26 வயது நிரம்பிய இங்கிலாந்து அணியின் மத்திய தர வரிசை துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் டெய்லர் இருதயத் தசை நோய் காரணமாக தனது கிரிக்கட் வாழ்கையை நிறைவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இருதய பரிசோதனைக்கு ஜேம்ஸ் டெய்லர் உட்படுத்தப்பட்டிருந்தார். அந்த பரிசோதனையின் முடிவு படி ஜேம்ஸ் டெய்லர் ARVD என்று அழைக்கப்படும் இருதயத் தசை நோயால் பீடிக்கபட்டுள்ளார்.
இது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கட் அணியின் நிர்வாகஸ்தர் என்ட்ரிவ் ஸ்ட்ரோஸ் கூறுகையில் “ஜேம்ஸ் டெய்லர் இந்த நிலைக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சி மற்றும் கேட்கக் கவலையான விடயமாக உள்ளது. டெய்லரின் கிரிக்கட் வாழ்க்கை திடீரென எதிர்பாராத முறையில் குறுகிய காலத்தில் குறைக்கப்பட்டிருக்கிறது. அணிக்காக கடுமையாகப் போராடி விளையாடும் வீரர், இவரது இடத்தை நிரப்புவது இலகுவான விடயம் அல்ல” என்று கூறியுள்ளார்.
அவர் உள்ளூரில் விளையாடும் கிரிக்கட் கழகமான நொடிங்ஹெம்சயார் கழகத்தின் நிர்வாகஸ்தர் மைக் நெவெல் இது தொடர்பில் பேசுகையில் “நான் ஜேம்ஸ் டெய்லரின் அணியினர் மற்றும் சக வீரர்கள் இந்த செய்தியைக் கேட்க மிக சோகமாக இருக்கிறது, இது எமக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறியுள்ளார்.