் வேகப்பந்து வீச்சினால் 153 ஓட்டங்களால் அதிரடியாக தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன போன்ற அனுபவ வீரர்கள் இருந்தும் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களை இலங்கைக்கு ஈடுகொடுக்க முடியாமல் போயிருந்தது.

ரொஷேன் சில்வா தென்னாபிரிக்க அணியின் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை கையாள்வது தொடர்பில் பேசும் போது “நாங்கள் இதற்கான (ரிவர்ஸ் பந்துகளை கையாள்வதற்கான) வேலைகளில் ஈடுபட்டுவருகின்றோம். அது எங்களுக்கு ஒரு சவாலாக இருக்கப் போகின்றது. எனவே, நாம் அந்த சவாலுக்காக தயராகி வருகின்றோம்“ எனக் குறிப்பிட்டு தென்னாபிரிக்காவின் ரிவர்ஸ் ஸ்விங் சவாலை எதிர்கொள்ள முழுமையான தயார் நிலையில் உள்ளதாக கூறியிருந்தார்.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரில் சாதிக்காது போயிருந்தாலும், இலங்கையில் நடைபெறப் போகும் போட்டியில் சிறப்பாக செயற்பட அதிக முனைப்பு காட்டும் ரொஷேன் சில்வா, இலங்கை அணி முகாமைத்துவம் விரும்பினால் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் களமிறங்க தன்னால் முடியும் எனவும் கூறியிருந்தார்.

“எனக்கு அதில் எந்த அழுத்தங்களும் கிடையாது. என்னிடம் அணி (முகாமைத்துவம்) கூறினால் எனக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வர முடியும். அவர்கள் என்னிடம் பின் வரிசையில் வந்து துடுப்பாட சொன்னாலும் என்னால் அதனை செய்ய முடியும்.  அணிக்கு எது தேவையாக இருக்கின்றதோ அதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்“ என்று ரொஷேன் சில்வா குறிப்பிட்டிருந்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<