இந்தியாவில் இம்மாதம் நடைபெறவுள்ள IPL ஏலத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களின் இறுதிப்பட்டியலை IPL நிர்வாகம் இன்று (13) செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
IPL ஏலத்துக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக 991 வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்திருந்த நிலையில் அதிலிருந்து 405 வீரர்கள் மாத்திரமே ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
IPL ஏலத்தில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு 2 கோடி!
ஆரம்பத்தில் IPL தொடரில் விளையாடவுள்ள 10 அணிகளும் 369 வீரர்கள் ஏலத்துக்காக தெரிவுசெய்திருந்தன. அதனைத்தொடர்ந்து மேலும் 36 வீரர்களின் பெயர்களை ஏலத்துக்கு எடுத்துக்கொள்ளுமாறு அணிகள் கோரிக்கை விடுக்க, மொத்தமாக 405 வீரர்கள் ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.
இதில் மொத்தமாக 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐசிசியின் முழு அங்கத்துவத்தை பெறாத நாடுகளிலிந்து 4 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இலங்கை அணியைச் சேர்ந்த 23 வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்ததுடன், அதிலிருந்து 10 வீரர்கள் மாத்திரமே ஏலத்துக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 2 கோடியை நிர்ணயித்திருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ஒரு கோடியை நிர்ணயித்திருந்த குசல் பெரேரா ஆகியோர் இறுதி ஏலப்பட்டியலில் இடம்பெறவில்லை.
இவர்கள் இருவரையும் தவிர்த்து இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக, குசல் மெண்டிஸ், பெதும் நிஸ்ஸங்க, துஷ்மந்த சமீர, தனன்ஜய டி சில்வா, துனித் வெல்லாலகே, டில்ஷான் மதுசங்க, லஹிரு குமார, சாமிக்க கருணாரத்ன மற்றும் சரித் அசலங்க ஆகிய 10 வீரர்கள் இம்முறை ஏலத்தில் இடம்பெறவுள்ளனர். மேற்குறித்த வீரர்கள் அனைவரும் 50 இலட்சம் ரூபாவை (இந்திய ரூபாய்) நிர்ணயத்தொகையாக அறிவித்துள்ளனர்.
இந்தியாவின் கொச்சியில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள IPL ஏலத்தில் 87 வீரர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 30 வெளிநாட்டு வீரர்களுக்கான வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<